December 04, 2017

நான் மஹிந்தவை, ஆதரிக்கும் ஒருவன் - NM ஷஹீத்

உள்ளூராட்சிமன்ற வர்த்தமானி அறிவித்தலில் நாம் சுட்டிக்காட்டிய பிழைகளை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்றுக்கொண்டு, திருத்தங்களை மேற்கொள்ள இணங்கியது ஓர் நீதியான அனுகுமுறையாகும். எனவேதான் வர்த்தமானிக்கெதிரான மனுவை வாபஸ் பெற முடிவுசெய்தோம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.ஷஹீத் தெரிவித்தார். 

உள்ளூராட்சிமன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக மேற்கொண்டிருந்த மனு தொடர்பில் நவமணி வார இதழுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.  அவரது முழுமையான செவ்வியை இங்கே தருகின்றோம். 

கேள்வி: உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமைக்கான காரணம் என்ன? 
பதில்: ஆம். நான் முதலில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தம் தொடர்பான பின்னணி, வரலாற்றை தெளிவுபடுத்திவிட்டு விடயத்திற்கு வருகின்றேன். 
நாம் இவ் வழக்கை தாக்கல் செய்த பின்னரே உள்ளூராட்சி தேர்தலுக்கான முஸ்தீபுகளை தேர்தல் ஆணையகம் ஆரம்பித்துள்ளது. இந்த தேர்தல் ஓர் புதிய முறையாக உள்ளது. ஆரம்ப காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் வட்டார அடிப்படையில் கட்சிகள் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் தனித்துக் கேட்கும் ஒரு காலம் இருந்தது. 1980 களுக்கு பின்னால் விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த விகிதாசார முறையில் சில குறைபாடுகள் இருந்தாலும்கூட, சிறுபான்மையின கட்சிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததை கண்டோம். சில இடங்களில் 90வீத வாக்காளர்கள் சிங்களவர்களாக இருந்தாலும், முஸ்லிம் ஒரு உள்ளூராட்சி அதிகார சபையின் தலைவராக தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. எனினும், அந்த முறைமையில் வேறு சில குறைபாடுகள் காணப்பட்டன. வட்டார முறையைப் போன்று, குறிப்பிட்ட வட்டாரத்துக்கான அங்கத்தவர் இல்லாமை, தேர்தல் கால உட்கட்சிப் பூசல்கள், கோஷ்டிச் சண்டைகள், அதிக பணச் செலவு என இன்னோரன்ன காரணங்களால் இம்முறை மாற்றப்பட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றது. அந்த அடிப்படையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து, கலந்தாலோசித்து 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொகுதி வாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை ஒன்றிணைத்து கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தொகுதிவாரி முறையில் 60 வீதமும், 40 வீதமானோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் இரண்டு வேட்பாளர்  பட்டியல்கள் முன்வைக்கப்பட வேண்டும். 30 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டும்.  புதிய தேர்தல் முறையை அமுல்படுத்த வேண்டுமாயின் உள்ளூராட்சி அதிகார சபை ஒவ்வொன்றையும் வட்டார ரீதியாக பிரிக்கவேண்டிய தேவையேற்பட்டது.          தேசிய எல்லை நிர்ணய குழுவை அமைத்து இவ்வேலைகளைத் தொடர மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இன ரீதியான கணக்கெடுப்பு, புவியியல் ரீதியான எல்லை வகுத்தல், தெரிவுசெய்யப்படவேண்டியவர்களின் எண்ணிக்கை, எல்லைகளை வகுக்கும்போது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி போன்ற நான்கு விடயங்களை கருத்திற்கொண்டு எல்லைகளை பிரித்து, சிபாரிசுகளுடன் அறிக்கை சமர்ப்பிப்பதே குழுவின் பணி.  