Header Ads



அப்பாவிகளான முஸ்லிம்கள், தலைமைகளினால் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள் - கருணா

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இரு பகுதியிலும் இழப்புகள் ஏற்பட்டன. எனது மூத்த சகோதரனையும் (லெப்டினட் கேணல் ரெஜி) இழந்துவிட்டேன். கடந்த காலத்தை பற்றி பேச விரும்பவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்தார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“விடுதலைப்புலிகளுடனான போர்க் காலத்தில் பல சம்பவங்கள் நடந்தன. இதற்கு இரு தரப்பினரும் பதில் கூற வேண்டும். தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளும் பொது மக்களை படுகொலை செய்தார்கள். இதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

எனினும் இந்த போரில் நான் தனிப்பட்ட ரீதியாக ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். இந்த விஷயங்களை நினைத்து நான் வருந்துகிறேன்.

கடந்த காலத்தை தோண்டி எடுக்க நான் விரும்பவில்லை. கடந்த காலம் கடந்துவிட்டது. நானும் நிறைய இழந்தேன். நான் என் சகோதரனையும் இந்த போரில் இழந்தேன். அவரை என்னால் திரும்பப் பெற முடியாது.

விடுதலைப்புலிகளுடன் நான் இருந்த காரணத்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. விடுதலைப்புலிகளோ, அரசாங்கமோ வெற்றி பெற்றிருக்காது.

எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நான் பிரிந்து வந்தவுடன் அவர்களை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் எனது உதவியை நாடியது. இதை நான் ஒரு வாய்ப்பாக கருதுகின்றேன்.

அத்துடன் நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம் மக்களுக்கும் எமக்கும் சில பிரச்சினைகள் காணப்பட்டதாக கருத்துக்கள் காணப்படுகின்றன.

முஸ்லிம் மக்கள் அப்பாவிகள். முஸ்லிம் மக்களை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் முஸ்லிம் தலைமைகளினால் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள்.”

மேலும், “விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து, பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து, இப்போது, சொந்த கட்சியை அமைத்தமைக்கான காணரம் என்ன?” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில்,

“நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். இன்று தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கருதப்படுகின்றது. ஆனால் அது உண்மை இல்லை.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தற்போது சிதறிவிட்டது. அவர்கள் மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் அரசியல் தீர்விலோ அல்லது அபிவிருத்திகளிலோ மக்களுக்கு எந்தவித பயனும் செய்யவில்லை.

இந்த நிலையில் நான் புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு முன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடினேன்.

அதன்பின்பே புதிய கட்சியை உருவாக்கினேன். நான் யாரையும் எதிர்த்து நிற்கவில்லை. அதேநேரம் இனவாதத்தையும் ஆதரிக்கவில்லை.” எனவும் கருணா தெரிவித்தார்.

1 comment:

  1. exactly, he claims "innocent Moslims" that means you had been beast on
    those innocent Jaffna Muslims. talk something practical. one of the biggest crime our country did was bringing you to parliament instead of
    putting you behind bars, for life.

    ReplyDelete

Powered by Blogger.