Header Ads



உயர் நீதிமன்றத்தில், மகிந்த டீம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹரகம நகர சபை, மஹியங்கனை மற்றும் அகலவத்த பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து அக்கட்சியால் உயர் நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த கட்சியால் மஹரகம நகர சபைக்கு போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கோரப்பட்டிருந்தமையை விட குறைவாக இருந்தமையால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதைச் சவாலுக்குட்படுத்தி அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், அங்கிகரிக்கப்பட்ட முகவரான ஹேவா கோபரகே சந்திரசிறி டி சில்வா ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அவ்வாணைக்குழுவின் அங்கத்தவர்கள் நால்வர், கொழும்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தமயந்தி வணிகசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் மூன்று சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வேட்புமனுவில் பாலினம் குறிப்பிடப்பட்ட வேண்டிய நிரலில், பெண்பாலுக்குப் பதிலாக ஆண்பால் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் இதை சரியாகக் கவனிக்காமல் விட்டமை உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் தவறு என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மஹியங்கனை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் திகதிக்குப் பதிலாக பிழையான திகதி குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகலவத்தை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் பாலினம் குறிப்பிடப்பட வேண்டிய நிரல் பூரணப்படுத்தப்படாமல் விடப்பட்டிருந்ததாகவும் மற்றைய மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மஹியங்கனை மற்றும் அகலவத்தை பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அவ்வாணைக்குழுவின் அங்கத்தவர்கள் நால்வர், ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், ஐ.ம.சு.கூவின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அந்தந்த பிரதேசங்களுக்கான தெரிவத்தாட்சி அதிகாரிகளும் சுயேச்சைக்குழு உறுப்பினர்களும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த மனு தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படும்வரை மூன்று பிரதேசங்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

No comments

Powered by Blogger.