மேற்படி நான்கு விடயங்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட, பல அங்கத்தவர் வட்டாரமாக அல்லது தனி அங்கத்தவர் வட்டாரமாக பிரகடனப்படுத்தும் அதிகாரமும் குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அறிக்கை அமைச்சரினூடாக ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. வட்டார எண்ணிக்கை, எல்லைகள், பெயர்கள், தனி, பல அங்கத்தவர் வட்டாரங்களின் விபரங்கள் அதில் உள்ளடங்கியிருக்கும். எல்லைகளில் ஏதும் பிரச்சினைகள் இருக்குமாயின், மாற்றங்களை மேற்கொள்ள மேலுமொரு குழுவை அமைத்து ஆராயவும் அமைச்சருக்கு திருத்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மாற்றங்களின் போது முன்னாள் குழுவின் நான்கு விடயங்களையும் கருத்திற்கொண்டு மாற்றங்களைச் செய்யலாம். தவிர, வேறு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. 2ஆவது குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை 17.02.2017ஆம் திகதி வர்த்தமானியில் வெளியானது. 
2ஆவது குழுவுக்கு எல்லைகள் மற்றும் பெயர்களில் மாத்திரமே மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் குறித்த வரையறைகளைத் தாண்டியும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர். 
கேள்வி: உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலத்தின் வரையறைகளைத் தாண்டி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எவை? 
பதில்: தனி அங்கத்தவர் வட்டாரங்களை பல அங்கத்தவர்கள் வட்டாரங்களாகவோ! பல அங்கத்தவர் வட்டாரங்களை தனி அங்கத்தவர் வட்டாரமாகவோ மாற்றும் அதிகாரம் 2ஆம் குழுவுக்கு திருத்த சட்டமூலம் அதிகாரமளித்திருக்கவில்லை. ஆனால், இக்குழு அந்த மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் 7 வட்டாரங்கள் மாற்றமடைந்துள்ளன. அவை வட்டார இலக்கம் 7, 9, 13, 19, 22, 28, 29 மற்றும் 38 ஆகியன. இவை முதலாவது வர்த்தமானியில் பல அங்கத்தவர் தேர்தல் வட்டாரங்கள் என பெயரிடப்பட்டிருந்தன. 2ஆம் குழுவினர் இதனை தனி அங்கத்தவர் வட்டாரங்களாக மாற்றியுள்ளனர். 3, 6, 33, 35, 40 போன்ற தனி அங்கத்தவர் வட்டாரங்களை, பல அங்கத்தவர் தேர்தல் வட்டாரங்களாக மாற்றியுள்ளனர்.   கண்டி மாநகர சபையில் பல அங்கத்தவர் தேர்தல் வட்டாரங்கள் இரண்டை தனி அங்கத்தவர் வட்டாரங்களாக மாற்றியுள்ளனர். கொட்டபொல பிரதேச சபையிலும் பல அங்கத்தவர் தேர்தல் வட்டாரங்கள், தனி அங்கத்தவர் வட்டாரங்களாக மாற்றியுள்ளனர். அதேபோன்ற மாற்றங்கள் பண்டுவஸ்நுவர பிரதேச சபை, ஹாலி எல பிரதேச சபை, எம்பிலிப்பிடிய பிரதேச சபைகளிலும் ஏற்பட்டுள்ளன. 

கேள்வி: இந்த மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? 
பதில்: முதலாவது, இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவை, தேசிய எல்லை நிர்ணய குழுவால் குறிக்கப்பட்டவை. மாற்றங்கள் 
தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு எதிரானதாகும். இதனால், மக்கள் எதிர்பார்த்திருந்த தனி அங்கத்தவர் வட்டாரங்க- பல அங்கத்தவர் தேர்தல் வட்டாரங்கவும், பல அங்கத்தவர் தேர்தல் வட்டாரங்கள்- தனி அங்கத்தவர் வட்டாரங்களாகவும் மாற்றமடைந்துள்ளன. இது அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை சட்டத்திற்கு முரணாக மாற்றப்பட்டு, பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.  2ஆவது குழுவின் அறிக்கையை அமைச்சர் எவ்வித ஆய்வும் செய்யாது வர்த்தமானி வெளியிட்டுள்ளார். இதனால் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் பிழைகள் பலதையும் கொண்டுள்ளது. எனவேதான் இதனை முற்றாக ரத்து செய்யவேண்டுமென்று நாம் கோரினோம். 

