Header Ads



ஜனவரியில் தீவிர பிரச்சாரம் ஆரம்பம்


உள்ராட்சித் தேர்தலுக்கான தீவிர பிரசாரக் கூட்டங்களை பிரதான அரசியல் கட்சிகள் ஜனவரி முதல் வாரதத்தில் ஆரம்பிக்கவுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி 341 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் அனைத்தும் கடந்த 21ஆம் திகதியுடன்நிறைவுக்கு வந்த கையோடு தேர்தல் குறித்த கலந்துரையாடல்களை கிராமமட்டத்தில் கட்சிகள் ஆரம்பித்திருந்தன.

அத்துடன், சிறியளவிலான கூட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையிலேயே ஜனவரி முதல் பிரமாண்ட கூட்டங்களை கட்சிகள் நடத்தவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி தமது பிரசாரக் கூட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டியில் ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை, சு.க.வின் தேர்தல் பிரசாரத்தை இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­­ஷ சு.கவில் போட்டியிட்டிருந்ததால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ஒதுங்கியிருந்தார். இம்முறை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன தனித்துக் களமிறங்கியுள்ளதால் சு.கவுக்கு பெரும் தலையிடியாகியுள்ளது.

எதிரணியில் இருந்த பல முக்கிய தலைகளை சு.க. தம்பக்கம் இழுத்தெடுத்து வருகிறது. தேர்தலில் சு.கவின் வெற்றி அதன் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளதால் ஜனாதிபதி நேரடியாக பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனவரி முதல் வாரத்தில் சு.கவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்தப்படுமென அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவும் ஜனவரி முதல் வாரம் முதல் தீவிர பிரசாரங்களை நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்விரண்டு கூட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் போட்டியிடும் மற்றுமொரு பிரதான கட்சியான ஜே.வி.பியும் ஜனவரி முதல் வாரம் முதல் தீவிர பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளது.

No comments

Powered by Blogger.