Header Ads



வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா..?

-பாறுக் ஷிஹான்-

வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா என நான் சவாலாக கேட்கின்றேன், கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிரசு கட்சியின் முஸ்லீம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளிலான தமிழ், முஸ்லீம் ஐக்கிய மாநாடு நேற்று (10) யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்ற கட்சி தமிழரசு கட்சி என பெருமையாக கூறுவேன். போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற காலகட்டத்திற்குள் வரும் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு நிகராக முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தினைக் குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்பதனை இங்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.

நீண்டகாலமாக இங்கிருந்து அநியாயமாக அகற்றப்பட்ட மக்கள் மீளவும் இங்கு வந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஆர்வத்தினைக் காட்டி இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அவ்வாறான செயற்பாடு அமைந்திருக்கவில்லை. இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை இனமாக இருப்பவர்கள் பலவிதமான பாரபட்சங்களுக்குள்ளாக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென உலகம் முழுவதிலும் தெரிவிக்கும் தமிழ் மக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மையாக சிறு சிறு இடங்களில் வாழும் மற்ற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிஸ்டவசமான விடயம்.
முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்படும், அநீதிகள், அழுத்தங்கள் எமக்குத் தான் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும்.

 எமது அரசியல் ஜனநாயக அரசியலாக இருப்பது துரதஸ்டவசமானது, பெரும்பான்மை இன மக்களை சந்தோசமாக வைத்திருப்பதே அரசியல் தலைவர்களின் போக்காக இருக்கின்றது.

ஏனெனில், பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியிருக்கின்றோம் என்ற காரணத்திற்காகவே, அதனால் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நியாயம் கிடைப்பது அரிது. வாக்குகளில் தங்கியிருக்கும் தலைவர்களுக்கு சிறுபான்மையினரின் குரல் கேட்காது. எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களின் குரல் கேட்காது.
இந்த நிலமை மாற வேண்டும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இருந்து எழுந்த ஒரு கட்சி.
அண்மைக் காலமாக, தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் குறைந்துள்ளதென்பது உண்மை. இடைக்கால அறிக்கை ஏகமனதாக வழிநடத்தல் குழுவினால் செய்யப்பட்டது. 

இந்த அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்த ஒரு விடயம்.
அரசியலமைப்பில் எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டவை. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதிலும், பௌத்த மதத்தினை உடைய பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சட்டமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின், அது பிரியோசனம் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் கூட, உண்மையான மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும். அது இலகுவான விடயம் அல்ல. மிகவும் கடினமான ஒரு விடயம்.
இருந்தாலும், இரண்டு வருடங்களாக ஏகமனதான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றோம். 

இது மக்களுக்குத் தெரிய வேண்டும். வழிநடத்தல் குழு ஏதோ அறிக்கைகளை வெளியிடுகின்றதென மக்கள் நினைப்பது தவறு. இனி மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இணைந்து செயற்படுகின்ற போது தான் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
வட, கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. வட, கிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் சரியாகவும் இருக்கலாம், 

பிழையாகவும் இருக்கலாம், அது வேறு விடயம். ஆனால், அது ஏற்படுத்தப்படுவதாக இருந்தால், வடக்கில் வாழும் மக்களின் விருப்பப்படி செய்ய முடியாது. கிழக்கில் வாழும் மக்களின் விருப்பத்துடனும் செய்யப்பட வேண்டும்.
வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமானதென யாராவது சொல்ல முடியுமா? நான் சவாலாக கூட கேட்கின்றேன். எமக்கு வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென கூவித்திரியும் எவராவது அதைச் செய்து முடிப்பார்களா? வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது. அது உண்மை, அந்த உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள்.
வட, கிழக்கு இணைப்பு என்றுமே சாத்தியமற்றதென சொல்லக் கூடாது. நாங்கள் இணைந்து வாழ்வதாக இருப்பதென்றால், அது நடக்கும், இணைய வேண்டுமென்று கூறும் ஆட்கள் தான், அவர்களே சூழ்நிலைகளை இல்லாமல் செய்கின்றார்கள்.

ஏற்படக் கூடிய சூழ்நிலையையும் கட்டுப்படுத்துவதற்காக, முஸ்லீம் மக்களையும் அன்னியப்படுத்துகின்றார்கள். முஸ்லீம் மக்களையும் இணைத்து செயற்படுத்தாமல், இது தான் நடக்க வேண்டும். வட, கிழக்கு இணைய வேண்டுமென்று நினைக்கும் நாம் செய்வது வித்தியாசமான செயல்கள்.
ஆகையினால், மத்திய அரசின் இணக்கத்துடன் செய்ய வேண்டுமென்று சொல்கின்றோம். அதில் உறுதியாக இருக்கின்றோம். மக்களாட்சியாக முடிவுறுகின்ற போது, அந்தந்த பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு மாகாணங்களில் உள்ள மக்கள் வட, கிழக்கு இணைப்பதற்கு இணங்க வேண்டும். அவற்றினை நிவர்த்தி செய்யாது. வெறுமனவே கோசமாக வடகிழக்கு இணைப்பினைச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

No comments

Powered by Blogger.