Header Ads



ஷபீக்குக்கும் 'கொழும்பு' சிந்தனை உள்ளவர்களுக்கும்..!!


01. தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அச்செய்திகள் உண்மைதானா இல்லையா என்பதையும் அப்படி நடந்திருந்தால் இன்னும் சில காலங்களில் “வேறு” இடங்களுக்கு பதவியில் அமர்த்தப்படுவீர்களா என்பதையும் அறியாமல் இந்த விடயங்களில் திருப்தி கொள்ள முடியாது.

02. மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்ததற்கு ஆயுத இயக்கங்களில் இளைஞர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பது மட்டும் காரணமல்ல. அரசியல் ரீதியா அநாதைகளாக நாங்கள் இருக்க கொழும்புத் தலைமைகள் எங்களுக்கு எந்த வித நன்மைகளும் செய்யாமல் கைவிட்டதும் எங்களையும் பிரதிநிதிப்படுத்துவதாக நடித்ததும் தேசிய ரீதியான கவனிப்பாரற்ற மக்களாக நாங்கள் இருந்ததும் ஆகும்.

03. அவர் அரசியலில் இறங்கிய போது அவரைக் கடுமையாக எதிர்த்தவர்களும் காரசாரமாகவும் கேவலமாகவும் விமர்சித்தவர்களும் தென் பிராந்திய அரசியல் தலைவர்களும் அவர்களுக்குப் பின்னால் தங்களது வியாபார நலன்களைப் பாதுகாத்துக் கொண்ட வர்த்தகர்களுமாவார்.

04. எங்கள் தலைவர் என்று நீங்கள் குறிப்பிடும் சகோதரர் ரவூப் ஹக்கீம் தங்கக் கரண்டியோடும் தலையில் கிரீடத்தோடும் பிறந்து வந்தவரோ கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பதவியில் அமர்த்தியவரோ இல்லை. அவரும் போராடித்தான் தலைமையைப் பெற்றுக் கொண்டார். அவர் தலைமைக்கு வந்த போது மிகக் குறைந்த தரப்பினரே அவரை விரும்பாதிருந்தனர். ஏனையோர் ஏற்றுக் கொள்ளவே செய்தனர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கிழக்குக்கு வெளியிலான தலைமைத்துவம் என்ற பேச்சே அன்றைக்கு இருக்கவில்லை.

பின்னாளில் கிழக்கு மக்களின் துன்பங்கள் குறித்தும் அரசியல் மற்றும் வாழ்வியல் குறித்தும் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலைகளில் அவரது இயலாத் தன்மைகளை அறிந்து ஒவ்வொருவராக ஒதுங்கத் தொடங்கினரே தவிர அவர் கிழக்குக்கு வெளியிலுள்ள தலைமை என்று சிந்தித்து ஒதுக்கவோ ஆதரவு அளிக்காமல் இருக்கவோ இல்லை.

ஆனால் உங்களைப் போன்றவர்கள்தாம் அங்கிருந்து பெறப்படும் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுப் பதவிச் சுகங்களை அனுபவித்தபடி வெட்கம் இன்றி கிழக்கான் என்வீட்டுத் திண்ணையில் முழங்காலில் கிடப்பான் என்று கேலி பேசுகிறீர்கள்.

05. சுனாமி வந்த போது நாங்கள்தான் உதவினோம் என்று சொல்லியிருந்தீர்கள். ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடத்தான் முஸ்லிம்களுக்கு உதவினார். இயற்கை அனர்த்தம் எப்போது யாருக்கு ஏற்படும் என்று தெரியாது. கடந்த வெல்லம்பிட்டி வெள்ள அனர்த்தத்தின் போது கிழக்கிலிருந்து வந்து எத்தனையோ குழுக்கள் உதவியதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவர்களில் நான் நன்கறிந்த ஸ்ரீலங்கா மு.காங்கிரஸ் அங்கத்தவர்கள், தொண்டர்கள் இருந்தார்கள்.

06. அரசியல் பற்றி கருத்துப் பரிமாறலில் எல்லா வகையான நபர்களும் ஈடுபடுவார்கள். மெத்தப்படித்த மேதாவியோடு கூட முகநூலில் கணக்கு வைத்திருக்கு்ம் சில்லறைக் கடைச் சிப்பந்தியும் தர்க்கம் புரிவான். யாருடன் உரையாடினாலும் நமது பண்புகளை நாம் விட்டுக் கொடுக்க முடியாது.

ஏறக்குறைய 3ம் 4ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் சண்டை பிடிக்கும் போது பயன்படுத்தும் வாசகங்களை விட மோசமான வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தியதன் மூலம் எம்.பி. என்ன ஒரு பிரதேச சபைத் தேர்தலுக்கு வேட்பாளராகக் கூட நிற்கத் தகுதியற்றவராக உங்களைக் காண்பித்து விட்டீர்கள்.

07. கனவான் தனம் என்பது வெறும் கோட் ஷூட்களில் இல்லை. அது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலும் நடத்தைகளிலுமே தங்கியிருக்கிறது.
குறிப்பு -

இவற்றை நான் எழுதியமைக்காக மற்றொரு வெல்லம்பிட்டி மு.கா. சண்டியன் எனக்கு அழைப்பெடுத்து உன் வீட்டைப் பத்தவைப்பேன் என்று மிரட்ட மாட்டான் என்று நம்புகிறேன்.

-Ashroff Shihabdeen-

1 comment:

  1. யார் அந்த வெல்லம்பிட்டி வளிசல் சண்டியன் பெயரை மட்டும் பதிவிடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.