Header Ads



30 ஆண்டுகளில் சாக்லேட் அழிந்துவிடும் அபாயம்


பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று சாக்லேட். சாக்லேட்டில் இனிப்பு சுவை இயற்கையில் கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ் சாக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் செய்யப்படுகிறது. 

கொக்கோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சாக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘உலகின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை கூடும். இதனால் சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை’ என அதில் தெரிவித்துள்ளது. 

மற்ற மரங்களை போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆண்டிற்கு 1 லட்சம் டன் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படுகிற வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் தெரிவித்தார்.

பருவ மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துள்ளன. அந்த வரிசையில் கொக்கோ மரங்களும் இடம்பெற உள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments

Powered by Blogger.