Header Ads



2008 ஆம் ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டுவரை பேரனர்த்தம் ஏற்பட்டிருந்தது

பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு ஏற்ப குற்றம்சாட்டப்பட்டவர்களிடையே கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலர் இருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியொன்றை அமைத்து 2015க்கு பின்னோக்கிச் செல்வோம் என்று அவர்கள் குறிப்பிடுவது அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று ஊழல் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவேயாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று பிற்பகல் (19) வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

யார் எந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்ள முயற்சித்த போதும் மக்கள் பணத்தை திருடிய அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுக்கொடுத்து அப்பணத்தை மீண்டும் அறவிடும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களும் அரசாங்கத்தில் உள்ள சிலரும் மத்திய வங்கி பிணை முறி அறிக்கை தொடர்பாக அரசியல் மேடைகளில் கூக்குரலிட்ட போதும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல, 2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒரு பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று வேறு கட்சியிலிருந்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் குறித்து பேசுபவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்து 'அ' என்பதை அறியாதவர்களாக இருப்பது கவலையளிக்கிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பண்டாரநாயக்கவின் இரத்தத்தினாலும் அம்மையாரின் கண்ணீரினாலும் வளர்க்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாவது முறையாகவும் அழித்துவிட அவர்கள் எண்ணுகிறார்கள் என்று தெரிவித்தார்.

பதின்மூன்று வருடங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி ஐம்பது வருடங்கள் அதன் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்ட தனக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பாதுகாத்தவர்கள் யார் என்பது நன்றாக தெரியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அனைவரையும் நாட்டை நேசிக்கின்றவர்களையும் இணைத்துக்கொண்டு தூய அரசியல் இயக்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

மொனராகலை மாவட்ட மக்கள் நீண்ட காலமாக முகம்கொடுத்துள்ள நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான தீர்மானங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வரலாற்றில் முதல் முறையாக மொனராகலை மாவட்டத்திற்கு நீர்ப்பாசன அமைச்சுப் பதவியை வழங்கியது அப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்காகவேயாகும் என்றும் நாட்டின் எந்தவொரு மாவட்ட மக்களினதும் உரிமைகளை வேறொருவர் பிடுங்கிக் கொள்ள தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சங்கைக்குரிய மகாசங்கத்தினருக்கு செவிசாய்ப்பதில்லை என்று சிலர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தான் மகாசங்கத்தினர் கூறும் விடயங்களுக்கு செவிசாய்ப்பவர் மட்டுமன்றி அவர்கள் கூறும் விடயங்களை செய்கின்ற ஜனாதிபதியாவேன் என்றும் தெரிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை அமைந்துள்ள கண்டி மாநகரில் காரோட்ட பந்தயம் நடத்த தயாரான போது அப்படி செய்ய வேண்டாம் என்று அன்று மல்வத்தை, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் கூறியதை கவனத்தில் எடுக்காதவர்கள் யார் எனக் கேட்ட ஜனாதிபதி, சிறந்ததோர் சமூகத்தை உருவாக்குவதற்கான பயணத்தில் நாட்டின் அனைத்து சமயத் தலைவர்களினதும் குரலுக்கு செவிசாய்க்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றுதலுடன் வெல்லவாய மஹஜன விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. 

முன்னாள் அமைச்சர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி செயலாளர் ஜகத் புஷ்பகுமாரவினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர்களான எஸ்.பி திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, விஜித் விஜயமுனி சொய்சா, சுமேதா பீ ஜயசேன, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. He will not be abe to tell the masses that he has done that and this. He can talk only the previous mistakes and will take action in future.

    ReplyDelete

Powered by Blogger.