Header Ads



இலங்கையில் மூன்றாம் பாலினத்தவர்கள், உரிமைகளை இழந்துள்ளதாக கவலை

இலங்கையில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகளை இழந்து அடையாளமே இல்லாதவர்களாக வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக நுண்கலைத்துறை காண்பியற் கலைப்பிரிவின் ஆய்வாளரான ரவிச்சந்திரன் சுதா தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் காண்பியற் கலையினூடாக சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. இதன்போது இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வியலில் உள்ள அவஸ்தையை ஏனைய சகலருக்கும் புரிய வைக்கும் விதத்தில் பரந்துபட்ட அக்கறை தேவையாகவுள்ளது என்பதனால் சமூகப் பிரக்ஞையை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் அனுபவிக்கும் சொல்லொண்ணாத் துயரங்களை முடிவுக்குக் கொண்டு வர மானிடர் என்ற ரீதியில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும்.

தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் ஏதோவொரு பால் வேறுபாடு காரணமாக மூன்றாம் பாலினத்தவர்களாக தங்களைப் வெளிப்படுத்தும் அவர்கள், மனிதர்களாக நடமாடினாலும் உண்மையில் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லுந்தரமன்று.

சமூகத்தில் பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையிலான பாலினப்பாகுபாடு மற்றும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

அவ்வாறானதொரு சமூக வாழ்வியலின் மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்கள் இதை விடவும் பல சங்கடங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.

மூன்றாம் பாலினத்தவர்களாக அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதே ஒரு சமூக கலாச்சாரப் பிரச்சினையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.