Header Ads



48 மணித்தியாலங்களில் ஜனாதிபதி மாளிகையிலும், அலரி மாளிகையிலும் நடந்தது என்ன..??

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையிலிருந்து இடைநடுவில் வெளியேறிய விவகாரம், அரசியலில் பெரும் சூடுபிடித்திருந்த நிலையில், கோபம் கொண்டு கொதித்தெழுந்தே ஜனாதிபதி வெளியேறினார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இயற்கை உபாதை காரணமாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​இடையில் எழுந்துச்சென்றார் என்றும் பின்னர் திரும்பிட்விட்டாரென்றும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை இணைப்பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரண்டு அமைச்சர்களுமே இவ்வாறு தெரிவித்தனர்.

எனினும், மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தமைக்கான தகவல்கள் ​வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி வெளிநடப்பு செய்ததையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் பறிதவித்து போய்விட்டனர். தந்தையொருவர் பிள்ளைகளை தன்னந்தனியே தவிக்கவிட்டுவிட்டு, சென்றுவிட்டார் என்பதை போல இருந்ததாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பேசிகொண்டிருந்துள்ளனர்.

எனினும், அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் தலைமையேற்று நடத்தியிருக்கலாம் எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துவரும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கினார்.

பிரதமரின் அந்தச் செயற்பாட்டை, அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டொரு, கலந்துரையாடல்களில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்கள் வெகுவாக பாராட்டியும் உள்ளனர்.

கோபம் கொண்ட ஜனாதிபதி அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு, பிரதானமான காரணமாக, மற்றொரு காரணமும் கூறப்படுகின்றது.

அதாவது,  ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் சிலர், கடந்தவாரம் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன​வை சந்தித்துள்ளனர்.

அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள், பிணைமுறி விவகாரம் ​தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதமர் ஆகியோரை இலக்குவைத்துள்ளது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக, இவ்வாறான கருத்துகளின் ஊடாக தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிக்கப்படுமாயின், பிரதமர் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என சுட்டிக்காட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள், “அரசாங்கம் துண்டாகும்” என்ற சேதியையும் சொல்லிவிட்டு வந்ததாகவே அந்த தகவல் தெரிவித்தது. 

“அரசாங்கம் துண்டாகும்” என்ற சேதிதான், ஜனாதிபதியின் கோபத்துக்கு பிரதான காரமாக அமைந்திருந்தது என அறியமுடிகின்றது. என்றாலும், தேசிய அரசாங்கம் என்பது கீறியையும் பாம்பையும் ஒரே கூண்டுக்குள் அடைத்தது போன்றதாகும் என்ற விளக்கத்தை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனரத்ன கூறியிருப்பது, இவ்வாறான அர்த்தத்திலா என்பதும் சிந்திக்கவேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.


அமைச்சரவையிலிருந்து ஜனாதிபதி வெளிநடப்பு செய்திருக்க கூடாதென்றும், அது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுவதாகவே அமைந்துள்ளதென, பரவலாக பேசப்பட்டும் உள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றிருந்தோம். இவ்வாறான நிலையில், அவர் எழுந்துச் சென்றமையானது “ பிள்ளைகளை தந்தையொருவர் தத்தளிக்க விட்டுவிட்டு சென்றதை போன்றது” என சுதந்திரக் கட்சியினர் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சந்தித்த ஐ.தே.கவின் அமைச்சர்கள், அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து நீங்கள் நடத்தியிருந்திருக்கலாம். எனினும், அவ்வாறு செய்வது ஒழுக்கமானது அல்ல. நீங்கள் அவ்வாறு செய்யாதது பெறுமதியானது. மதிக்கத்தக்கது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, பாராட்டியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

பிரதமரை சிலர் பாராட்டினாலும், ”பிரதமர் ஒன்றுக்கும் இயலாதவர்” என சிலர் தூற்றுகின்றனர் என்றும் இன்னும் சிலர் எடுத்துகூறியுள்ளனர். புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் எவ்விதமான பதிலையும் அளிக்காது பிரதமர் செவிசாய்த்துகொண்டிருந்துள்ளார்.

