Header Ads



ஜனாஸாக்களை வீட்டின் பின்புறம், அடக்கம்செய்யும் வேதனை

முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமம் ஒன்றில் அடக்கஸ்தலம் குளத்தில் மூழ்கியதால் இறந்தவர்களின் உடல்களை வீடுகளின் பின்புறம் புதைப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காண அடக்கஸ்தலத்திற்கு இடம் ஒன்றை உடனடியாக ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொஹிதீன் M.A., Ex M.P., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

இது தொடர்பாக பேராசிரியர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

ஒரு அரசியல் தலைவர் மற்றும் ஆன்மீகவாதி என்ற அடிப்படையில் உத்திரப் பிரதேச மாநில மக்களின் வாழ்க்கைத்தரம், கலாச்சாரம் மற்றும் அடிப்படை வசதிகளில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் தாங்கள் எடுத்து வருகிறீர்கள்...

தங்கள் நடவடிக்கையால் உத்திரப் பிரதேச மாநில மக்கள் பயன்பெற்று வருவதை நான் அறிகிறேன்...

இந்நிலையில் டெக்கான் கிரானிக்கல் 14.01.2018 நாளிதழில் வெளிவந்த செய்தியை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்...

அதாவது ஆக்ரா மாவட்டத்தில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ஹஜ்நேராவில் சபோக்கர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஒரு வினோதமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது...

முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த கிராமத்தில் அண்மையில் பெய்த கனமழையால் அங்குள்ள அடக்கஸ்தலம் குளத்தில் மூழ்கியது. அந்தக் கிராமத்தில் தற்போது அடக்கஸ்தலம் எதுவும் இல்லை...

எனவே, இறந்தவர்களின் உடல்கள் வீடுகளின் பின்புறம் அடக்கம் செய்யப்படுகிறது. இது ஒரு பரிதாபத்திற்குரிய நிலை. 3,300 பேர் வசிக்கும் இந்த கிராமம் படிப்படியாக அடக்கஸ்தலமாக மாறி வருவது வேதனைக்குரியது...

அந்த கிராம மக்கள் மற்றும் பெண்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். எனவே, இந்த அவல நிலைக்கு தீர்வு காணும் வகையில் அடக்கஸ்தலத்திற்காக தனி இடம் ஒதுக்கும்படி தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்...

இந்த கிராமத்தில் உள்ள மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறேன். 

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

முன்னதாக டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் வெளிவந்த செய்தியில் அந்த கிராம தலைவர் சுதந்தர் சிங் கூறியிருப்பதாவது :

கிராமத்திற்கு வெளியே ஒரு அடக்கஸ்தலத்தை ஒதுக்கும்படி மாவட்ட அதிகாரிகளிடம் பல மாதங்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை வீடுகளின் பின்புறம் புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்...

கிராமத்தில் உள்ள சில சமூகவிரோதிகள் இறந்தவர்களின் ஆவி அமாவாசை இரவுகளில் உலா வருவதாகவும், வினோதமான குரல்கள் எழுப்பப்படுவதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்...

இந்த பயத்தால் கிராமத்தில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

முழு கிராமமும் அச்சத்தின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர் என்று அந்த கிராம தலைவர் சுந்தர் சிங் மேலும் தெரிவித்தார்...

எனவே, இந்த அவல நிலையை போக்க ஒரு பொருத்தமான இடத்தில் அடக்கஸ்தலம் ஒதுக்க வேண்டும் என பேராசிரியர் K.M.காதர் மொஹிதீன் M.A., Ex M.P., அவர்கள் உத்திரப்பிரதேச மாநில முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Iuml Ajmal .

No comments

Powered by Blogger.