Header Ads



திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, நகைகளை கொள்ளையிட்டவன் கைது

பத்திரிகைகளில் வெளியாகின்ற திருமண விளம்பரங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதான சந்தேகத்தின்பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பாதுக்கை, மீப்பே பிரதேசத்தில் வைத்து அங்கவல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கிதுலம்பிட்டிய பிரதேசத்தில் வசித்துவரும் 26 வயதுடைய ஹொரகம்லிட பாலகமகே சிதார மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பத்திரிகைகளில் வெளியாகின்ற திருமண விளம்பரங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி தங்க ஆபரணங்களை மோசடி செய்து ஏமாற்றி தப்பிச் செல்லும் சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸாரால் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேக நபர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வசித்துவரும் பெண்ணொருவரிடம் அவரை திருமணம் செய்வதாக கூறி தங்க ஆபரணங்களை பெற்றுக்கொண்டு திரும்ப கையளிக்காத குற்றச்சாட்டிலும், மற்றும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி கலவான பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பிரபல விடுதியொன்றின் உரிமையாளரின் தங்க மாலையை பறித்து சென்ற குற்றச்சாட்டிலும் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இவரை நேற்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போது ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.