Header Ads



சிறப்பு மேல் நீதிமன்றம் வருகிறது, மோசடிகளுக்கு 6 மாதங்களுக்குள் தீர்ப்பு

ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான சிறப்பு மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட வரைவு,  இந்தவாரம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கான சட்டவரைவு , அரச சட்ட வரைஞரினால், தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தவாரம் அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நிதிக்குற்றங்கள் மற்றும் ஊழல்கள், குறித்து விசாரிக்க இந்த நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோமகமவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் புதிய மேல் நீதிமன்றம் இன்னும் 6 மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

“புதிய சட்டத்தின் படி, ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் மேல்நீதிமன்றத்தில் நேரடியாகவே தாக்கல் செய்ய முடியும்.

வழக்குகள் நீண்டகாலத்துக்கு இழுக்கப்படாது. ஆறு மாதங்களுக்குள் தீர்ப்புகள் அளிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் தேவைப்படலாம்.

புதிய மேல் நீதிமன்றம் தலா மூன்று நீதிபதிகளைக் கொண்ட  மூன்று அமர்வுகளாக இருக்கும். இங்கு வழக்குகள் நாளாந்தம் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்படும்” என்றும் சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.