January 01, 2018

அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளினால், ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் பலி


அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் உற்பத்தி தொடர்பான நோய்களால் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் உயிரிழக்கும் தொழிலாளர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரம் வரையிலாகும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO ) தெரிவித்துள்ளது.

அது மட்டுமன்றி ‘அஸ்பெஸ்டஸ்’ பாவனை காரணமாக வருடமொன்றுக்கு மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் புற்று நோய்ப் பாதிப்பாலும் மற்றும் பல்வேறு நோய்களாலும் உயிரிழக்க நேர்வதாக உலக சுகாதார அமைப்பு ( WHO ) தெரிவித்துள்ளது.

இதனாலேயே சகல வகைகளிலுமான அஸ்பெஸ்டஸ் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயன்படுத்துதல் என்பவற்றைத் தடை செய்ய வேண்டுமென இவ்விரு அமைப்புக்களும் கடந்த பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றன. அஸ்பெஸ்டஸ் மனித பாவனைக்கு கேடு விளைவிக்குமென பன்னாட்டு பொது நிறுவனங்கள் உறுதிப்படுத்தின.

‘அஸ்பெஸ்டஸ்’ கூரைத் தகடுகள் உற்பத்தி தொடர்பான விடயமும் இதனை ஒத்ததென்றே. அது மனித ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் முதன் முதலில் 1987 ஆம் ஆண்டில் தான் உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தது.

‘அஸ்பெஸ்டஸ்’ உற்பத்திகள் புற்றுநோய்க் குக் காரணமாக அமைவதாக புற்றுநோய் ஆராய்ச்சி தொடர்பான பன்னாட்டு நிறுவனம் (I.A.R.C) தனது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தது.

மனித உடலுக்குத் தீங்கு பயக்கும் இரசாயனப் பொருள்கள் மற்றும் விஷத்தன்மை கொண்ட பொருள்களது பயன்பாட்டைத் தடை செய்யும் முதலாவது நடவடிக்கையெனக் கொள்ளப்படும்’ றொட்டர்டாம் தீர்மானத்தில் அஸ்பெஸ்டஸ் தயாரிப்பையும் உள்ளடக்கும் முயற்சி இற்றைக்குப் பல ஆண்டுகள் காலத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதொன்று.

அது மனித ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றென இவ்வாண்டு மே மாதத்தில் ஜெனிவாவில் இடம்பெற்ற மாநாடொன்றில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

வௌ்ளை நிற அஸ்பெஸ்டஸ் எனக் குறிப்பிடப்படும் கிறிசோட்டைல் (Chrys otile) என்ற வர்க்க அஸ்பெஸ்டஸ், மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அஸ்பெஸ்டஸ் உற்பத்தியில் ஈடுபடும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் முன்வைத்த கருத்தை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்திருந்தது.

ஆயினும் ‘அஸ்பெஸ்டஸ் உற்பத்தியை ‘றொட்டர்டாம்’ தீர்மானத்துக்குள் உட்புகுத்தி தடைசெய்யும் முயற்சி இந்த முறையும் தோல்வியில் முடிவடைந்தது.

‘அஸ்பெஸ்டஸ்’ உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளில் ஆறு நாடுகள் மேற்குறிப்பிட்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. ரஷ்யா, கசகஸ்தான், இந்தியா, சிம்பாப்வே, கிஸ்கிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகியவையே அந்த ஆறு நாடுகளுமாகும்.

அஸ்பெஸ்டஸ் உற்பத்திகள் தடை செய்யப்பட வேண்டுமென பல ஆபிரிக்க நாடுகள் முன்வைத்த பிரேரணையை 2019 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அடுத்த மாநாட்டிலேயே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

றொட்டர்டாம் தீர்மானத்தில் அஸ்பெஸ்டஸ் உற்பத்தியையும் உள்ளடக்கும் முயற்சி வெற்றி பெற்றிருந்ததால், அது இலங்கையிலும் அஸ்பெஸ்டஸ் உற்பத்திகளுக்குத் தடைவிதிக்கும் திட்டத்துக்கு உதவியாக அமைந்திருக்கும்.

