December 29, 2017

விலைபோகாத சிறுபான்மை கட்சி தலைவர், என்ற பெருமை எனக்கு இருக்கிறது

வடகொழும்பில் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு கலந்துரையாடல்களில், நான் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நான் தெரிவித்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

நான் கொழும்பு மாவட்ட எம்.பி. ஆனால், முழு நாட்டையும் உள்ளடக்கிய, இந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவரையும் தழுவிய தேசிய அரசியலையே நான் செய்கிறேன்.

எனினும் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் வழமையாக சொல்லப்படுவது போல் வடக்கு கிழக்கில் இருந்து வரவில்லை. மலைநாட்டிலும் எனக்கு அச்சுறுத்தல் இல்லை. கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இருந்து எனக்கு அச்சுறுத்தல் இல்லை.

ஆனால், வட கொழும்பில் மையம் கொண்டுள்ள ஒருசில அரசியல் நபர்களிடமிருந்தே எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,

என்னை பயமுறுத்தி என்னை வீட்டுக்குள் முடக்கி தேர்தலில் வெல்லலாம் என இங்கே சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், இதைவிட அச்சுறுத்தல் மிகுந்த கடந்த கால கட்டத்தையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்று போராடி கடந்து வந்தவன், நான் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள்.

அன்றும் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி ஐ.நா செயலாளர் நாயகத்தின் சார்பாக அவரது மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு தொடர்பான அதிகாரி நேரடியாக இலங்கை அரசை கோரியிருந்தார்.

ஆகவே அன்று எனக்கு அரசாங்கம் விரும்பாமல் தயக்கத்துடன் பாதுகாப்பு வழங்கியது. இன்று நாம் உருவாக்கிய நமது அரசாங்கம் விருப்பத்துடன் தயக்கமின்றி எனக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

என்னிடம் ஒட்டுக்குழுக்கள் இல்லை. என்னிடம் பாதாள குழுக்களும் இல்லை. போதை வஸ்து வியாபாரிகளும் இல்லை. அரச நிதியை கொள்ளையடித்து அதை கொண்டு வாக்குகளை விலைக்கு வாங்கும் பழக்கமும் இல்லை.

ஆகவே அமைச்சர், கட்சி தலைவர், கூட்டணி தலைவர், மனித உரிமை போராளி என்ற முறையில் சட்டப்படியான பாதுகாப்பை பெறும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆகவே இது தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

இன்று இந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரிசாத் பதியுதீன், பழனி திகாம்பரம், ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது கட்சிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார் என சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவற்றுக்கு இங்கே இருந்து சில அரசியல்வாதிகள் கட்டுக்கதைகளை எழுதி அனுப்பியுள்ளார்கள். இது என்னையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அவமானப்படுத்தும் கட்டுக்கதைகளாகும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் தேர்தல் அரசியலைப்பற்றி ஜனாதிபதி பேசவில்லை. தனது அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு தொடர்பில் அவருக்கு இருக்கின்ற பொறுப்பை அவர் செய்துள்ளார் என நான் நம்புகிறேன்.

மேலும், என்னை அறிந்த மக்களுக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும். இலங்கை அரசியல் வரலாற்றில் ஒருபோதும் விலைபோகாத சிறுபான்மை கட்சி தலைவர் என்ற பெருமை எனக்கு இருக்கிறது.

ஒருபோதும் திசைமாறாத நேர்வழியில் வந்த வரலாறும் எனக்கு இருக்கிறது. இதைவிட அரிய பல சந்தர்ப்பங்களை நான் கடந்து வந்துள்ளேன் என்பது மக்களுக்கும், நண்பர்களுக்கும் நன்கு தெரியும். இதை இலங்கை அரசியல் உலகமும் நன்கு அறியும். சிலர் மறந்துவிட்டால் அதுபற்றி நான் எதுவும் செய்ய முடியாது.

அதேபோல், எனது ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், நான் தலைமை ஏற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது.

எங்கெங்கே தேர்தல் உடன்பாடு இல்லையோ அங்கே நாம், ஒருமித்த முற்போக்கு கூட்டணியாக ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். உடன்பாடு இருக்கும் இடங்களில் நாம், ஐக்கிய தேசிய முன்னணியாக யானை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துவிட்ட, ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருசில தனிநபர்களுடனான முரண்பாடு, நமது கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு இல்லை என்பதை புரிந்துக்கொள்ளும் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும் எனக்கு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

6 கருத்துரைகள்:

ஆனால்.....முஸ்லிம் அரசியல்வாதிகளில், அதிக விலைக்கு போவர்களுக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்குமாம்.

Yes sir,I respect you.You are not racist and not for sale as of Muslim congress leaders.You are fighting for the right of minority people.

Post a Comment