January 26, 2018

நாம் உருவாக்கிய கட்சி, இன்று வியாபித்து இருக்கின்றது - ரிஷாட்

வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்குக்கு வெளியேயும் அதிக எண்ணிக்கையிலும், அதிக விகிதாசாரத்திலும் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் சமூக நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதோடு, நாட்டில் மொத்தமாக 15 மாவட்டங்களில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார்.

வவுனியா நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோரை ஆதரித்து பட்டாணிச்சூரில் இடம்பெற்றக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு இற்றைவரை அந்தக் கட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உரசிப் பார்ப்பதற்கும், அளவீடு செய்வதற்குமே முஸ்லிம் பிரதேசங்களில் தனித்துக் களமிறங்கியிருக்கின்றோம். இதன்மூலம் எமது கட்சிக்குக் கிடைக்கும் மக்கள் ஆணை மூலம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. 

நாங்கள் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்வதும், எமது கருத்துக்களை ஏற்று எமது கட்சியின் பக்கம் அவர்கள் சாய்ந்து வருவதினாலும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர் மனப்புழுக்கம் அடைகின்றனர். இதன் காரணமாகவே இல்லாத பொல்லாத இட்டுக்கட்டப்பட்ட கதைகளைச் சோடித்து எமக்கெதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

எமது வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாத சில முஸ்லிம் அரசியல்வாதிகள், மேடைகளிலே நடிப்பும் நளினமுமாகப் பேசுகின்றனர். தலைமைத்துவத்துக்குரிய பண்புகளை எல்லாம் மீறி வாய்க்கு வந்தபடி திட்டுவதையும் அவர்கள் இப்போது தொழிலாக்கி விட்டனர். அரசியலில் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற குலை நடுக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேடைகளில் மாத்திரம் பேசுவதோடு நின்றுவிடாது கோழைத்தனமான முறையில் முகநூல்களையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி என்னைப் பற்றியும், மக்கள் காங்கிரஸைப் பற்றியும் திரிவுபடுத்தப்பட்ட புறம்பான பொய்களைப் பரப்புகின்றனர். சமுதாயத்துக்குச் செய்ய வேண்டியதை இவர்கள் நிறைவேற்றி இருந்தால், நாங்கள் இன்னுமொரு கட்சியை ஆரம்பிக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. 

மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னர் தலைமைப் பொறுப்பேற்று பதினேழு வருடகாலம் அதிகாரத்தில் இருந்தவர்கள், வடக்கு அகதிகளின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் மேற்கொண்ட பணிகள் என்னவென்று பட்டியலிட முடியுமா? யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் நமது மக்கள் மீளக்குடியேறச் சென்ற போது, இவர்கள் செய்த உதவிகள்தான் என்ன? வடக்கிலே தூர்ந்துபோய்க் கிடந்த ஏதாவது ஒரு கிராமத்தை “மீளக் கட்டியெழுப்பினோம்” என்று இவர்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா?

இற்றைவரை வடக்கிலே எத்தனை பள்ளிகளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கின்றார்கள்? எத்தனை வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்கள்? பலமான அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள், இந்த மக்களுக்குச் செய்த அபிவிருத்திகள்தான் என்ன?

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எம்மை வெளியேற்றியதன் பின்னர், நாம் புதுக்கட்சியை அமைத்து, எமக்குக் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு இந்த மண்ணுக்கு எம்மால் முடிந்தளவு செய்த சேவைகள், உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும். தாங்களும் எதுவுமே செய்யாதிருந்துவிட்டு, பணிகளை மேற்கொள்ளும் எம்மைப் பார்த்து விமர்சிக்கின்றார்கள். ஏளனம் செய்கின்றார்கள். நாம் புதுக்கட்சி அமைத்தது தவறு என்கின்றார்கள். தம்மை அழிப்பதற்காகவே கட்சியை ஆரம்பித்தோம் என்கின்றார்கள்.

இவர்கள் இந்த மண்ணில் மீளக்குடியேறியவர்களுக்குத்தான் எதுவுமே செய்யவில்லை என்ற போதும், புத்தளத்தில் அகதியாக வாழ்ந்த நமக்கு உதவினார்களா? அகதி முகாமில் துன்பங்களுடன் வாழ்ந்த மக்களின் துயரங்கள் கட்டுமீறி போனதனால்தான், நான் அரசியலில் ஈடுபட நேர்ந்தது. 
இறைவன் மீது கொண்ட நம்பிக்கையினால், நாங்கள் தூய்மையான முறையில் அரசியல் பாதையில் காலடி எடுத்து வைத்ததனாலேயே, நாம் உருவாக்கிய கட்சி இன்று வியாபித்து இருக்கின்றது என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment