Header Ads



ரணிலை சந்திக்க 3 வருடங்கள் காத்திருந்தேன் - ஆசாத் சாலி

ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த கொழும்பு மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வித நல்ல மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு மக்கள் மாற்றமொன்று குறித்து சிந்திக்க வேண்டுமென்று கொழும்பு மாநகர சபை மேயர் அபேட்சகர் அசாத் சாலி தெரிவித்தார்.

நவமணி வார இறுதி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவருடனான முழுமையான செவ்வியை இங்கே தருகின்றோம்.

கேள்வி: கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன், தேசிய ஐக்கிய முன்னணி ஒன்றிணைய காரணம் என்ன?

பதில்: நான் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி அரசியலில் ஈடுபட்டு இறுதியாக கண்டி மாவட்டத்தில் கட்சியின் நிலைமை மோசமாக இருப்பதாக குறிப்பிட்ட தலைமைத்துவம், கண்டியை வெற்றிகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. அதேபோன்று கண்டி மாவட்டத்தில் நான் முதலாவது ஆளாக தேர்வுசெய்யப்பட்டேன். அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் வந்தது. பாராளுமன்றத் தேர்தலிலும் நான் மாவட்டத்தில் முதலிடம் பெறுவேனென்று ஹக்கீம், ஹலீம் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் சமுதாயத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி செய்யும் துரோகத்தை இங்கு கண்டுகொள்ளலாம். அதற்கு முன்பு இடம்பெற்ற பாராளுன்றத் தேர்தலில் ஹக்கீம், ஹலீம் மற்றும் காதர் ஹாஜியார் என மூவரும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினர். மாவட்டத்தில் மூன்று முஸ்லிம்கள் தெரிவாகும் வாய்ப்பை ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்டத்தில் இல்லாது செய்தது.

ஐக்கிய தேசிய கட்சிக்காக தேசிய ரீதியான பிரசார பணிகளில் ஈடுபடக்கோரி, தேசிய பட்டியலில் பாராளுமன்றம் அனுப்புவதாக கடிதமும் தந்தனர். நான் எனக்கு தேசிய பட்டியல்  வேண்டுமென்று யாரிடமும்கேட்கவில்லை.

பதவிகள் என்னைத்  தேடி வந்ததேயன்றி, நான் பதவியைத் தேடிச் செல்லவில்லை. ஜனாதிபதியுடனான நிகழ்வுகளில் பிரதமரும் கலந்துகொள்ளும்போது, நான் எனக்கு ஏன் தேசிய பட்டியல் வழங்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் கேட்டுள்ளேன். மூன்று தடவைகளும் தனக்கு சுகயீனம், நேரமில்லை, சந்தித்து கதைக்கலாம் போன்ற பதில்களே கிடைத்தன. அவ்வாறே மூன்று தடவைகளும்கடந்தோடின.

மேயர் வேட்பாளர் கூட நான் எதிர்பார்த்திருந்த ஒன்றல்ல. தேசிய ஐக்கிய முன்னணியை அர்ப்பணிப்புடன்  கட்டியெழுப்பினேன். உயர்நீதிமன்றம் சென்று மேலும் பல கட்சிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தது. தேசிய ஐக்கிய முன்னணியை தேர்தல் திணைக்களத்தில் பதிந்து இரண்டு மாதங்களில் இந்த  தேர்தல் வந்தது. நான் ஜனாதிபதியுடன் இங்கிலாந்து, பங்களாதேஷ், கட்டார் என இறுதியாக கொரியாவுக்கும்செ ன்றேன். கொரியா செல்ல ஜனாதிபதியுடன் விமான நிலையத்தில் இருக்கும்போது, அசாத் நீங்கதான் கொழும்புக்கு தலைமைத்துவம் வழங்கவேண்டுமென்று அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா கூறிச்சென்றார். கொரியாவில் ஜனாதிபதி கட்சி அரசியல், நாட்டின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடினாலும் இதுபற்றி எதுவும் கூறவில்லை.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வுகள்  இடம்பெற்றன. அங்கு ஐக்கிய தேசிய கட்சியின் ரோசி சேனாநாயக்க என்னை அழைத்து நீங்க தான் என்னோடு  போட்டியிடப்போறீங்க என்று கூறினார்.

அதுவரை நான் அறிந்திருக்கவில்லை. அந்நிகழ்வில் ஜனாதிபதியும், அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் வந்து கைகுழுக்கி வாழ்த்தி என்னை மேயர் வேட்பாளராக கூறினர். அப்போது ரோசி சேனாநாயக்க, பிரதமர் ரணில் உங்களை சந்திக்க வேண்டுமாம் என்றார். பதிலுக்கு நான், நான் ரணிலின் சந்திப்புக்கு மூன்று வருடங்களாக காத்திருந்தேன்.

