Header Ads



ஜெருசலம் விவகாரம், SLTJ இலங்கை அரசுக்கு பாராட்டு

ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை புறக்கணித்து, இலங்கையில் அமைந்துள்ள பலஸ்தீன் தூதரகத்திற்கு சொந்தமான இடமொன்றையும் வழங்கிய இலங்கையின் ஆளும் அரசாங்கத்திற்கு SLTJ நன்றி தெரிவித்துக் கொள்கிறது. என்று அமைப்பின் செயலாளர் ஹிஷாம் MISc வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்திற்கு சொந்தமான இடத்தை அபகரித்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை மேற்கு நாடுகளின் துணையுடன் அமைத்துக் கொண்ட யூதர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் பலஸ்தீனத்தின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான தமது எதிர்ப்பு, கண்டன ஆர்பாட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 12.12.2017 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கொழும்பில் நடைபெற்றது.

இதே வேலை அமெரிக்க அதிபரின் ஜெரூஸலம் பற்றிய அறிவிப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 08.12.2017 அன்று வெளியிட்ட கண்டன அறிக்கையில் இலங்கை அரசு இது தொடர்பில் தமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

ஜெரூஸலம் விவகாரம் தொடர்பில் இலங்கையின் நிலைபாட்டை அறிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு அமெரிக்க அதிபரின் அறிவிப்பை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேலுக்கான இலங்கையின் தூதரகம் தொடர்ந்தும் டெல்அவிவ் நகரில் தான் இயங்கும் என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மிகுந்த மகிழ்சியையும், பலஸ்தீன் விவகாரத்தில் ஓரளவு மன அமைதியையும் தரும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் அமைந்திருக்கும் பலஸ்தீன தூதரகத்திற்கு சொந்தமான இடம் ஒன்றை கொழும்பு – 07 ஹேவா அவனியூவில் ஒதுக்கிக் கொடுத்து அதற்குறிய காணி உறுதி இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் எம்.எச். சயிட் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் குடியரசு கொழும்பில் அதன் புதிய தூதரகத்தை நிர்மாணிக்கும் வகையில் இலங்கை அரசினால் இக்காணித்துண்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச மருந்து அமைச்சரும், இலங்கை - பலஸ்தீன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் செயலாளருமான பிமல் ரத்னாயக்க ஆகியோர் குறித்த காணி உறுதியை வழங்கி வைத்துள்ளார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் நடுநிலையான இந்த நிலைபாடு இலங்கை முஸ்லிம்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதுடன், பலஸ்தீன் விவகாரத்தில் தொடர்ந்தும் நடுநிலைத் தன்மையுடன் நடந்து கொள்ளும் இலங்கை அரசுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் குறித்த அறிக்கையில் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ

1 comment:

  1. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ??
    😅😅😅😅😅.

    ReplyDelete

Powered by Blogger.