January 20, 2018

ரணிலிடமிருந்த அதிகாரத்தை கைபற்றும் ஜனாதிபதி - அவரே பகிரங்க அறிவிப்பு

மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தை தான் பொறுப்பேற்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு...

கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கு இடமளிக்கப்பட்டிருந்தபோதும் இவ்வருடம் முதல் அப்பொறுப்பை தாம் கையேற்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் தேசிய பொருளாதார சபையை அமைத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து மக்களுக்கு நிவராணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். 

இன்று (20) பிற்பகல் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

தேசிய கைத்தொழில், தேசிய உற்பத்தி மற்றும் தேசிய முதலீடு அனைத்தையும் பாதுகாத்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை விட்டுச் செல்லாது தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுமாறு அனைத்து தேசிய கைத்தொழில்த்துறை சார்ந்தவர்களிடமும் முதலீட்டாளர்களிடமும் தான் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். 

இயற்கை வளங்கள் நிறைந்த எமது நாட்டை உலகில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும் இருக்கின்ற ஒரே தடை ஊழல் அரசியலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பயணத்தை தான் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். 

நாட்டின் அனைத்து சமயத் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் நாட்டின் அனைத்து மக்களையும் ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்து இந்த நாட்டை ஊழல் மோசடி இல்லாத உலகின் உன்னத தேசமாக கட்டியெழுப்பும் பயணத்தை இந்த தேர்தல் வெற்றியுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

கேகாலை மாவட்டத்தில் பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்க தயாராகி வருவதாக குறிப்பிடப்படுவது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மாவட்டத்தின் இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்தி கடலைச் சென்றடையும் நீரை உலகில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழாய் வாயிலாக வடக்கிற்கு கொண்டு செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார். 

இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களி்ன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றலுடன் கேகாலை  சந்தை வளாகத்தில் இன்று இடம்பெற்றது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்ட தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, சாந்த பன்டார, அதாவுத செனவிரத்ன, எச்.ஆர்.மித்திரபால, ஆனந்த வில்லங்கொட, அநுருத்த பொல்கம்பொல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

20.01.2018

0 கருத்துரைகள்:

Post a Comment