Header Ads



டிரம்ப் முடிவுக்கு பாகிஸ்தான், பாராளுமன்றம் கண்டன தீர்மானம்


இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 6-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக அரபு நாடுகளின் கூட்டத்தை இன்று (சனிக்கிழமை) ஜோர்டான் கூட்டி உள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிராக, அனைத்து கட்சிகளின் சார்பாக நேற்று முன்தினம் காஷ்மீர் விவகாரங்களுக்கான மந்திரி சவுத்ரி பார்ஜீஸ் தாஹிர் கண்டன தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

தீர்மானத்தில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே போர்களும், தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த தருணத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது முஸ்லிம்கள் மீதான நேரடி தாக்குதல் ஆகும். இது சர்வதேச சட்டத்தை மீறிய செயலும் ஆகும். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் எண்.252 (1968), 267 (1969), 476, 478 (1980) மற்றும் 2334 (2016) ஆகியவற்றுக்கு எதிரானது. பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவருவதில் உலகளாவிய கருத்தொற்றுமைக்கு எதிரான செயலும் ஆகும்” என கூறப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவுக்கு எதிரான இந்த கண்டன தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. 

No comments

Powered by Blogger.