Header Ads



அமைச்சரவைக்கு வந்த இந்தியா - மோதாதீர் என ராஜித தர்க்கம்

இலங்கையில் புதிய நிலக்கரி மின்னுற்பத்தி தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, மேற்படி மின் உற்பத்திக் கொள்கையால் இந்தியாவை பகைத்துக்கொள்ளவேண்டிவரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் ஏற்கனவே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவால் முன்வைக்கப்பட்டிருந்த அமைச்சரவைப்பத்திரம் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

"இலங்கையில் மாற்று மின்னுற்பத்தி திட்டங்கள் இல்லாவிட்டால் 2020ஆம் ஆண்டளவில் மின் பற்றாக்குறையால் பெரும் நெருக்கடி ஏற்படலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்'' என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும், மாற்று மின்னுற்பத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கடும் விமர்சனத்தை முன்வைத்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,

"சூரிய சக்தி, இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி, காற்றின் மூலமான மின்னுற்பத்தி என பல திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும் அவை கிடப்பில்போடப்பட்டுள்ளன.

மின்சக்தியை தனியாரிடம் கொள்வனவுசெய்யவே சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு நன்மையும் இருக்கின்றது'' என்று கடுந்தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ""புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கப்போய் இந்தியாவுடன் முரண்பட்டு, அந்நாட்டுடனான உறவை பகைத்துக்கொள்ளக்கூடாது'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஏற்கனவே திருகோணமலையில் அனல்மின் நிலையம் அமைக்க அனுமதியளித்து பின்னர் இந்தியாவை ஒதுக்கிவிட்ட வரலாறு உள்ளது. இந்நிலையில், புதிய நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கப்போய் இந்தியாவின் பகைமையை நாங்கள் சம்பாதிக்கவேண்டி வரும். இதை இலேசுப்பட்ட விடயமாக எவரும் கருதவேண்டாம். நிதானமாக சில விடயங்களை நாங்கள் கையாளவேண்டும்'' என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ராஜிதவின் இந்த எச்சரிக்கை நியாயமானதுதானென அமைச்சரவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதாக அறியமுடிகின்றது. அதன்பின்னர் மேற்படி மின்கொள்கைத் திட்டப் பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.