கேள்வி: தேர்தலை பிற்போட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியையும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவையும் காப்பாற்றும் நோக்கில் நீதிமன்றம் சென்றதாக கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மை என்ன? 
பதில்: முதலில், எனக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன். அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய, ஏன் அவரே எனக்கு உத்தரவிடவேண்டும். 

கேள்வி: இல்லை. தேர்தலை பிற்போடுவதற்கான ஊர் உக்தியாக இதனைப் பயன்படுத்தியிருக்கலாமே?
பதில்: இவ்வாறானதொரு வழக்கைத் தாக்கல் செய்தமைக்காக தேர்தலை ஒத்திப்போட வேண்டிய அவசியம் இல்லை. வர்த்தமானியில் நடைபெற்றுள்ள பிழைகளையே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாம் சமயத்தில் சுட்டிக்காட்டாவிடின், தேர்தலின் பின்னர் யாராவது சுட்டிக்காட்டி, தேர்தல் செல்லுபடியற்றது என வாதாடினால் எவ்வாறிருக்கும்? மீண்டுமொரு தேர்தல் வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே தற்போதே பிழைகளை திருத்திக்கொண்டால் ஏக காலத்தில் எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க ஏதுவாக இருக்கும். 

கேள்வி: இதனால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படாதா?
பதில்:  நிச்சயமாக இல்லை. தேர்தல் ஆணையகம் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தலை அறிவித்திருப்பதுகூட பிழையானதேயாகும். தேர்தல்கள் அனைத்தும் ஏக காலத்தில் நடத்தப்படவேண்டும் என்பதே ஆணையகத்தின் கொள்கை. அதனடிப்படையில்தான் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. செலவு, வீண்விரயம் போன்றனவே தேர்தலை ஒரே தினத்தில் நடத்தக்காரணம். இத்தீர்மானத்தை தேர்தல் ஆணையகமே கொண்டு வந்துவிட்டு, தற்போது மாற்றம் செய்ய முனைகின்றது. தேர்தல் ஆணையகம் தேர்தல் நடத்த வேண்டுமென்று முயற்சிப்பது போன்றே, தேர்தலின் பின்னால் வர இருக்கும் மனுக்களை தவிர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.  தேர்தல் ஆணையகம் இவ்வாறு செய்யவேண்டிய அவசியமும் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் முன்னைய தீர்ப்பொன்றின் படி, திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு அதனடிப்படையில் தேர்தல் நடத்த தடையாக இருப்பின் பழைய முறையில் தேர்தல் நடத்தலாம். இதனால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படாது தவிர்க்கலாம். நாம் சுட்டிக்காட்டியதை விட வேறு 40 பிழைகளும் இருப்பதாக இப்போதே தேர்தல் ஆணையகம் கண்டுபிடித்துள்ளது. அவர்கள் நாம் தாக்கல் செய்யமுன்பே இதுபற்றி ஆராய்ந்திருக்க வேண்டும்.  பெப்ரல் போன்ற நிறுவனங்கள் மக்கள் வாக்குரிமைக்காக போராடுவதாக கூறிக்கொள்கின்றனர். அவர்கள் தேர்தல், வாக்குரிமை போன்றவற்றிற்காகவே செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் அதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள். அவர்களே வர்த்தமானியில் உள்ள பிழைகளை கருத்திற்கொள்ளவில்லை. நாம் தவறுகளை சுட்டிக்காட்டும்போது மாத்திரம் மக்கள் வாக்குரிமை நினைவுவருவதேன்?

