Header Ads



குவாண்டனாமோ சிறையை மூடும், திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு


கடும் சித்தரவதை நிகழ்த்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்காவின் குவாண்டனாமோ ராணுவ சிறையை மூடும் திட்டத்தை கைவிடுவதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் நிலவரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் உரைபாற்றியபோது, டிரம்ப் தனது முடிவை அறிவித்தார்.

கியூபாவில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த சிறையை மூட விரும்புவதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்ததற்கு மாறாக, இந்த முடிவு வந்துள்ளது.

9/11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது முதல், இந்த சிறை எதிரிப் போராளிகள் என்று அமெரிக்கா குறிப்பிடுவோரை அடைத்துவைக்க அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது இங்கு 41 கைதிகள் மட்டுமே உள்ளனர்.

முதல் முதலில் 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கு கைதிகள் அனுப்பப்பட்டனர். அப்போது முதல் 700க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டனர். குற்றச்சாட்டு அல்லது குற்றவியல் விசாரணை இல்லாமல் பலர் இங்கு இருந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலை திறக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைக்குரியதாக உள்ளது.

ஒபாமா ஆட்சி காலத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் இந்த சிறையில் இருந்து இடம் மாற்றப்பட்டனர். இங்கு கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கு மத்தியில், இங்குள்ள நிலைமை குறித்தும் மனித உரிமை குழுக்கள் புகார் அளித்துள்ளன.

ஒரு வருடத்திற்குள் இந்த சிறையை மூட ஒபாமா நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், கைதிகளை இடம் மாற்றுவது தொடர்பாக எட்டு ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிபந்தனைகளை எதிர்கொண்டது.
இந்நிலையில், இந்த சிறைச்சாலையை மூடுவதைத் தடுத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளதை ஒரு வெள்ளை மாளிகை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

''பயங்கரவாதிகள் வெறுமனே குற்றவாளிகள் அல்ல. அவர்கள் சட்டவிரோத எதிரிப் போராளிகள். வெளிநாடுகளில் அவர்கள் கைது செய்யப்பட்ட அவர்கள் பயங்கரவாதிகள் போலவே நடத்தப்பட வேண்டும்'' என தனது உரையில் டிரம்ப் கூறியுள்ளார்.

''ஆபத்தான தீவிரவாதிகளை மீண்டும் போர்க்களத்தில் சந்திப்பதற்காக, முட்டாள் தனமாக விடுதலை செய்துள்ளோம்'' எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இச்சிறை தொடர்ந்து திறந்து வைத்திருப்பது டிரம்பின் நீண்ட கால கொள்கை. இச்சிறை திறந்திருக்க பிரசாரம் செய்த டிரம்ப், இங்கு சில கெட்ட நண்பர்களை நிரப்ப விரும்புவதாக 2016-ம் ஆண்டு கூறினார்.

No comments

Powered by Blogger.