Header Ads



"பால்குடத்துக்குள் விழுந்த, ஒருதுளி சாணம்"

சிங்கபூர் பிரதமர் லீ சியென் லோங் மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ லிடோடோ ஆகிய இருவரும், நாட்டுக்கு விஜயம் செய்திருந்தமையால், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், இந்தவாரம் இடம்பெறவில்லை.  

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், அலரிமாளிகையிலும் முக்கியமான கூட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல தேர்தல் பிரசார கூட்டங்களிலும், திருமண வைபவங்களிலும், இராஜதந்திரிகளுடன் சந்திப்புகளில் இணைந்தும் தனித்தனியாகவும் சந்தித்துக்கொண்டனர்.  

அதில், கண்டியில் நடைபெற்ற ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குறிப்பிடலாம். அங்கு இசைக்கச்சேரி நடைபெற்றதுடன், இளைஞர்கள் விடியவிடிய ஆடி மகிழ்ந்துள்ளனர். இதனை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பூரிப்படைந்திருந்தார். அவருக்கு ரணில் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் ஒரேயொரு புதல்வனின் திருமண வைபவம், கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹொட்டலில் நடைபெற்றது.   

திருமணத்துக்கு, சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டனர்.   

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்டோரும் இந்தத் திருமண வைபவத்தில் கலந்துகொண்டனர்.   

சாட்சி கையெழுத்திட்ட பிரதமர் ரணில், மற்றொரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சற்று​நேரத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியஸ்தர்களுடன் அரை மணி நேரத்துக்கு மேலாக செலவிட்டுள்ளார்.   

இதில், பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதிக்கு நெருக்கமா இருந்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ​பேசிகொண்டிருந்துள்ளார்.  

“நீங்கள், பொருளாதாரத்தை கையி்லெடுப்பதாக தெரிவித்திருந்தீர்களே, அது ஐ.தே.கவினருக்கு சரியாக தெளிவில்லாமல் இருக்கிறது. நீங்கள் என்ன கூறினீர்கள்” எனக் கேட்டுள்ளார்.   

சட்​டென பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “பொருளாதாரத்தை ஐ.தே.கவே வழிநடத்திச் செல்கிறது. சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால், என்னுடைய தலைமையில் பொருளாதார குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. அதற்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு நான் சினைத்தேன். அவ்வளவுதான்” என்றார்.  
வியாழக்கிழமை, அதாவது நேற்று, ஜப்பான் தூதுக்குழுவைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வருகைதந்திருந்த முக்கியஸ்தர்களுடன் சிலமணிநேரம், செலவழித்தார்.   

“பிணைமுறி அறிக்கையை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யமுடியாதென, தெரிவித்திருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், தற்போது பக்கங்கள் இல்லை, இல்லையென கொக்கரிக்கின்றனர்” என அமைச்சர் தயாகமகே கூறிவிட்டார்.   

“முழுமையான அறிக்கையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம், சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. அதனையே முழுமையான அறிக்கையாக ஐ.தே.க ஏற்றுக்கொள்கிறது. அதில், பக்கங்கள் குறைவாக இருப்பதாக யாராவது குற்றம் சுமத்தினால், விவாதத்தை தரமுடியாது” என நான் கூறிவிட்டேன் என்றார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல.   

“நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் போது, பக்கங்களைக் குறைக்கமுடியாது. அப்படி செய்தால், அது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பக்கங்கள் அவ்வாறு குறைந்திருந்தால், ​அதில் சின்ன பிரச்சினையும் உள்ளது. எனக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம், ஆணைக்குழுவில் சாட்சியமளித்தோரின் சாட்சியங்கள் அதில் இல்லை. அவைதொடர்பில், எதிர்க்கட்சியினர் எங்களிடம் கேட்டு பிரயோசனம் இல்லை” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துவிட்டார்.   

“இல்ல சேர், ஊழலுக்கு எதிரான முன்னணியை நிறுவப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது மேடைகளைச் சூடாக்கும் நல்லதொரு ஸ்லோகன்” என அமைச்சர் தயாகமகே தெரிவித்துவிட்டார்.  

“அது புதிதல்ல. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக ஊழல் எதிர்ப்பு முன்னணிதான்” என அமைச்சர் கிரியெல்ல தெளிவுபடுத்தினார்.  

“என்றாலும் பிணைமுறி விவகாரம் ஊடாக, இது அரசாங்கத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்றாலும் இது ஊழலுக்கு எதிராக அரசாங்கமாகும். அதாவது இந்த விவகாரம் பால்குடத்துக்குள் விழுந்த ஒருதுளி சாணமாகும். அதனையே ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதனால், பாரிய கொள்ளைகளை மக்கள் மறந்தேவிட்டனர்” என அமைச்சர் கருணாதிலக்க பதிலளித்தார்.  

“இந்த நிலைமைக்கு நாங்களும் பொறுப்புக் கூறவேண்டும். கடந்த அரசாங்கம் கட்டுச்சட்டத்தில் ஓடியது, நாங்கள் ஜனநாயகரீதியில் நடவடிக்கை எடுத்தால், இவ்வாறான நிலைமைக்குதான் முகங்கொடுக்கவேண்டும்” என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.  

“ரணிலும் மைத்திரியும் கலந்து​பேசிதான், இருவரும் கோபமாக இருப்பதாக, நாட்டுக்கும் மக்களுக்கும் காட்டிக்கொண்டிருக்கின்றனர்” என ஜே.வி.பி பிரசாரம் செய்கிறது என, அமைச்சர் நவீன் திஸாரநாயக்க இதன்போது எடுத்துரைத்துள்ளார்.  

“மக்கள் அப்படி நினைப்பதும் சரிதான், ஏனென்றால், மேடைகளில் வீராப்புப் பேசுகின்ற, ஜனாதிபதியும் பிரதமரும், திருமண வைபவங்களில் ஒன்றாக இருந்து சிரித்துக்கொண்டிருக்கின்றனரே” என அமைச்சர் தயாகமகே புதுக் குண்டை போட்டுடைத்தார்.   

“எதுஎவ்வாறோ, இவற்றுக்கெல்லாம் மக்கள் தான் முடிவெடுப்பார்கள்” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்ததை அடுத்து, அந்த கூட்டத்திலிருந்தவர்கள், கலைந்துசென்றுவிட்டனர்.   

-அழகன் கனகராஜ்-  

No comments

Powered by Blogger.