அந்த அமைச்சரவை கூட்டத்தில் ஐ.தே.கவினரை கடுமையாக சாடிய ஜனாதிபதி, ஐ.தே.வினர் பதிலளிப்பதற்கு முன்னரே எழுந்து, வேறொரு அறைக்குச் சென்றுவிட்டார். அப்​போது, பிரதமரும் ஐ.தே.க அமைச்சர்களும் அறை, அறையாக தேடி தேடி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே, என அங்கிருந்த இன்னும் சிலர் வினவுகையில், அதற்கும் பதிலளிக்காமல் பிரதமர் சிரித்துகொண்டே இருந்துள்ளார்.

அது என்னமோ தெரியாது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னை புகழ்ந்தபோதும், இகழ்ந்த போதும் எதுவுமே கூறாது, வித்தியாசமாகவே நேற்றையதினம் (18) நடந்துகொண்டாரென அறியமுடிகின்றது. ஏனைய நாட்களில் என்றால், கலகலப்பாகவும், வித்தியாசமான முறையிலும் ஏதாவது கூறுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

“ஜனாதிபதி வெளிநடப்பு செய்தபோது, எங்களை விடவும். சுதந்திரக் கட்சியினரே அநாதைகள் போல இருந்தனர்” என ஐ.தே.க முக்கியஸ்தர்கள் சிலர் கூறியபோது, பிரதமர் எந்தவிதமான பதிலையயும் அளிக்காது தலைமைய மட்டுமே ஆட்டியுள்ளார்.

எனினும், மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய கூறிய விடயத்தை, நேற்றை சந்திப்பில் பங்கேற்றிருந்த ஐ.தே.கவைச் சேர்ந்த சிலர், பிரதமரின் காதுகளுக்குள் போட்டுவைத்தமைதான் அங்கிருந்த சகலரையும் வியப்படை வைத்திருந்து.

“ உங்களை கைதுசெய்ய இருப்பதனால், தப்பி, நாட்டைவிட்டே தப்பியோடுமாறு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை கூறியிருந்தார். நான், பொய் சொல்லவில்லை. அதேநேரம், கோட்டாபயவோ, மைத்திரியோ அக்கூற்றை மறுக்கவில்லை என்றும் முதலமைச்சர் இசுரு கூறியிருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“கள்வர்கள் மற்றும் மோசடி காரர்களை ஜனாதிபதி பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாகவே, இசுரு கூறியுள்ளார். அதற்கு ஜனாதிபதியும் தலையிட்டுள்ளார். இல்லையா சேர் என, பிரதமரிடம் அவ்விடத்திலிருந்த ஐ.தே.கவின் சட்ட ​ஆலோசகர்கள் புதுமையான விளக்கத்தை கொடுத்துள்ளனர். அதனை அங்கியிருந்த ஐ.தே.கவின் ஆமோதித்துள்ளனர்.

ஐ.தே.கவினரின் விமர்சனம் தொடர்பில் எதிராக பேசிய ஜனாதிபதி, இசுரு தேசப்பிரியவின் கருத்து தொடர்பில் எதனையும் கூறவில்லை என பிரதமரிடம் கேட்டுள்ளனர். அதற்கும் பிரதமர் எவ்விதமா பதிலையும் அளிக்காது புன்முறுவல் பூத்தவாறே இருந்துள்ளார்.

எனினும், வாக்குகளை அள்ளுவதற்கு, மக்களை குழப்பிவிட்டு குழப்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு, மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் என்றும் எடுத்துரைத்தனர். அதுவரையிலும் அமைதியாகவே இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,“ வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து, வாக்குகளை பெறமுடியாது” எனக் கூறிவிட்டு, கண்டியில் நேற்று நடத்தப்பட்ட ஐ.தே.கவின் ​முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்குச் சென்றுவிட்டார்.

-அழகன் கனகராஜ்-

No comments

Powered by Blogger.