அந்த வகையில் அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது உலகளாவிய ரீதியில் அஸ்பெஸ்டஸ் உற்பத்தியில் முன்னணி வகித்த ரஷ்ய நாடேயாகும்.

தற்போது உலக நாடுகளில், 55 நாடுகள் அஸ்பெஸ்டஸ் உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் பாவனை ஆகிய செயற்பாடுகளை முற்றுமுழு தாகத் தடை செய்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று, மூன்றாம் உலக நாடுகள் பலவும் இதில் அடங்குகின்றன.

2018 ஆம் ஆண்டில் அஸ்பெஸ்டஸ் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கனடா மற்றும் அதன் இறக்குமதி மற்றும் பாவனையில் கணிசமான பங்களிப்பு வழங்கும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் அஸ்பெஸ்டஸ் பாவனையை தடைசெய்யத் தீர்மானித்திருந்தன.

அந்த வகையில் கனடா தனது தீர்மானத்தை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தக்கூடும். ஆனால் இலங்கை அத்தகைய தனது முடிவைக் கைவிட்டுள்ளது.

உலகின் முன்னணி அஸ்பெஸ்டஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடொன்றான ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட கடும் அழுத்தமே இலங்கையின் அந்தத் தீர்மானத்துக்கு முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்குள் ஒரு வித வண்டு இனம் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படை நோக்கம் என்ன என்பது தற்போது பரகசியமாகி உள்ளது.

தான் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் தேயிலை மீது மட்டுமென்றல்லாது, வேறு சில பொருள்கள் மீதும் ரஷ்யா இறக்குமதித்தடை விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை இது குறித்துக் கருத்து வௌியிட்டிருந்த அமைச்சர் நவீன் திசநாயக்கவே, வௌ்ளை நிற அஸ்பெஸ்டஸ் தகடுகள் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காது எனத் தெரிவித்ததும், இந்தப் பிரச்சினையில் அரசு எத்தகைய தீர்வை எட்டும் என்பதை அனுமானிக்க வழி செய்தது.

இதன் மூலம் குறித்த வௌ்ளை நிற அஸ்பெஸ்டஸ் வகைக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு தீர்மானித்தமை உறுதியாகியது.

அந்த வகையில் ரஷ்யாவுக்கு தேவைப்பட்ட விதத்தில், ரஷ்யப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், ரஷ்யாவின் அழுத்தத்துக்குப் பணிந்து செயற்படும் வகையில் இலங்கை அரசு அஸ்பெஸ்டஸ் இறக்குமதிக்கான தனது தடை உத்தரவை நீக்கிக்கொண்டது.

வௌ்ளை நிற அஸ்பெஸ்டஸ் ‘மெசொபோலியோமிஸ்’ வகை புற்றுநோய் பிரச்சினையை ஏற்படுத்தும்வரை, அதன் தாக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏற்படும் வரை வெள்ளை அஸ்பெஸ்டஸ் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நிலைப்பாட்டை அரசு முன்னெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பால் நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது பாதுகாப்பதாக உறுதி வழங்கியே இன்றைய கூட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது.

ஆயினும் சுற்றுச்சூழல் பாதிப்பால் பல்வேறு பேரழிவுச் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னரே அரசு விழித்துக் கொண்டு ஒப்புக்குச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு மீதோட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவு, காட்டு யானைகளைத் தந்தத்துக்காகக் கொன்றமை போன்றவை உதாரணங்களாகின்றன.

மனித உடலுக்குத் தீ்ங்கு விளைவிக்கும் பொருள்கள் சிலவற்றுக்கான இறக்குமதிக்கு இன்றைய அரசு தடைவிதித்ததென்னமோ உண்மைதான். ஆனால் அஸ்பெஸ்டஸ் இறக்குமதி விடயத்தில் அரசால் அதனைத் தடைசெய்ய இயலாத அளவுக்கு அது அழுத்தங்களுக்கு அடிபணிய நேர்ந்து விட்டுள்ளது.