இப்போது நானோ, என் சமூகமோ அவரை சந்திக்க தயாரில்லை என்றேன். மஹிந்தவின் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கு முக்கிய காரணம் ஊழல்களே. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியும், அமைச்சரும், ஆளுநரும், தலைவரும் என மொத்தமும் அவராகவே இருந்தார். நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களை மிரட்டி பணம் பரித்தனர். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வந்த முதலீட்டாளர்கள் நாட்டில் முதலிட்டிருந்தால் நாடு இன்று சிங்கப்பூராக இருந்திருக்கும். மஹிந்தவின் இனவாத செயற்பாடுகளும் அவரை வீட்டுக்கனுப்ப வைத்தது. அவரை வீட்டுக்கு விரட்டிய பின்னர் வந்ததே நல்லாட்சி அரசாங்கம். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரவும் வாய்ப்பானது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பலமிழக்கச் செய்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் தனிப் பலம் பெறமுடியாது போனது.

கோட்டாவை கைதுசெய்ய பல ஊழல்கள் இருக்கும்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கோட்டாவின் தந்தைக்கு சிலை வைத்ததில் கைதுசெய்ய பார்த்தது.

கோட்டாவை மிக் விமான கொள்வனவு மோசடி, தாஜுதீன் கொலை, லசந்த கொலை, எக்னெலிகொட கொலை, ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் என 10, 15 வருடங்கள் சிறையில் அடைக்கப் போதுமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு தந்தைக்கு சிலை வைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்ய முற்பட்டது கோட்டாவை ஹீரோவாக்கும்மு யற்சியே அன்றி வேறில்லை.

இவ்விடயத்தில் கோட்டா கைதாகியிருந்தால், என் சகோதரன் ஜனாதிபதி, சகோதரன் அமைச்சர், சகோதரன் சபாநாயகர், தந்தை முன்னாள் அமைச்சர், சகோதரனின் மகன் பாராளுமன்ற உறுப்பினர், நான் பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போது என் தந்தைக்கு சிலை வைத்தது தவறா? தவறாயின் செலவழித்ததை நாம் வழங்க தயாராக உள்ளோம் என்றிருப்பார். இவ்வாறு எவ்வித பலமும் இல்லாத, செல்லாத குற்றச்சாட்டை வைத்தே கோட்டாவை கைதுசெய்ய முனைந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியிடம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நாட்டில் ஏற்படவில்லை. மஹிந்த மேற்கொண்ட களவுகளையே இவர்களும் செய்கின்றனர். இன்று எங்கு பார்த்தாலும் ஊழல். ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நட்டமடைந்துள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தன்னார்வத்தில் இயங்கக்கூடிய சபையொன்றே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 50 அல்லது 60 இலட்சம் சம்பளத்திற்கு பிரதமர் சபை அங்கத்தவர்களை நியமித்துள்ளார்.

இன்று கோரப்படும் எல்லா வகையான கேள்வி மனுக்களிலும் மலிக் சமரவிக்ரமவின் தலையீடு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களுக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களே அதிகம். இதற்கெதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவமும் மௌனம். எனவே இது தலைமைத்துவத்தின் கட்டளையென்ற முடிவுக்கு வரவேண்டியதுதான். 

கொழும்பு வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் உண்டென்பது உண்மையே. அதற்காக நடைபெறும் ஊழல்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு உயோம்பி உயோம்பி என்று கூச்சலிடுவதில் பயனில்லை. கொழும்புக்கொரு மாற்றம் தேவை. மாற்றத்துக்காகவே நான் அசாத் சாலி வந்துள்ளேன்.

கேள்வி: தேசிய ஐக்கிய முன்னணி ஓர் அங்கீகாரமிக்க கட்சியாக இருக்கும்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை தெரிவுசெய்ததேன்?

பதில்: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகவே தேசிய ஐக்கிய முன்னணி களமிறங்குகின்றது. அதிலும் ஒரு முக்கியமான விடயத்தை நான் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பங்காளிக் கட்சிகள் கூட்டணியாக இணையும்போது பிறிதோர் கட்சிக்கு பட்டியலின் தலைமைத்துவத்தை வழங்கியதில்லை. அவர்களின் பட்டியலில் பங்காளிக் கட்சி அபேட்சகர்களுக்கு இடம் வழங்குவார்களே தவிர தலைமைப் பதவியை வழங்கமாட்டார்கள். வரலாற்றின் முதன் முறையாக தேசிய ஐக்கிய முன்னணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலுக்கு தலைமைத்துவம் கிடைத்துள்ளது.

இதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவாக இருப்பின், உங்கள் கட்சியை மூடிவிட்டு சுதந்திர கட்சியின் அங்கத்துவத்தை பெற்று போட்டியிடக் கோரியிருப்பார். ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவ்வாறில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்னை மேயர் வேட்பாளராக அறிமுகம் செய்யும் போது, நாம் வானத்திலிருந்து யாரையும் இறக்கவில்லை. கொழும்பின் நன்றாக அறிந்த கொழும்பு ஒருவரையே இறக்கியுள்ளோம், நாம் நடிகைகளை களமிறக்கவில்லை என்றனர். அதுவே உண்மை.

கேள்வி: தேர்தலை வெற்றிகொள்ள எவ்வகையான திட்டங்களில் பயணிக்கின்றீர்?

பதில்: தேர்தலை வெற்றிகொள்ள பாரிய திட்டங்கள் ஏதும் தேவைப்படாது. மக்கள் ஆதரவு மாத்திரமே தேவை. கடந்த மூன்று வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு எவ்வித  சேவைகளையும் செய்யவில்லை. கடந்த சபையிலும் எவ்வித வேலையும் நடைபெறவில்லை. கோட்டாபாய ராஜபக்ஷவே கவுன்ஸிலுக்கு கட்டளைத் தளபதியாக இருந்தார். நான் முன்னாள் பிரதி மேயராக ருக்கும்போது வேறு யாரையும் கவுன்ஸில் வேலைகளில் தலையிட இடமளிக்கவில்லை. அதனை எவ்வாறு திட்டமிட்டு செய்யவேண்டுமென்பது எமக்கு தெரியும். கோட்டா கொழும்பை அழகுபடுத்துவதாக கூறி கொள்ளையடித்தார். நாம் தனியார் துறையினரின் உதவியுடன் பணச் செலவுகள் இன்றியே கொழும்பை அபிவிருத்தி செய்தோம். இனியும் அவ்வாறுதான். கொழும்பு மாநகர சபையில் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். கொழும்பின் டெங்கு, குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். நாம் ஜனாதிபதியுடன் கொரியாவில் இது பற்றி ஆராய்ந்தோம்.

கொழும்பு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்தாலும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதே கவலையான உண்மை.

கேள்வி: பெரும்பாலான இளைஞர்களும் பொதுமக்களும் அரசியல் கட்சிகளில் நம்பிக்கையிழந்துள்ளனர். வாக்களிப்பில் இருந்தும் தவிர்ந்துகொள்கின்றனர். இதுகுறித்து என்ன கூறுகின்றீர்?

பதில்: அரசியல் வாதிகள், கட்சிகளின் ஊழல் மோசடிகள் காரணமாக மக்கள் அரசியலில் வெறுப்படைந்துள்ளனர். வாக்களிப்பில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். என் மீது நம்பிக்கை வைக்கலாம். நான் பிரதி மேயராகவும் இருந்துள்ளேன். நான் பொதுமக்களுக்கு கட்சி, இன, மத, மொழி பேதம் பாராது சேவையாற்றியுள்ளேன். மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். கொழும்பு மக்களின் மாற்றத்திற்கு வாக்களிக்கவும். இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கேள்வி: கொழும்பில் அதிகமான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் சேரிப்புற மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணமுடியாதுள்ளது. இம்மக்களின் வாழ்க்கையில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றீர்?

பதில்: உண்மையிலேயே இது  நல்லதோர் கேள்வி. கொழும்பு மாநகர சபை அவர்களின் வாழ்க்கையை ஒளியூட்ட எவ்வித திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபை கொழும்பு மக்களுக்கு கூலி வீடொன்றை வழங்கி, அவர்கள் வசித்து வந்த வீடுகளை நிர்மாணித்து அவர்களுக்கு வழங்கும் திட்டமொன்று உள்ளது. நாம் இதேபோன்ற திட்டத்தில் சேறி மக்களையும் இணைத்துக்கொண்டு உண்மையிலேயே அழகான கொழும்பொன்றை நிர்மாணிக்க முயற்சிப்போம். எமக்கு வழங்கப்படும் காலத்தில் முழுக் கொழும்பிலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவோம். கொழும்பு மக்கள் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

கேள்வி: இது. ஐ.தே.க அரசாங்கம். மா நகர அபிவிருத்தி அமைச்சரும் பாட்டலி சம்பிக ரனவக. இப்போது ஐ.தே.கட்சியை விமர்சித்து மேயராகி, ஐ.தே.க ஆதரவின்றி செயற்பட கடினமாகுமல்லவா?

