Header Ads



யாராவது என்னிடம் வந்து, அஷ்ரப் எவ்வாறு காலமானார்? என்று கேட்டால்..

தலைவர் அஷ்ரப்புக்கு பின்னரான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்கமற்ற பயணம் ஒன்றை தொடர்ந்து முன்னெடுத்து வருவதனாலேயே ஏனைய கட்சிகள் தோற்றம் பெறுகின்றன என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரப் தெரிவித்தார்.

சமகால அரசியல் நடப்புகளில் முஸ்லிம்களின் அரசியல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை  பயக்க வேண்டும் என்பதற்காகவேதான் அவை உருவாக்கப்பட்டன என்று நான் நம்பவில்லை. சில தலைவர்கள் உண்மையான எண்ணங்களையும் கொண்டிருக்க கூடும். ஆனால் அவர்களின் கட்சிகள் மூலமாக முஸ்லிம் சமுதாயத்துக்கு விடுதலை, விடியல், விமோசனம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் உண்மையாக நன்மைகளை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருபவர்களை இன்று நிஜத்தில் காண முடியாமல் இருக்கின்றது, பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றை அடைய வேண்டும் என்கிற சொந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களையே காண முடிகின்றது.

எனது தந்தையார் எம். எச். எம். அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு சமூக விடுதலையை பெற்று கொடுத்து விட்டுத்தான் மரணித்தார். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு கட்சி அவசியம் என்கிற நோக்கத்துக்காகவே 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி வழி நடத்தினார்கள்.

ஆனால் இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்துனர்களுக்கு நோக்கம் ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அவர்களுடைய அரசியல் நோக்கம் குறித்து அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது. வேண்டும் என்று அவர்கள் நோக்கம் அற்ற பயணத்தை செய்பவர்களாகக்கூட இருக்க கூடும் அல்லது அவர்களுடைய பயணம் பற்றிய தெளிவு அவர்களிடம் இல்லாது இருத்தல் வேண்டும்.

2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னரான 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்ல போகின்ற பாதை எமக்கு நன்றாகவே விளங்கி விட்டது. நாம் கண்களால் கண்ட, காதுகளால் செவிமடுத்த, புத்தியால் விளங்கி கொண்ட விடயங்களும், சிலர் நடந்து கொண்ட விதங்களும் எமக்கு மிகுந்த வேதனையை கொடுத்தன. தந்தையார் மரணித்து 24 மணித்தியாலங்கள்கூட ஆகி இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக தீர்மானம் எடுக்க கூடிய மன நிலையோ, அதிகாரமோ எமக்கு இருக்கவில்லை. அப்போது நடந்த சம்பவங்களுக்கு வெறுமனே சாட்சிகளாக மாத்திரம் அம்மாவும், நானும் நின்றிருந்தோம தவிர வேறு எதுவும் எம்மால் செய்ய முடியவில்லை.

ஸ்தாபக தலைவர் அஷ்ரப் கட்டி அமைத்து காட்டிக் கொடுத்துதவிய பாதையில் இக்கட்சி செல்வதாக இல்லை. முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்ற வழி முறையில் இக்கட்சி பயணிப்பதாக இல்லை. முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற நோக்கத்தில் இது நகர்வதாக இல்லை. ஒரு தனிப்பட்ட நபரின் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்கின்ற பயணம் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தவர்கள் நாங்கள். இக்கட்சி எமக்கு ஒரு குழந்தையை போன்றது. ஆகவேதான் தாயாரோ, நானோ 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து நடைபெற்ற ஏராளமான பல சம்பவங்கள் பற்றி நேரடியாக தெரிந்து இருந்தும் வெளியில் வந்து பேசாமல் உள்ளோம் அதில் எமக்கு நாட்டமும் கிடையாது.

யாராவது என்னிடம் வந்து தந்தை எவ்வாறு காலமானார்? என்று கேட்டால் அவர் ஹெலிகொப்டர் பயணம் ஒன்றில் இறந்து போனார் என்றுதான் நான் பதில் கூறுவேன். அதற்கு காரணம் யார்? என்று கேட்டால் அக்கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது. அவ்வாறு ஒரு கேள்வியை கேட்காமல் அஷ்ரப் என்கிற தலைவரை அரசியல் அரங்கத்தில் இருந்து அகற்றுவதன் மூலம் அதிக உச்ச பட்ச நன்மைகளை அடைய எத்தனித்தவர் யார்? என்று வினவுவதே மிக பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது எண்ணம் ஆகும்.

எம். எச். எம். அஷ்ரப் மரணித்த நாளில் இருந்து அரசியல் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அவர் உயிருடன் இருந்திருப்பின் இவ்வாறு நடந்திருக்க மாட்டாது. முஸ்லிம் அரசியலை மாத்திரம் அன்றி தேசிய அரசியலையும்தான் சொல்கின்றேன். அவரை அழிக்க திட்டமிட்டு எவரேனும் சூழ்ச்சி செய்திருப்பின் யார் அதை செய்தார்கள்? என்று கேட்காமல் யாருக்கு அதனால் நன்மை? என்பதைத்தான் கேட்க வேண்டும்.

பொது அரசியல் விடயமாகவும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரம் அன்றி சிங்களவர்கள், பறங்கியர்கள், மலாயர்கள், ஆதிவாசிகள் போன்றவர்களும் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் அனைவருடனும் முஸ்லிம் சமுதாயம் கட்டாயம் சம்பந்தப்பட்டு கொள்ள வேண்டும். ஆனால் இதற்கான வழியை முஸ்லிம்களே ஏற்படுத்தி கொள்ள வேண்டி உள்ளது.

இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இங்கு ஒரு பிரச்சினை அடிக்கடி நடந்துதான் வருகின்றது. அது என்னவென்றால் நியாயமான, நீதியான முறையில் அதிகாரம் வழங்கப்படுவதில்லை, ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயத்துக்கு அதிகாரம் கூடுதலாக அல்லது குறைவாக வழங்கப்படுகின்றது, கூடுதல் அதிகாரத்தை பெறுகின்ற சமுதாயம் அவர்களை உயர்ந்த இனமாக நினைத்து ஏனைய சமுதாயங்களை அடக்கி ஆள முற்படுகின்றது. இதனால்தான் 1948 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் இன்னமும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்தை கண்டு கொள்ள முடியாமலேயே உள்ளது. முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்காகவும், தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்காகவும் ஓங்கி குரல் கொடுக்கின்ற காலம் மலர வேண்டும். முஸ்லிம்களை பாதுகாக்க அரசியல் தீர்வு ஒன்றை கொடுங்கள் என்று தமிழ் மக்களும், தமிழர்களை சந்தோஷப்படுத்துகின்ற அரசியல் தீர்வு ஒன்றை கொடுங்கள் என்று முஸ்லிம் மக்களும் கோருதல் வேண்டும்.

அதே போல சிங்கள மக்களின் பயத்தை போக்குகின்ற, பௌத்த சமயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்கிற நம்பிக்கையை கொடுக்கின்ற தீர்வு ஒன்றை கொடுங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புதல் வேண்டும். சிங்களவர், கிறிஸ்தவர், தமிழர், முஸ்லிம் என்று நாம் அனைவரும் அனைவருக்குமாக பேசுதல் வேண்டும். இம்மாற்றத்தை கொண்டு வர அரசியல்வாதிகளை மாத்திரம் நம்பி பயன் இல்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தை மாற்றி அமைத்த புரட்சியை வரலாற்றில் பதிவு செய்த அந்த மாபெரும் மக்கள் சக்தியால் இந்த மாற்றத்தையும் நிச்சயம் கொண்டு வர முடியும். இப்படிப்பட்ட இலங்கை இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

4 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே நீங்கள் கனவுகாண்கின்ற இலங்கைக்காக எம்போன்றவர்கள்
    பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி
    மைத்திரிபால சிறிசேனா அவர்களின்
    கரங்களை பலப்படுத்துவததுடன் நாட்டிலுள்ள எல்லா புத்திஜீவிகளும்
    முயற்சிக்க இதற்காக வேண்டும்.

    U.L.A. Hassen Ret. ADP. Akkaraipattu.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே நீங்கள் கனவுகாண்கின்ற இலங்கைக்காக எம்போன்றவர்கள்
    பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி
    மைத்திரிபால சிறிசேனா அவர்களின்
    கரங்களை பலப்படுத்துவததுடன் நாட்டிலுள்ள எல்லா புத்திஜீவிகளும் இதற்காக முயற்சிக்க வேண்டும்.

    U.L.A. Hassen Ret. ADP. Akkaraipattu.

    ReplyDelete
  3. Y so reluctancy? Highly anticipated your entry in to the fray folowing father's footsteps? U feel filthy pool? Have to encounter nasty corrupted guys? Y not give a try? U have got simpsthetic votes?
    Leader getting hicup over the otherside

    ReplyDelete
  4. அமான் அவர்களே, இந்த பதிவின் நோக்கம் தான் என்ன? இதில் உள்ள உள்ளடக்கும் ஒன்றும் புதிதானவையும் அல்ல புதிரானவையும் அல்ல. முஸ்லீம் காங்கிரஸ் என்ற இஸ்தாபனம் அன்று மக்களுக்கு தேவையாக இருந்தது அதில் அஷ்ரப் என்ற நபர் இல்லை என்றால் ஒரு மொஹிடீனோ அல்லது அகமட் லெப்பையோ இருந்திருப்பார்கள் முஸ்லிம்களின் அரசியல் பயணம் சென்று கொண்டுதான் இருந்திருக்கும்.
    அரசியல் என்பது மக்கள் வாழ்வியல் அது மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து பயணிக்க வேண்டும். அதை தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது சிறு வயதுமுதல் பாடசாலை மேடைகளில் இருந்து அமைச்சர்களும் நடனமும் (18 வயது இருக்கலாம்... இது பதியுதீன் மஹ்மூதின் கல்வித்திட்டத்தில் வந்த ஒரு பாடத்தை விமிர்சித்த சந்தர்ப்பம் ), 77 களில் தமிழர் விடுதலை கூட்டணி மேடைகளில் ( இந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஈழம் எடுத்து தரவில்லை என்றால் இந்த அஷ்ரப் எடுத்து தருவான்...) 1980 களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேடைகளில், வட்ட மேசை மகாநாடு இப்படி மக்களுடன் மக்களாகவும், நேர்த்தியான அரசியல் அறிவுடனும், ஈடுபாடுனனும், அர்ப்பணிப்புடனும், தன்மானத்துடனும், இறையச்சத்துடனும் ( இது உள்ளவன் எதட்கும் அஞ்சவும் மாட்டான், எவரிடமும் எதிர்பாக்கவும் மாட்டான்) இப்படி பயணித்திருக்க வேண்டும். இவை அனைத்தும் மாபெரும் சவால்களுக்கு மத்தியில் நடந்தேறியவை. ஆக நீங்கள் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். மக்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். முடிந்தால் முயட்சி செய்யுங்கள். இந்த இடத்தில் உங்கள் தயார் அவர்களின் நல்ல உடல் ஆரோக்கியத்தத்துக்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.