Header Ads



எனக்கு ரணிலுடன் மோதல் இல்லை, பசிலுடன் தொலைபேசியை துண்டித்தேன் - மைத்திரி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களின் விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அண்மையில், பௌத்த பிக்குமார் சிலருடன் நான் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு பிக்கு, ஜனாதிபதி உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என தொலைபேசியை கொடுத்தார்.

நான் அவரிடம் தொலைபேசியில் யார் என விசாரித்தேன். எமக்கு தெரிந்த ஒருவர் என பிக்கு கூறினார்.

நான் தொலைபேசியை வாங்கி ஹலோ எனக் கூறிய போது, மறுபுறம் பசில் ராஜபக்ச பேசினார். நான் ஹலோ என்று கூறி தொலைபேசியை துண்டித்து விட்டேன்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் துரோகிகள் இருக்கும் இடத்திற்கு செல்வது சிறந்தது அல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “எனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய போதிலும் அந்த செய்திகளில் எந்த அடிப்படையும் இல்லை.

பிரதமருடன் புரிந்துணர்ந்தே அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கின்றோம். இதனால், நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் இருக்கும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.