Header Ads



இலங்கையில், சீனர்கள் திருமணம் செய்வது ஏன்..?

உலகில் இயற்கை அழகு மிகுந்த பிரதேசங்களில் தெற்காசியாவும் ஒன்றாகும். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் கரையோரப் பகுதிகள் உல்லாசப் பயணிகளுக்கு புதிய அனுபவங்களைத் தருகின்றன.

இப்பிரதேசத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மாலைத்தீவு, இலங்கை, சீசெல் ஆகிய நாடுகளில் உள்ள கரையோரங்கள் உல்லாசப் பயணிகளின் சொர்க்க பூமி என்று கருதப்படுபவையாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இயற்கை அழகுடன்கூடிய கடற்கரைகள் மலைப்பிரதேசங்கள், வனவிலங்குப் பூங்காக்கள் சூழல் நட்புறவுடன் கூடிய பிரதேசங்கள் என பலதரப்பட்ட அம்சங்களில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவருகின்றன.

தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அதிகளவில் உல்லாசப் பயணிகளை ஈர்த்துவருகின்றன. ஆனால் இலங்கையின் இயற்கை அழகு அந்நாடுகளில் இயற்கை அழகிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல என்று தைரியமாகக்கூற முடியும்.

சர்வதேச சுற்றுலா புள்ளிவிபரங்களின்படி உலகளவிய சுற்றுலா பயணசெலவினம் கடந்தவருடம் 261 பில்லியன் டொலர்களாக உள்ளது. இது முன்னைய வருடத்தைவிட 11 பில்லியன் டொலர்கள் அதிகமாகும். அதேவேளை கடந்த வருடம் 135 மில்லியன் உல்லாசப் பயணிகள் உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இது முன்னைய வருடத்தைவிட 6 சதவீதம் அதிகரிப்பாகும்.

சுற்றுலாத்துறை மூலம் இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் 3 பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. இவ்வருட எதிர்பார்ப்பு 3.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இவ்வருட இறுதிக்குள் 22 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என்றும் 2020 ஆம் ஆண்டளவில் அது 45 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அதிக அளவிலான உல்லாச பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகின்றனர். அதனையடுத்து இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தில் இருந்துவரும் உல்லாச பயணிகளே அதிக அளவில் இருந்தனர் எனினும் இவ்வாறான சீன உல்லாச பயணிகளின் அதிக வருகையினால் இலங்கைக்கு அதிக அளவில் வரும் உல்லாசப் பயணிகளில் இரண்டாவது இடத்தை இப்போது சீனா பிடித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் உல்லாசப் பயணங்களைப் பொறுத்த வரை சீன நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வதை அதிக அளவில் விரும்புவதாகத் தெரியவருகிறது.

2016 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் அதிக அளவில் பயணிக்கும் உல்லாச பயணிகள் என்ற பெருமை சீனர்களுக்கே கிடைத்துள்ளது. இதனால் சீன உல்லாச பயணிகளை கவர்வதில் இலங்கை அதிக அக்கறை எடுத்து வருகிறது. இதற்காக மேலும் ஹோட்டல்களை திறந்துள்ளதுடன் வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.

இலங்கையை பொறுத்தவரை கடந்த வருடத்தில் (2016)மட்டும் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 577 சீன உல்லாச பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இது முன்னைய ஆண்டில் (2015) 2 இலட்சத்து 14 ஆயிரத்து 783 ஆக இருந்தது.

அதிக அளவில் அந்நிய செலாவணியை சம்பாதித்துத் தரும் துறையாக சுற்றுலாத் துறையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அதற்கான திட்டங்கள் துரிதமாக வகுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களில் ஒன்று திருமணச் சுற்றுலாத் திட்டமாகும். ஏற்கெனவே உலகளாவிய ரீதியில் Wedding Tourism என்ற இந்தத் திட்டம் தற்போது பிரபல்யம் அடைந்துவருகின்றது. திருமண சுற்றுலா திட்டத்திறகு உலகளாவிய ரீதியில் 28 பில்லியன் டொலர்கள் வரை செலவிடப்படுவதாகவும் சுமார் 40 இலட்சம் சுற்றுலாப்பயணங்கள் இந்த ரீதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

தெரிவு செய்யப்பட்ட 100 சீன ஜோடிகளுக்கு இலங்கையின் பாரம்பரிய முறையில் திருமணம் நடத்திவைப்பதே இந்தத்திட்டமாகும். எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தத்திட்டத்தின்கீழ் 100 சீன ஜோடிகள் கொழும்பு மாநகரசபைக் கட்டிடத்தில் இலங்கை முறைப்படி திருமண பந்தத்தில் ஈடுபடுபவர் பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அமைச்சு மற்றும் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.

பிரதான திருமண நிகழ்வு விகாரமகாதேவி பூங்காவிலும் விருந்துபசாரம் வோடர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொள்வர்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் ஜோடிகளில் மூவர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர்கள் என்பதும் ஒருவர் கோட்டே ராஜதானி காலத்தில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிங்கள இளைஞரின் மூன்றாம் வழி பேரனாவார். இந்த இளவரசரின் வழித்தோன்றல்கள் பலர் இப்போது சீனாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த கையுடன் திருமண ஜோடிகள் அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் யாலவுக்கு தேன்நிலவுக்குச் சென்று 22 ஆம் திகதியே கொழும்பு திரும்புவர். இந்தத் திருமணத்திற்காக சீனாவிலிருந்து சுமார் 800 பேர் இலங்கை வரவுள்ளனர். திருமணம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொள்வர்.

இவ்வாறான திருமண நிகழ்வு இலங்கையில் இடம்பெறுவது முதல்முறையாகும்.

இதனைத் தொடர்ந்து வருடாந்தம் நடத்தவும் மற்றைய நாடுகள் இந்த முறையைப் பின்பற்றி இலங்கையில் தமது திருமணங்களை நடத்தும் வகையிலும் பிரசாரங்களை மேற்கொள்ளப்போவதாகவும் இலங்கை சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் முன்னாள் செயலாளர் சூயான் அவரது மனைவியான வாஹோல் ஐ அண்மையில் கொழும்பில்வைத்து திருமணம் செய்திருந்தார். இவர்களது திருமணம் சீன பராம்பரிய முறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2013 இல் 54288 ஆக இருந்தது. ஆனால் அண்மைக்காலங்களில் அது வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய புள்ளிவிபரங்களின் எதிர்வு கூறலின்படி 2019 இல் 174 மில்லியன் சீன சுற்றுலா பயணிகள் 264 பில்லியன் டொலர்கள் செலவிடுவார்கள் என கூறப்படுகிறது. இந்த எதிர்வுகூறலை இலக்குவைத்து இலங்கை சுற்றுலாத்துறை அவர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு மேற்படி திருமணத்திட்டத்தைப் பயன்படுத்தி உள்ளது. அத்துடன் சங்கரில்லா சீன ஹோட்டல் அண்மையில் திறக்கப்பட்டதுடன் மேலும் சீன ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.