Header Ads



ராஜபக்சவினரின் விலாசம், வெலிக்கடை சிறையாக மாறும் - பேருவளையில் ராஜித

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் ராஜபக்சவினரின் தங்காலை, மெதமுலனை ஆகிய இடங்களில் விலாசங்கள் இரத்தாகி, அவர்களின் விலாசம் வெலிக்கடை சிறையாக மாறிவிடும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை கடற்கரை மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்சவினர் திருடிய பணத்தை துபாய் வங்கியில் வைப்புச் செய்துள்ளனர். நான்கரை பில்லியன் ரூபா பணம் அங்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

யுத்தத்தை வென்ற தலைவரை மக்கள் தோற்கடித்தனர். முன்னாள் ஜனாதிபதி உட்பட அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட ஊழல், மோசடிகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
கொள்ளையிட்ட பணமே துபாய் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அது அவர்களின் பரம்பரை பணம் அல்ல.

உக்ரைனில் மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. அதனை கோத்தபாய ராஜபக்ச செய்துள்ளார். தண்ணீர் சூடேறும் வரை நண்டு பாத்திரத்தில் இருக்கின்றது. தண்ணீர் சூடேறினால்தான் பிரச்சினை.

ஊழல், மோசடிகளில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி தமது திருட்டை மறக்க முயற்சித்து வருகின்றனர். இதன் காரணமாவே அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்து வருகின்றனர்.

உக்ரைனிடம் இருந்து 7.2 மில்லியன் டொலர்களை செலவிட்டு மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. எனினும் அது தொடர்பான உடன்படிக்கையில் 14.7 மில்லியன் டொலர் என கூறப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தரகு பணமாக பெற்றுள்ளார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க பத்திரிகையில் எழுதினார். மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சகல ஆவணங்களும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் ஹொங்கொங்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்சவினர் கொள்ளையடிப்புகள் குறித்த விசாரணைகளை துரிதமாக நடத்தும் என அரசாங்கம் கூறியது. விசாரணைகள் தாமதமாகியது. முன்னாள் நீதியமைச்சரே இதற்கு காரணம். அவர் விசாரணைகளை தாமதம் செய்தார்.

அவருக்கு ராஜபக்சவினருடன் தொடர்பு இருந்தது. அவர் ராஜபக்சவினர் ஊர்காரர். எப்படியாயினும் நாங்கள் விசாரணைகளை துரிதப்படுத்துவோம். அவர்களின் விலாசம் வெலிக்கடை சிறைச்சாலையாக மாறும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. 3 years gone. I do nnt think you can change their address.

    ReplyDelete

Powered by Blogger.