Header Ads



மெகசீன் சிறைசாலை, வாசலில் நடந்த திருமணம்


திருமணம் முடிந்த 30 நிமிடங்களிலேயே தம்பதியினரை பிரித்து சட்டம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருட சிறைத்தண்டனைக்குரிய கைதியான செனரத் பந்துல லியனாராச்சி என்பவர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர் வத்தளையில் வசிக்கும் சவீட்டி ஷாலின் சமிளா என்ற யுவதியையே காதலித்து வந்துள்ளார்.

காதல் சிறைச்சாலையிலும் காதலி வீட்டிலும், பிரிந்திருந்த நிலையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் உரிமைக்கான அமைப்பிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளனர்.

அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட குறித்த அமைப்பு அனைத்து சட்டவரைபுகளுக்கும் ஏற்பட இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இன்றைய தினம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, சோதிட கணிப்புக்களுக்கு அமைய இன்று முற்பகல் 10 மணிக்கு சுப முகூர்த்த வேளையில் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் உரிய நேரத்திற்கு திருமணம் நடைபெறவில்லை. 

மணமகனான தண்டனை கைதி சிறைச்சாலைக்கு வெளியே வரவில்லை.

அலங்காரத்துடன் காத்துக்கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், அகலவிழிப்பார்வையுடன் மௌனியானாள்.

அப்பொழுது சுமார் 10.30 மணி ஆகிவிட்டது, சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இவர்களை நோக்கி வருகைத்தருவதை விழியுற்றாள்.

அப்பொழுது தனது காதலன் அவர்களுக்கு பின்னால் சிறைக்கைதிக்குரிய சீருடையில் வருகை தருவதை கண்டு ஆனந்தமடைந்தாள் மணமகள்.

இருவரும் பூ மாலைகளை மாற்றிக்கொண்டனர், மோதிரங்களையம் அணிவித்துக்கொண்டனர்.

பின்னர் மாலைகள் மற்றும் மோதிரங்களை கழற்றிக்கொண்டு மணமகள் இல்லத்தரசியாக வீட்டிற்கும், மணமகன் தண்டனைக்கைதியாக சிறைச்சாலைக்கும் சென்றனர்.

மணமக்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி காலம் பதில் சொல்லும் என்ற பதிலுடன் நிலத்திற்கு கண்ணீரை வார்த்துவிட்டு பிரிகையில் அங்கு சென்றிருந்த மதகுருமார்களும் மணமக்களுக்கு ஆசீர்வாதத்துடன் கண்ணீரையும் வெகுமதியாக வழங்கி சென்றனர்.

மணமகள் தரப்பில் அருட்தந்தை சக்திவேல் வருகை தந்திருந்ததுடன், மணமகன் தரப்பில் பௌத்த மதகுருவொருவரும் வருகை தந்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் பெற்றோர் உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.