January 02, 2018

கல்லீரலை கவனியுங்கள்..!

‘‘மனித உடலில் கல்லீரலின் பங்கு மகத்தானது. ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான சத்துக்களை உணவிலிருந்து உறிஞ்சுவது, சத்துக்களைத் தேக்கி வைப்பது, நச்சுக்களை வெளியேற்றுவது என அற்புதமான பல வேலைகளைச் செய்யும் தொழிற்சாலையாக செயல்படுவது கல்லீரல். இதன் முக்கியத்துவம் பற்றி எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம்’’ என்கிறார் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முருகன்.

‘‘நோய்த் தொற்றுள்ள ரத்தம் மற்றும் உடலின் திரவங்கள் மூலமாக வந்து சேர்ந்துகொள்ளும் ஹெப்படைட்டிஸ் ‘பி’ மற்றும் ‘சி’, கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வைரஸாகும். ஏனென்றால், அவை உடலளவில் எவ்விதமான அறிகுறிகளையும் ஏற்படுத்தாத போதிலும், கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலை சேதப்படுத்திவிடுகின்றன. இந்த வைரஸ் தொற்று 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்குமேயானால் அது மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. அது சில வேளைகளில் நிச்சயமான அறிகுறிகளோடும், சில வேளைகளில் எந்தவிதமான அறிகுறிகள் இல்லாமலும் உண்டாகிறது. 

6 மாதங்களுக்குள் இந்த வைரஸ் முற்றிலுமாக நீங்கிவிடும் என்றாலும், இந்த வைரஸ் கல்லீரலுக்குள் 6 மாத காலத்துக்கும் அதிகமாக தங்க விட்டாலோ, நோய்த்தொற்று படிப்படியாக முற்றி தீவிரமான நிலையிலிருந்து நாள்பட்ட நோய் என்ற கட்டத்தை எட்டி விடுகிறது. மேலும் தீவிரமடைந்து ஆபத்தான கட்டத்தை எட்டும் நிலைக்கு வழி வகுத்து விடுகிறது.  அதுவே பின்னர் கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற உயிருக்கே உலை வைக்கும் நோய்களாக முற்றிவிடுகிறது. மது அருந்துவது, அதிக கொழுப்பு கல்லீரலில் படிவதால் வரும் ஃபேட்டி லிவர் பிரச்னை போன்றவற்றால் கல்லீரல் செயலிழப்பது நாட்பட்ட வகையைச் சார்ந்தவை. 

10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். ஆனால், ஒரு சிலருக்கு தீடீரென்று ஹெப்படைட்டிஸ் வைரஸ் தொற்றுக்களால் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்துக்குள்ளாகவே கல்லீரல் செயலிழந்துவிடும். இதை ‘உடனடி கல்லீரல் செயலிழப்பு’ என்கிறோம்’’ என்பவர், ஹெப்படைட்டிஸ் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் மற்றும் அவற்றால் எழும் பிரச்னைகள் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார். ‘‘ஹெப்படைட்டிஸ் தொற்றின் போது பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை. ஆனாலும், சில விஷயங்களை வைத்து நாம் எச்சரிக்கையாகிவிட நமக்கு வாய்ப்பு உண்டு. 

மஞ்சள் காமாலை(கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாகிப் போகுதல்), அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர், சோர்வு, காய்ச்சல், குமட்டல், வாந்தி, மலம் சாம்பல் அல்லது களிமண் நிறத்தில் வெளி வருவது, அடிவயிற்றில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் பிடியின்மை போன்ற உபாதைகள் ஹெப்படைட்டிஸின் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம். எனவே, இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனையை உடனடியாக நாடுவது முக்கியமாகும். அப்போதுதான் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் மூலம் விரைந்து செயல்பட்டு, நோயை கட்டுப்படுத்த முடியும்.’’


ஹெப்படைட்டிஸ் ‘B’ நோய் தொற்று ஏற்பட காரணங்கள் என்ன?

