Header Ads



வடக்கு - கிழக்கு இணைப்பு இடம்பெறலாம் - சம்பந்தன்

இடைக்கால அறிக்கையில் சமஸ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும் சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) இடம்பெற்றபோது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லிம் மக்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்து பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது. அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றிணையவேண்டும். தந்தை செல்வாவின் கருத்துக்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சார்பாகவே இருந்தது, அதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

செல்வா - பண்டா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி டட்லி செல்வா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றே உள்ளது.

ஆகவே வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைத்து ஒருவரின் உரிமையை ஒருவர் மதித்து நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும்.

இடைக்கால அறிக்கையில் இணைப்பு இடம்பெறலாம். இடம்பெறாமல் இருக்கலாம் இணைப்பு நடைபெறுவதாக இருந்தால் சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறவேண்டும் என்ற 3 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சமஸ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அது சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

சமஸ்டிக்கு பொருத்தமான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மத்தியிலும் மாகாணத்திலும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.

எனவே அதில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அது தொடர்பில் நாம் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் இதை தூக்கி எறிந்து விட்டு இதில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலை தற்போது இல்லை.

இதை தொடர்ந்து எமக்கு ஏற்புடையதாக மக்களுக்கு ஏற்புடையதாக மாற்றவேண்டியது எமது பொறுப்பு. ஆகவே அந்த பொறுப்பை நிறைவேற்றாமல் கவனயீனமாக இருக்கமுடியாது என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. வடக்கும் கிழக்கும் இணைவதில் கிழக்கில் வாழ் முஸ்லிம்களில் 95% விருப்பம் இல்லை. எனவே இணைந்த தேசத்தின் பிரதான இனத்தொகுதியின் விரும்பம் இன்றி ஆட்சி அமைப்பது மற்றொரு பிரிவினைவாதத்துக்கு வழிகோலும் என அற்பனான நான் கருதுகிறேன் பெரியவர் அவா்களே. உங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இதுபோன்ற ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு எப்படி நீங்கள் மரணித்தபின் அலலாஹ்வைச் சந்திக்கப் போகின்றீர்கள். மீண்டும் ஆழமாக யோசியுங்கள் பெரியவர் அவர்களே.

    ReplyDelete

Powered by Blogger.