Header Ads



விக்னேஸ்வரனுக்கு தவராசாவின் பளார்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இன்னும் ஓரிரு வருடங்களிற்குள் வட மாகாணம் சிங்கப்பூராக மாறிவிடுவதைப் போன்ற ஒரு பிரம்மையில் இருந்தேன் என வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

முதலமைச்சரால் 2018ஆம் ஆண்டிற்குரிய பாதீட்டு ஒதுக்கீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இன்னும் ஓரிரு வருடங்களிற்குள் எமது மாகாணம் சிங்கப்பூராக மாறிவிடுவதைப் போன்ற ஒரு பிரம்மையில் இருந்தேன்.

மத்திய அமைச்சுகளினால் எமது பிரதேசத்திற்குள் எமது அனுசரணை இல்லாது நடத்தப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அவர்கள் செயற்படுவதற்குரிய காரணம் எமது அரசியலமைப்பில் இன்றுள்ள குறைப்பாடு.

அதற்காகத்தான் எமக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்குள் மத்திய அரசு தலையிடாத வகையிலும் அல்லது எம்முடைய அதிகாரங்களை மீளப் பெற முடியாத வகையிலும் புதிய அரசியலமைப்பு மாற்றம் வருவதற்குரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேவேளை எமக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகார வரம்பிற்குள் நாம் செய்ய வேண்டியதனைச் சரியாகச் செய்து கொண்டிருக்கின்றோமா என்பதைப் பார்ப்போம்.

எமது பாதீட்டிற்கான மொத்த நிதியினை நிதி ஆணைக்குழுவானது அவர்களிற்கு வழங்கப்பட்ட பிரமாணத்தின் அடிப்படையில் சிபார்சு செய்யலாமே தவிர ஒவ்வொரு அமைச்சிற்கும், திணைக்களத்திற்கும் அவர்களிற்குரித்தான வேலைத்திட்டங்களிற்கு நிதியினைக் குறித்து ஒதுக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது.

இவ் விடயத்தினை முதலமைச்சர் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து இம் முறைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த முறையும் கேட்டிருந்தேன்.

எமது பாதீட்டிற்கான நிதியைப் பெற்று எமது மக்களின் தேவைக்காக செலவினம் செய்வது என்பது, ஏதோ அதிகாரிகள் கடிதம் எழுதுகின்றார்கள், அரசாங்கம் தருகின்றது அதனை நாங்கள் செலவழித்து விட்டோம் என்று மார்தட்டுவது அல்ல.

எமது மாகாணத்தின் விசேட தேவைகளை அடையாளப்படுத்தி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிரற்படுத்தி நிதி அமைச்சரிற்கு அல்லது பிரதம மந்திரிக்குக் கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் அத் தேவைகளிற்கான நியாயப்பாட்டினை எடுத்தியம்புவதன் மூலமே எமது பிரதேசத்திற்கான விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதியினை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.