Header Ads



ஆசிரியையையின் இடமாற்றத்தை நிறுத்து - இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் பெரிய புலம் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் சங்கீத ஆசிரியை ஒருவருக்கு வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை நிறுத்துமாறு யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மாணவிகள் இருவரை சித்திரவதைக்குள்ளாக்கினார் என தெரிவித்து குற்றச்சாட்டுக்கள் முன்னவைக்கப்பட்டன.

எனினும் குறித்த விடயத்தினை பொருட்படுத்தாத நிலையில் செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், காவல் துறையினர் குறித்த சங்கீத ஆசிரியையை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய வேளையில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் குறித்த ஆசிரியையின் குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணராமைக்கு எதிராக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் ஆசிரியருக்கு எதிராக கல்வி திணைக்களத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆசிரியருக்கு இடமாற்றம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

முறையான ஒழுக்காற்று விசாரணை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்ற பரிந்துரைக்கு அமைவாக 01.01.2018 இலிருந்து செயற்படும் படியாக தாங்கள் கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றீர்கள். 

அத்துடன் தங்களுடைய சேவைக்காலத்தில் மீண்டும் யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையுடன் இந்த இடமாற்றம் வழங்கப்படுகின்றது என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியையினால் எழுத்தாணை மனுவொன்று சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனின் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி ஒழுக்காற்று காரணங்களின் அடிப்படையிலான இடமாற்றம் எனக் குறிப்பிட்டு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் அனுப்பிவைக்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை இடைநிறுத்தக் கட்டளை வழங்குமாறும், 

ஒழுக்காற்று விசாரணையில் மனுதாரரைக் குற்றவாளியாக இனங்கண்டமையை சட்டரீதியற்ற வெற்றும் வறிதானதும் என எழுத்தாணை ஆக்குமாறும் (நீக்குமாறும்) எழுத்தாணை மனுவில் மனுதாரர் கோரினார். 

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தங்களுடைய சேவைக்காலத்தில் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையுடன் இந்த இடமாற்றம் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளமை எதிர்காலத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனையாக முதல் தோற்றளவில் காணக்கூடியதாகவுள்ளது. 

இந்தப் பந்தியானது குடிமகன் ஒருவரின் உரிமையை மீறுகின்ற செயற்பாடாக மன்று, முதல் தோற்றளவில் கருதுகின்றது. எனவே இந்த இடமாற்றக் கடிதத்தை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவு எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும். 

இந்த இடைக்காலக்காலத் தடை கட்டளையையும், எதிர்மனுத்தாரர்களை எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி மன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளையும் உடனடியாக அனுப்பிவைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.