‘‘பல வருடங்களுக்கு முன்னரே பிறரிடமிருந்து ரத்த தானம் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் போதை மருந்துகள்  எடுத்துக் கொள்பவர்களின் அசுத்தமான ஊசிகள், எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிளேடுகளாலும், ஊசிகளாலும்   சுகாதாரமற்ற வகையில் பச்சை குத்திக் கொள்பவர்களுக்கு இந்த நோய்த் தொற்று உண்டாகிறது. 

இவர்கள் தவிர, சுகாதார மையங்களிலும், மருத்துவ தொழில் சார்ந்தவர்களுக்கும் நோயாளிகளின் ரத்தத்தை அல்லது உடல் திரவங்களை தொடுவதன் மூலமும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த வைரஸ் தொற்று கண்ட நபருடன் வசிப்பவர்கள் அல்லது பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் சரிவர கிருமிநீக்கம் செய்யாத ஊசிகளை மற்றவர்களுக்கு மறுமுறை பயன்படுத்தும்போதும் பரவுகிறது.’’

ஹெப்படைட்டிஸ் B மற்றும் C-யினால் ஏற்படக் கூடிய பிரச்னைகள்...

‘‘கல்லீரல் சிரோசிஸ் (Liver cirrhosis)

கல்லீரல் தனக்குத்தானே மீண்டும் திசுக்களை புதுப்பித்துக் கொள்ளும் திறனுள்ளது. ஆனால், நாள்பட்ட  ஹெப்படைட்டிஸால் பெருமளவுக்கு சேதம் ஏற்படும்போது நல்ல ஆரோக்கியமான கல்லீரலின் திசுக்கள் கூட படிப்படியாக சேதமடைந்த திசுக்களாக மாறி, கல்லீரலின் செயல்பாட்டை பாதித்து விடுகின்றன. இந்த நிலையை சிரோசிஸ் என்கிறோம்.

கல்லீரல் செயலிழப்பு

இந்த நிலைமையில், கல்லீரல் மேற்கொண்டு இயல்பாக செயல்பட முடியாமல் போய் விடுகிறது. இதனால் பல்வேறு கோளாறுகள் உண்டாகின்றன. மேலும் அந்நிலையில் நோயாளியின் உயிருக்கே ஆபத்தில் கொண்டு போய்விடும். மீண்டு உயிர் வாழ கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே தீர்வு  

கல்லீரல் புற்றுநோய்

நாள்பட்ட ஹெப்படைட்டிஸ் B  மற்றும் C  நோய் கண்ட நோயாளிகளுக்கு ஏற்கனவே சிரோசிஸ்  இருக்குமானால் அவர்களுக்கு  கல்லீரல் புற்றுநோய் 
வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. நாள்பட்ட ஹெப்படைட்டிஸ் ‘பி’ யை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது. ஆனால், மருந்துகளால் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தி விட முடியும்.  ஹெப்படைட்டிஸ் ‘பி’ வைரஸ் நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி உள்ளது. 

ஆனால், ஹெப்படைடிஸ் ‘சி’ நோய்த்தொற்றுக்குத் தடுப்பூசி எதுவும் இல்லையென்றாலும், நோய்கண்ட நபரை ஏறக்குறைய முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு மருந்துகள் இருக்கின்றன. இருந்தபோதிலும் இது பற்றி போதிய அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதிருப்பது கவலை அளிப்பதாக  இருக்கிறது. பெரும்பாலான நோயாளிகள் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை  நாடுவதில்லை. 

நோய் முற்றி, கல்லீரல் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கும்போதுதான் மருத்துவர்களை பார்க்கிறார்கள். மேற்குறிப்பிட்ட ஆபத்துகள் இருந்து அவற்றுக்கு நீங்கள் உள்ளாகி இருந்தீர்கள் என்றால் உடனடியாக  மருத்துவரை சந்தித்து உடல் பரிசோதனை செய்து கொண்டு தகுதியான மருந்துகளை உரிய காலத்தில் எடுத்துக் கொள்வதே உயரிய வழியாகும்.’’

3 கருத்துரைகள்:

உண்மையிலேயே தேவையான மருத்துவக் குறிப்பு. posted செய்ததற்கு மிக்க நண்றிகள்.

Useful health tips to every one....

Useful health tips to every one...

Post a Comment