Header Ads



மது தடைச்சட்டத்திற்கு எதிராக 21 பெண்கள் தனித்தனியாக மனுத்தாக்கல்

மதுபானம் விற்பது, வாங்குவது மற்றும் மதுபானச் சாலைகளில் பெண்கள் பணிபுரியத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் குழுவொன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிரபல சிங்கள சினிமா நடிகை ஸ்வர்ணா மல்லவராச்சி தலைமையில் சுமார் 21 பெண்களைக் கொண்ட குழுவொன்றே தனித்தனியாக குறித்த தடைச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

பெண்களுக்கு மதுபானம் விற்றல், வாங்குதல் மற்றும் மதுபானச் சாலைகளில் பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து சமூகத்தின் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்குரல்களையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இவ்விவகாரத்தில் தலையிட்டிருந்ததுடன், மங்கள சமரவீரவின் வர்த்தமானி அறிவித்தலையும் ரத்துச் செய்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் செயற்பாட்டுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளதுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக பிரபல நடிகை சமனலி பொன்சேகா வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று 21 பெண்கள் தனித்தனியாக குறித்த தடைச்சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் இரண்டு பேர் முஸ்லிம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.