Header Ads



வாய்க்குள் போனை வைத்து, கொல்லப்பட்ட தாய் (முழு விபரமும் வெளியாகியது)

-பாலித ஆரியவன்ச-   

61 வயது தாயின் ​மூச்சுத்திணறலை ஏற்படுத்திக் கொலை செய்த விவகாரத்தில், அந்தத் தாயின் மகளும், மருமகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும், வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

உமாஓயா திட்டத்துக்கு மாற்றீடாக, வெலிமடை உமாநதி கிராமத்தில், அந்த தாய்க்கு வீடொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டிருந்தார்.  

உயிரிழந்தப் பெண் இரண்டு திருமணங்கள் முடித்தவரெனவும் இவரை படுகொலை செய்தவர் முதலாவது கணவனுக்குப் பிறந்த மகன் என விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சந்தேகநபர், இராணுவத்தின் விசேட படையணியின் சிப்பாயாக 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் கடமையாற்றும் போது, விபத்தொன்றில் சிக்கியதால் சத்திரசிகிச்சை மூலம் இடது கால் அகற்றப்பட்டவராவார்.  

இதனையடுத்து, வைத்திய ஆலோசனைக்கமைய இராணுவத்திலிருந்து ஓய்வுப் பெற்ற அவர், 2009 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருடன் குறித்த வீட்டுக்கு வந்துள்ளனர்.  

தன்னுடைய கணவர் அடிக்கடி நோய்வாய்படுவதாக தெரிவித்து, தன்னுடைய மாமியை அழைத்து வந்து, அவர்களுடன் மருமகள் தங்கவைத்துள்ளார்.  

இந்நிலையிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலையை இயற்கை மரணமாக காட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.  

எனினும், உயிரிழந்த பெண்ணின் மருமகள் அளித்த வாக்குமூலத்திலேயே மேற்படி விவகாரம் அம்பலமானது.   

“ அன்றிரவு இரவு 12.30 மணியளவில் தன்னுடைய மாமி வெளியே செல்லும் சத்தம் கேட்டது. பின் மீண்டும் அவர் உள்ளே வந்து கதவைச் சாத்தும் சத்தம் கேட்டது. எழுந்து பார்க்கும் ​போது தன்னுடைய மாமியுடன் கணவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.  பின்னர் வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளையும், தன்னையும் முச்சக்கர வண்டியில் ஏற்றி ஊரிலுள்ள விகாரைக்கு கூட்டிச்சென்றார். போகும் வழியில் வீட்டு சாவியை காட்டில் எறிந்தார்.  

மறுநாள் காலை மீண்டும் வீட்டுக்கு வந்து பின்னாலுள்ள யன்னலை உடைத்து வீட்டுக்குள் சென்றோம். அங்கே மாமி உயிரிழந்த நிலையில் இருந்ததுடன் அவர் வாயிலிருந்து இரத்தம் வந்திருந்ததை அவதானித்தோம். .அதன் பின்னர் தனது கணவர் தன்னுடைய காலுறையை கழற்றி அவரது வாயிலிருந்த இரத்தத்தை துடைத்து விட்டு அவரது தொண்டையிலிருந்த அலைபேசியை வெளியே எடுத்ததாக சந்தேகநபரின் மனைவி பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து பொலிஸார் குறித்த அலைபேசியை தேடுவதற்காக நேற்று (18) உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போது அங்கே பெட்டி ஒன்றில் இருந்து உயிரிழந்த பெண்ணால் எழுதப்பட்ட கடிதமொன்றையும், அலைபேசியையும் மீட்டுள்ளனர்..  

அதில், இதுவரை வீட்டு உரிமப் பத்திரம் கிடைக்காத வீடு மற்றும் நிலம் மற்றும் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் என்பனவற்றை தன்னுடைய இரண்டாவது மகனுக்கு வழங்குமாறு எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை குறித்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் இருவரையும் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் சொத்து விவகாரமே குறித்த கொலைக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.