Header Ads



ஐ.தே.க. முஸ்லிம்களுக்கு இழைக்கும் பாரிய அநீதி - தயா கமகேயின் விசித்திரக் கவலை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சிசபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு முஸ்லிம்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும் என்று தொழிற்துறை அமைச்சரான தயாகமகே தெரிவித்தார்

அத்துடன், உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணத்தில் தனித்து களமிறங்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவ்வாறெனில் மட்டுமே தமது கட்சி பலமடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018 பெப்ரவரி முதல்வாரத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அரசியல்கட்சிகள் தற்போது ஆரம்பித்துள்ளன.

கட்டுப்பணம் செலுத்துதல், வேட்பாளர்கள் தெரிவு, கூட்டணியமைப்பது மற்றும் அமைத்த கூட்டணிக்குள் தொகுதிகளை பிரித்துக்கொள்வது என அனைத்து செயற்பாடுகளும் தற்போது மும்முரமாகவே நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு கிழக்கு மாகாண தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் தயாகமகே மேற்கண்டவாறு கூறினார்.

அதாவது, ஐக்கிய தேசிய முன்னணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட்டன.

எனினும், இக்கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட நிலைப்பாடு.

இக்கட்சிகள் இல்லாவிட்டால் கிழக்கில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி பலமடையும் என்பதையும் அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து களமிறங்கக்கூடிய ஒரு சக்தி எமது கட்சிக்கு கிடைக்கும் என்பதையும் கூறிக்கொள்ள முடியும். மேலும், இந்த முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொண்டு களமிறங்குவதானது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு முஸ்லிம் மக்களுக்கு இழைக்கும் ஒரு அநீதியாகவே எம்மால் கருதப்படுகிறது. ஏனெனில், கிழக்கைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலின்போதெல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய எதிர்ப்பே வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும், இத்தேர்தலில் எமது கட்சியானது அதிக ஆசனங்களை வெற்றிக்கொள்ளும் என்பது மட்டும் உறுதியாகும் என்றுத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.