Header Ads



ஞானசாரர் வெளிநாடு, செல்ல முடியாது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதிக்கு கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல ஒத்திவைத்தார்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில், தண்டனைச் சட்டக்கோவையின் 140, 183, 186, 347 ஆம் பிரிவிகளின் கீழ், ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குதொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதியன்று தனது சட்டத்தரணி திரந்த வலலியத்தவினூடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தபோது, 1 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 2 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரின் ஆலோசனை தமக்குக் கிடைக்கப்பெற வில்லை என்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே, மேற்குறிப்பிட்ட தினம் அறிவிக்கப்பட்டது.

மேலும், வெளிநாடு செல்வதற்காக அனுமதிகோரிய ஞானசாரரின் கோரிக்கையும் நீதவானினால் நிராகரிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.