Header Ads



விகாராதிபதியின் உடலை, தகனம் செய்வது பற்றி சிக்கல்


யாழ். நாகவிகாரபதியின் உடலை, தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி மற்றும் முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் அடக்கம் செய்வதற்கு பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனை தடை செய்யுமாறு யாழ். மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயாணங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை. 

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது. அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும். 

குறிப்பாக தமிழாராட்சி மாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது, தமிழாராட்சி மாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். 

நாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர்காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக்காக கொண்டே திட்டமிடப்படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும். எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மயாணத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவனை செய்ய வேண்டும். 

மேலும் விகாரபதிக்கு அஞ்சலி செலுத்துவதை நாங்கள் எந்த விதத்திலும் எதிர்க்கவில்லை. மாறாக குறித்த இடத்தில் தகனம் செய்வதனை கடுமையாக எதிர்க்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை முற்றவெளி மைதானத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. குறித்த காணி தொள்பொருள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற போதிலும், அதற்கான அனுமதியை கொழும்பில் உள்ளவர்கள் வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. 

(தீபன்)

1 comment:

  1. அந்தோனி !
    அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நீர் well done என எழுதி வரவேற்றது போன்று, அரசு எடுத்த இந்த முடிவை நாங்கள் பாராட்டமாட்டோம். இது சிறுபான்மை மீது பெரும்பான்மை சவாரி. எனவே இதனைக் கண்டிக்கிறோம். ஏனெனில் நாங்கள் முஸ்லிம்கள்.

    ReplyDelete

Powered by Blogger.