Header Ads



முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் ஆட்சியாக, நல்லாட்சி மாறியுள்ளது - அதா


நாட்டையும், மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களையும், அவர்களது உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பொறுப்பு நம்  அனைவருக்கும் இருக்கின்றது என, தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று(29) தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும்  நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களை தேசிய காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைக்கும்.

தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட மக்கள் இன்று தேசிய காங்கிரஸில் சேர்ந்து வருகின்றனர். இதனால் எமது கட்சி வட, கிழக்கு மாகாணங்களில் பல வளர்ச்சிப் படிகளை கண்டு வருகின்றது.

தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இலங்கையில் வாழக் கூடிய புதிய யாப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந் நட்டில் வாழும் மூவின சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வது காலத்தின் தேவையாகும். சமூகத் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அப்போதுதான் எமக்குள்ள பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.

நல்லாட்சி அரசு முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் ஆட்சியாக மாறியுள்ளது.

இதற்கு அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சியில் சில சுகபோகங்களுக்காக துணை போகின்றார்கள். ஒரு சமூகத்தை வழி நடத்துவதற்கு சிறந்த அரசியல் தேவையாக இருக்கின்றது. மர்ஹும் அஸ்ரப் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் அரசியல் ஆலோசகராகவும், வழி காட்டிகளாகவும் திகழ்ந்துள்ளார்.

மர்ஹும் அஷ்ரபின் பாசறையில் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தேசிய காங்கிரஸின் பக்கமே இருக்கின்றார்கள். தலைவரின் வழி காட்டலில் மக்கள் செல்கின்ற போதில் தான் அது உண்மையான வழிகாட்டலாகும்.

அரசியல் தலைமைகள் மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை காட்ட வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த தலைவன், அப்படி அல்லாவிட்டால் அவர் சிறந்த தலைவன் அல்ல.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் இந் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது பேரினவாதிகளின் கைக்குள் சிக்கி வாழ வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கும்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசாறையில் வளர்க்கப்பட்ட நாங்கள் இனவாதம் இல்லாமல் அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அவரால் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். அந்த வகையில் தேசிய காங்கிரஸ் தற்போது அரசியல் பலம் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் குரலாக ஒழித்துக் கொண்டிருக்கின்றது. இதனை நசுக்குவதற்கு சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு கொண்டிருக்கின்றது.

புதிய யாப்பு சீர்திருத்தம் நாட்டில் வாழும் மக்களை பிரிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். நாட்டில் வாழும் தமிழ் சமூகத்தின் தலைவர்களால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.

தேசிய காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளில் குதிரைச் சின்னத்தில் தனித்தும், நல்ல பல நோக்கங்களை அடிப்படையாக கொண்டு சில உள்ளூராட்சி சபைகளில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் இணைந்து களமிறங்கியிருக்கின்றது என்றார்.

1 comment:

  1. These cheaters of the Muslims have nothing new to say. They repeat the same old songs but never did anything in the interest of the Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.