Header Ads



என் மேனியில் வறுமை உள்ளது - எனது தாயும், தந்தையும் வறுமையில் கஷ்டப்பட்டனர்

வறுமை ஒழிப்பதற்கான நோக்கம் மாத்திரம் எனது மேனியில் உள்ளடங்கவில்லை. என்னுடைய மேனியில் வறுமை தாக்கம் உள்ளது. அதனை நான் வெளிப்படையாக கூறுகின்றேன். வறுமையின் துயரத்தையும் கஷ்டத்தையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

அந்த வாழ்க்கையின் நிலைமை எனக்கு நன்றாகவே தெரியும். எனது தாயும் தந்தையும் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆகவே வறுமையை ஒழிக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பல்துறைசார் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பிராந்தியத்தில் வறுமையை இல்லாதொழித்து, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பலமான செயற்திட்டமொன்று அவசியமாகுமென தெரிவித்தார்.

பிராந்தியத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்திய ஜனாதிபதி, உலகில் எந்தவொரு நபரும் பசியுடன் காணப்படாத வகையில் செயற்படவேண்டியது உலக நாடுகளின் கடமையும் பொறுப்பும் ஆகுமென தெரிவித்தார்.

வறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் இவ்வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பெயரிடப்பட்டுள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருட மாநாட்டினை இலங்கையில் நடத்த முடிந்தமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, பிம்ஸ்டெக் அமைப்பின் குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு பிராந்தியத்தின் சகல நாடுகளினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்தினார்.

பங்களாதேஷ் நிதி, திட்டமிடல் அமைச்சர் மொஹமட் அப்துல் மன்னன், பூட்டான் நிதி அமைச்சர் நம்கெயி தோர்ஜி, மியன்மார் விவசாய, விலங்கு வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் லாச்சோ, தாய்லாந்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நதாபித், ஸ்நிடிவொக்ஸ் உள்ளிட்ட பிரதிநிதிளும் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் ஸ்ரீயானி வீரக்கோன் உள்ளிட்ட குழுவினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.

No comments

Powered by Blogger.