பதில்: இது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமல்ல. நல்லாட்சி அரசாங்கம். ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கம். கொழும்பை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொள்ளும்போது ஜனாதிபதியின் ஆதரவு கிட்டும். அது ஒரு தடையாக அமையாது.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்ததே நல்லாட்சி அரசாங்கம். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதும், விமர்சிப்பதும் வழமை. எனினும் நாட்டுக்கான வேலைகள் குறைவின்றி நடைபெறுகின்றன. எது எவ்வாறிருந்தாலும் இந்த அரசாங்கத்தின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரி கையிலேயே உள்ளது. இம்முறை புதிய மாற்றமொன்றின் மூலம் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரியை வெற்றிபெறச் செய்வதே 2015 ஆட்சி மாற்றத்தின் உண்மையான அடைவுகளை சாத்தியப்படுத்தும்.

கேள்வி: கண்டி மக்களை விட்டுவிட்டு கொழும்புக்கு வந்ததாக குற்றச்சாட்டொன்றுள்ளது. உங்களுக்கு வேறோர் வாய்ப்பு வரும்போது கொழும்பு மக்களையும் விட்டுச் செல்வீரா?

பதில்: நான் கொழும்பின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றேன். கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த தலைமைத்துவம் அங்கு அனுப்பியது. நான் கண்டியை மறக்கவோ, விட்டுவரவோ இல்லை. ஐக்கிய தேசிய கட்சி எனக்கு மேற்கொண்ட துரோகத்திற்கு எனது நீதியான எதிர்ப்பை வெளியிட்டேன். கண்டி மக்களுக்கான எனது சேவை இன்றும் தொடர்கின்றன. நாளாந்தம் கண்டி மக்கள் என்னைக் காண வருகின்றனர். கண்டி மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தினரும் அவர்களின் அமைச்சர்களை தாண்டி என்னை அழைக்கின்றனர்.

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் என பல பிரச்சினைகளும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தீர்க்கப்படவில்லை. நான் இவையனைத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றேன். ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளார். அசாத் சாலி கண்டியை விட்டுவிட்டார் என்பது அரசியலில் தோல்வியடைந்தவர்களின் கூற்றே அன்றி கண்டி மக்களின் குற்றச்சாட்டல்ல. கண்டி மக்கள் என்னைத் தொடர்புகொண்டு, அவர்களின் வேலையொன்று நடைபெறாதபோது எனக்கு குற்றம்சாட்டுவதில் நியாயம் உண்டு.   

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரித்தவர்களில் நீங்களும் ஒருவர். முன்னாள் அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளே இந்த அரசாங்கத்தை கொண்டுவர வைத்தது. மைத்திரி- ரணில் கூட்டிலும் இனவாதம் ஒழிந்ததாக தெரியவில்லை. இதுகுறித்து...

பதில்: பொதுபல சேனா மற்றும் ஞானசார தேரரின் பிரச்சினைகளை வைத்தே இனவாதம் நிறைவுபெறவில்லை என்று கூறுகின்றீர். நாம் ஞானசார தேரரின் பிரச்சினையையும் நிறைவுசெய்தோம். அதற்கு விரும்பாத சிலர் எம்மைத் தூற்றினர். ஆனால் நாடு இன்று பிரச்சினையற்று இருக்கின்றது. ரோஹிங்கியா அகதிகள் விடயத்தில் பொதுப சேனா பக்கச்சார்பின்றி நடந்து கொண்டது. கிந்தோட்டை சம்பவத்திலும் சமாதான முயற்சிகளை மேற்கொண்டது. இவை இரண்டிலும் ஞானசார தேரரும் ஆடியிருந்தால் நாட்டின் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும். இவை அனைத்தும் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவே.

ஞானசார தேரர் என்னோடு மாத்திரம் கலந்துரையாடவேண்டும் என்று கூறியிருந்தார். நான் ஒரு தனியாள் அல்ல. எனக்கென்று ஓர் சமுதாயமுண்டு. சமுதாயத்தின் பிரதிநிதிகள் உள்ளனர். நான் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் சந்திக்க தயாரென்று கூறினேன். ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், சமூக சிவில் அமைப்புகளின் தலைவர்கள் என எமது குழுவை குறிப்பிட்டேன். அவர்கள் பேச தயாரென்றனர்.

பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன. வில்பத்து விடயங்களை கலந்துரையாடி

னோம். விளக்கங்களை வழங்கினோம். மார்க்க விடயங்களில் அல்லாஹ், ரஸூல் மற்றும் குர்ஆன் குறித்து பேச மாட்டோம் என்று வாக்களித்தனர். இதனை முழு முஸ்லிம் சமுதாயமும் வரவேற்கும் போது சிலர் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு முஸ்லிம்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் ஊடக அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்ற எண்ணமுண்டு.

கேள்வி: பொதுபல சேனா மற்றும் ஞானசார தேரருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறவே கலந்துரையாடல்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. இது உண்மையா?


பதில்: நான் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தால் தானே என்னால் வாபஸ் பெற முடியும்? இவ்விடயம் குறித்து முஸ்லிம்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். சமூகத்தின் பிரதிநிதிகள் வழக்கு வாபஸ் பெறல் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கவில்லை. அவர்களும் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. அங்கு சென்றிருந்தவர்கள் வழக்கு தாக்கல் செய்திருக்கவும் இல்லை.

ஞானசார தேரரின் முறையற்ற நடத்தைக்கு ஹோமாகம நீதிவான் மேற்கொண்ட வழக்கு. அதனை அசாத் சாலியால் வாபஸ் பெற முடியுமா? வட்டரக்க விஜித தாக்கல் செய்த வழக்கை அசாத் சாலியால் வாபஸ் பெற முடியுமா? சமூகத்தின் சிவில் அமைப்புகள் தாக்கல் செய்த வழக்குகளும் உள்ளன. ஆனால் யாரும் அவற்றை வாபஸ் பெற தயாராக இல்லை. அது அதற்கான பேச்சுவார்ததையும் அல்ல.  முஸ்லிம் சமூகத்தில் உள்ள அரசசார்பற்ற, இஸ்ரேலிய ஏஜன்டுகள்,  வேலையற்றோரே போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 

அத்தகையோர் கீபோர்ட் வீரர்களே. நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து 6மாதங்கள் தாண்டிவிட்டன. ஏதாவதொரு வழக்கு இதுவரையில் வாபஸ் பெறப்பட்டதா? இல்லையே. இது ஷைத்தானின் வேலை. ஷைத்தானுக்கு என்னிடம் ஓதல்கள் உண்டு.  

கேள்வி: ஞானசார தேரர் தெளிவான இனவாதியாக இருக்கும்போது ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி செயலகத்திற்கு அவரை அழைத்து மதத் தலைவர்களை போன்றே மதித்தார். இதனை ஜனாதிபதி இனவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதற்கு உதாரணமாக கொள்ள முடியாதா?

பதில்: இல்லை. அது தவறான புரிதல். அது அனைத்து மதத் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல். கலந்துரையாடலின் இடையே முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவே ஞானசார தேரரை அந்த கூட்டத்திற்கு அழைத்து வந்தார். ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் ஞானசார தேரர் கூச்சலிட, ஏனைய மதத் தலைவர்கள் வாயடைத்துப்போயுள்ளனர். அவ்விடத்திற்கு தேரரை அழைத்து வந்த அமைச்சரவை அமைச்சரொருவருக்கு ஜனாதிபதியால் கடிந்துகொள்ள முடியவில்லை. பிரச்சினைகள் அதிகமாகும். பின்னரே ஜனாதிபதி இவ்விடயத்தை கூறினார்.

Aadhil Ali Sabry

4 comments:

  1. Tell us one good thing has been done by My3 for Muslims. Wilpattu, Jinthotta, Dambulla etc, etc.... Nothing......

    ReplyDelete
  2. வந்துவிட்டார் எங்களின் தளபதி.. இவரே சொல்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றும் செய்யவில்லை என்று.. அதேபோல் இவரின் தலைவர் மைத்திரியே அரசாங்கத்தின் தலைவர் என்று. ரணில் செய்யவில்லை என்றால் மைத்திரியை வைத்து செய்ய வேண்டியதுதானே. இவரின் பார்வையில் சகோதரர் சட்டத்தரனி சிறாஸ் நூர்தீன் போன்றவர்கள் இஸ்ரேலின் ஏஜன்டுகள்.. ஏன் இவ்வாறு பொய் சொல்லி அரசியல் செய்கிறார்?

    ReplyDelete
  3. Unp not protected gotha .
    Entire Yahapalana protected MR family from the jail.why you do not blame yahapalana president.

    ReplyDelete
  4. Because yahapalana my3 gave you colombo mayor ticket.

    ReplyDelete

Powered by Blogger.