Header Ads



அதிரவைக்கும் இரட்டைக் கொலை - 'ஹைஸ்கூல் கேங்ஸ்ட்டர்' கேம் காரணமா..?

நொய்டாவில், தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி அதே குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளைஞர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சலி (42) மற்றும் அவரது மகள் மணிகர்ணிகா (11) இருவரும் கடந்த செவ்வாயன்று அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். கிரிக்கெட் மட்டை ஒன்றால் தாக்கப்பட்டும் கத்தரிக்கோலால் குத்தப்பட்டும் வெறித்தனமாக அவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அஞ்சலியின் மகனான பதினாறு வயதுச் சிறுவனைக் காணவில்லை. என்றபோதும் அவர் அணிந்திருந்த ஆடைகள் குளியலறையில் இரத்தக் கறையுடன் கழற்றிப் போடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன.

பொலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த திங்களன்று இரவு எட்டு மணியளவில் அஞ்சலி, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டினுள் நுழைவதும் மறுநாள் காலை பதினொரு மணியளவில் மகன் மட்டும் வெளியேறுவதும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தாயையும் சகோதரியையும் சிறுவனே கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் கிளம்பியுள்ளது.

மேலும் ‘ப்ளூவேல்’ என்ற விபரீதமான விளையாட்டுக்கு இணையான ‘ஹைஸ்கூல் கேங்ஸ்ட்டர்’ என்ற விளையாட்டு, அந்த வீட்டில் இருந்த கைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றில் பதிவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டில், கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுமாறு கட்டளைகள் இடப்படும் என்றும் கூறப்படுகிறது.

அஞ்சலியின் கணவர் சௌம்ய அகர்வால் சூரத்தில் வியாபாரம் செய்து வருகிறார். கொலை நடந்த அன்று அகர்வாலின் பெற்றோரும் உறவினர் வீடொன்றுக்குச் சென்றிருந்தனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அஞ்சலியின் முகத்தில் ஏழு கத்திக் குத்துக் காயங்களும் மணிகர்ணிகாவின் முகத்தில் ஐந்து கத்திக் குத்துக் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இலட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியிருக்கும் சிறுவனைத் தேடி பொலிஸ் குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

No comments

Powered by Blogger.