Header Ads



பெனாசிர் கொலைக்கு, தெக்ரிக்-இ-தலிபான் பொறுப்பேற்பு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலைக்கு தெக்ரிக்-இ-தலிபான் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நடத்திய தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு பாகிஸ்தானில் இயங்கும் தெக்ரிக்-இ-தலிபான்தான் காரணம் என அப்போதைய அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் குற்றம் சாட்டினார். அதை தலிபான்கள் மறுத்தனர்.

இந்த நிலையில் தற்போது பெனாசிர் பூட்டோ கொலைக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம் என அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பின் தலைவர் அபுமன்சூர் ஆசிம் முப்தி நூர் வாலி எழுதிய புத்தகம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தில் பார்மல் என்ற இடத்தில் உள்ள மசீத் கம்ப்யூட்டர் மையத்தில் வெளியிடப்பட்டது.

588 பக்கங்களை கொண்ட இப்புத்தகத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலிபான்களின் தற்கொலை படைகள் பிலால் என்கிற சயீத் மற்றும் இக்ரா முல்லா ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த பெனாசிர் பூட்டோவின் கழுத்தில் பிலால் குறி வைத்து துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். பின்னர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து கூட்டத்தினரை கலைத்தான் என்றும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருது மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் பெனாசிர் கொலை செய்யப்பட்டது ஏன் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் இணைந்து முஜாகிதீன்களுக்கு எதிரான நடவடிக்கைக்கும், தீவிர குழுக்களை தடை செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

அந்த தகவல் கொல்லப்பட்ட தலிபான் நிறுவனர் பைதுல்லா மெக்சூத்துக்கு தகவல் மூலம் தெரிய வந்தது. எனவே அவரை கொலை செய்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.