அஸ்பெஸ்டஸ் இறக்குமதி மீதான தடை குறித்து இன்றைய கூட்டு அரசு தீர்மானம் மேற்கொண்டவேளை, ரஷ்யாவில் நிலவும் நிர்வாக நடைமுறை குறித்த யதார்த்தத்தைக் கருத்தில் எடுத்துச் செயற்பட்டிருந்தால் இத்தகைய சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்காது.

அஸ்பெஸ்டஸ் இறக்குமதிக்கான தடையை மேற்கொண்டதன் பின்னர் அதன் பாவனையால் ஏற்படத்தக்க பாதிப்புக்கள் தொடர்பாகவோ, வௌ்ளை அஸ்பெஸ்டஸ் ரகம் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்ற கருத்தை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் விதத்தில் நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்தவோ, அல்லது அதற்கு மாற்றீடான உற்பத்தி குறித்து யோசனை எதனையும் முன்வைக்கவோ இன்றைய கூட்டு அரசு எது வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

அத்தோடு குறித்த தனது தடை காரணமாக ரஷ்ய அரசால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது குறித்த முன்னேற்பாட்டுத் திட்டமெதுவும் இலங்கை அரசிடம் இருந்திருக்கவி்ல்லை.

இதனாலேயே தான் மேற்கொண்ட சரியான முடிவிலிருந்து பின்வாங்கி, தான் மேற்கொண்ட இறக்குமதிக்கான தடை உத்தரவை மீளப்பெற்றுக் கொள்ளும் பரிதாபகரமான நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருந்தது.

குறித்த பிரச்சினையில் ரஷ்யாவுக்குச் சாதக பயன்கள் கிட்டும் வகையிலான முடிவை இலங்கை அரசு மேற்கொண்டிருக்கத் தேவையில்லை.

ஆனால் ரஷ்யா இலங்கைத்தேயிலையைக் கொள்வனவு செய்வதை நிறுத்திக் கொண்டால் அதனால் இலங்கையின் தேயிலை உற்பத்தித்துறைக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பலத்த பாதிப்பு ஏற்படும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

ஆனால் அஸ்பெஸ்டஸ் இறக்குமதிக்குத் தடை விதிக்காமலேயே அதன் பாவனையை நாட்டில் இயன்றவரை குறைப்பதற்கும் அதனூடாக இறக்குமதி செயற்பாடுகளை நலிவுபடுத்தவும் பல வழிமுறைகள் உள்ளன.

அவற்றைக் கையாண்டு படிமுறையில் அஸ்பெஸ்டஸ் பாவனையை நாட்டில் குறைவடையச் செய்வதற்கான வழிமுறைகளை திட்டமிட்டு முன்னெடுக்க அரசுக்கு வாய்ப்பிருந்தும், அது குறித்து அரசு கவனம் செலுத்தாமையே, இன்று இந்த விடயத்தில் இலங்கை அரசு, இராஜதந்திர அணுகுமுறைத் தோல்விக்கு முகம் கொடுக்கக் காரணமாக ஆகி விட்டுள்ளது.

- Uthayan

2 கருத்துரைகள்:

அநாமதேய தேயிலை  வண்டால்,
அரசியல்  ஆகும் அஸ்பெஸ்டஸ்;
ஆரோக்கியமே  அதன் பின்தான்.

இதன் பாவனையை நலிவடையச்செய்வது மிகச்சிறந்ததே. விளம்பரம், காட்சிப்படுத்தலை குறைக்க அளுத்தம் கொடுத்து மக்களுக்குள் இது பிரபலமாவதை தடுக்கலாம்.

குறிப்பு: ( இந்த உதயன் எளுத்தாளரால் சில காழ்ப்பணர்வு கட்டுரைகளும் வந்து வாசகர்களின் பலத்த கண்டனங்களையும் வாங்கிக்கட்டியது, இவர் ஜப்னாமுஸ்லீமில் உள்ள ஒருவரா? அல்லது உதயன் பத்திரிகையை மேற்கோள் காட்டியுள்ளீர்களா? தயவுசெய்து தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்???)

Post a Comment