கேள்வி: நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் விடுதலை முன்னணியினர் பாதையில் இறங்கி போராடுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து?
பதில்: புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் ஒரு வட்டாரம் அல்லது அங்கத்தவரையேனும் பெற்றுக்கொள்ள முடியாத கட்சி தான் மக்கள் விடுதலை முன்னணி. அவர்களுக்கு வெல்ல முடியாத ஓர் தேர்தலுக்காக கூப்பாடு போடுவதில் பயனில்லை. 

கேள்வி: மனுவை வாபஸ் பெறும்படி அழுத்தங்கள் அல்லது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதா?
பதில்: பலர் வாபஸ் பெறும்படி 
கோரினர். கதைத்தனர். ஓர் தீர்வுக்கு வரலாமென்று கோரினர். 

கேள்வி: இப்போது வாபஸ் பெற்றதும் அதற்காகவா? 
பதில்: இல்லை. நாம் சுட்டிக்காட்டிய பிழைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். திருத்தங்களை மேற்கொள்ளவும் இணங்கினார். அது ஓர் நீதியான அனுகுமுறையாகும். எனவேதான் மனுதாரர்கள் வாபஸ் பெற முடிவுசெய்தனர். 
எனக்கு தேர்தலை நிறுத்தவேண்டுமென்ற தேவை இருக்கவில்லை. நடைபெற்றுள்ள தவறுகள் மீள்பரிசீலனைக்குட்படுத்தி, திருத்தப்பட வேண்டுமென்ற தேவையே இருந்தது. எனவே அதனை சீர்செய்வோம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது. 

கேள்வி: புதிய கலப்பு தேர்தல் முறை முஸ்லிம்களை பாதிக்குமா? 
பதில்:  நிச்சயமாக தேர்தல் சிறுபான்மையினரை பாதிக்கும் என்றே கூற
வேண்டும். தேர்தல் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது எமது முஸ்லிம் அமைச்சர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். எந்த அடிப்படையில் வாக்களித்தார்கள் என்பதை கூறமுடியாது. புதிய தேர்தல் முறையால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதே தேர்தல் முறையை ஆராய்ந்தவர்களின் கருத்து. இவற்றைத் தெரிந்துகொண்டே முஸ்லிம் அமைச்சர்கள் வாக்களித்துள்ளனர். 

கேள்வி: ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து பயணிக்கும் இந்த ஆட்சியை எவ்வாறு பார்க்கின்றீர்? 
பதில்: நான் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஒருவன். இந்த அரசாங்கத்தைப் பற்றிக் கூறுவதென்றால், இது ஓர் தூய்மையற்ற கூட்டணியாகும். உதாரணத்துக்கு, ஓர் முஸ்லிம் ஆணும் இந்துப் பெண்ணும் திருமணத்தில் இணைந்துள்ளார்கள். அவர்களின் திருமணம் சட்ட ரீதியாக பதியப்பட்டிருக்கும். ஆனால், ஆண் முஸ்லிமாகவே தொடர்கிறார். பெண் இந்து மதத்தை பின்பற்றுகிறாள். அவர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தையொன்று பிறந்தால், அது எந்த மதம், பெயர், கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற தூரநோக்குமில்லை. அவர்கள் இருவரும் தனித் தனியே அவர்களது பாதையில் பயணிக்கின்றனர். பதிவு ரீதியாக இணைந்திருந்தாலும் பிரயோகத்தில் ஏதாவோர் குறை தொடரும். அதனையே இந்த அரசாங்கத்திலும் காண்கின்றேன். இவ்வாறிருக்கும் அரசாங்கத்தின் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியாது. 

(ஆதில் அலி சப்ரி)

2 கருத்துரைகள்:

He is not a member of SLFP but his hero is MR. What a joke...

Whoever wins, people like NM Saheed, Rauf Hakeem, Rishad etc only will be benefited, not the muslim community.

Post a Comment