Header Ads



கழுகிடம், கற்றுக் கொள்வோம்..!


அதிகாரம், சுதந்திரம், மேன்மை, 360 டிகிரி தொலைநோக்குப் பார்வை என்பதால்தான் பறவைகளின் ‘சக்கரவர்த்தி’ என்ற பெருமையை பெறுகிறது கழுகு. வேட்டையாடும் யுக்தியை தன் சிறப்பியல்பாகவே பெற்றதனாலேயே, அதிகார ஆணவத்தில் இருக்கும் அமெரிக்காவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தும் கழுகுக்கு கிடைத்திருக்கிறது.இத்தனை சிறப்புகள் கொண்ட கழுகிடம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய சில தலைமைப் பண்புகள் இருக்கின்றன...

பெரிதாக யோசி... தனித்து முன்னேறு...‘பலவீனமானவர்கள் எப்போதும் கூட்டத்துடன் இருக்கவே விரும்புவார்கள். ஆனால், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் தன்னந்தனியாகவே சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள்’ என்பது பிரபலமான ஒரு பழமொழி. இந்த பழமொழியை அப்படியே பிரதிபலிக்கும் குணாதிசயம் கொண்டது கழுகு. மற்ற பறவைகள் எல்லாம் கூட்டமாகப் பறக்கக் கூடியவை. ஆனால் கழுகு மட்டும் தன்னந்தனியாக பறக்கும் பழக்கம் கொண்டது.

அதேபோல், மனதின் உயரம்... வாழ்வின் உயரம்... என்பதையும் பிரதிபலிக்கக் கூடியது கழுகு. ஆமாம்... மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக உயரத்தில் பறக்கும் திறனும், குணமும் கழுகுக்கு உண்டு.

மன ஒருமைப்பாடு... துல்லியமான இலக்கு... இருக்கும் இடத்திலிருந்து 5 கி.மீட்டர் தூரம் வரை கவனம் செலுத்தக்கூடிய திறன் கழுகுக்கு உண்டு. எத்தகைய தடைகளையும் தாண்டி, தனது இரையை அடையும் வரை தனது கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பாத ஒருமுகத்திறனும் கழுகின் பிரத்யேக குணம்.

அஞ்சாதே... சவால்களை சாதகமாக்கு...

சற்று வேகமாக காற்று வீசத்தொடங்கினாலே, மற்ற பறவையினங்கள் மறைந்து கொள்ள மரங்களின் கிளைகளைத் தேடி ஓட ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால், புயலை நேசிக்கும் ஒரே பறவை கழுகுதான் என்பது ஆச்சரியமான தகவல். மேகக் கூட்டங்களைக் கண்டாலே கழுகு உற்சாகமாகிவிடும். புயல்காற்று வரப்போவதை அறிந்தவுடன் மேகங்களுக்கு மேல் கிழித்துக் கொண்டு தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு, உயரே பறக்கத் தொடங்கிவிடும்.

வெற்றியாளர்கள் சவால்களைக் கண்டு அச்சப்படுவதில்லை, மாறாக சந்தோஷப்படுகிறார்கள். தன்னைச் சூழும் சவால்களையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, வெற்றியின் சிகரத்தை தொடுகிறார்கள் என்பதை கழுகின் இந்த குணத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

கூட்டாளியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா... அவசரம் கொள்ளாதே...

தனிப்பட்ட வாழ்க்கை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் தன்னுடைய கூட்டாளியை அவரின் அர்ப்பணிப்பு பண்பை சோதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கழுகின் இணை தேடும் இயல்பிலிருந்து கற்றுக் கொள்ளலாம். மற்ற பறவைகள், விலங்குகள் போலல்லாமல், இணை சேரும் விஷயத்தை கழுகு சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

பெண் கழுகு, ஆண் கழுகை பார்த்தவுடன் தரை மட்டத்திலிருந்து மெதுவாகப் பறக்க ஆரம்பித்து, மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றவுடன் தன்னுடைய இறகு ஒன்றை கீழே உதிர்க்கும். ஆண் கழுகு அந்த இறகை தரையில் விழுவதற்கு முன் பிடித்து, பெண் கழுகிடம் மீண்டும் சேர்க்கும். அதை வாங்கி மீண்டும் கீழே போட்டுவிடும் பெண் கழுகு. ஒன்றை ஒன்று துரத்தும் இந்த போட்டி மணிக்கணக்கில் நீடிக்கும். அதன் பின்புதான் இரண்டும் ஒன்றை ஒன்று அனுமதிக்கின்றன. 

வசதியை விட்டுவிடு... மேலும் வசதிகள் வசமாகும்கூட்டுக்குள் இருக்கும்போதே கழுகுக் குஞ்சுகளுக்கு போராட்ட குணம் கற்றுத்தரப்படுகிறது. கரடு முரடான கூட்டிலிருந்து விரைவில் குஞ்சுகள் வெளியேற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே, தாய்க்கழுகு கூட்டில் இருக்கும் மென் இறகுகள் மற்றும் புல்களை நீக்கிவிடுகின்றன. சௌகரியமான இடத்தில் இருக்கும் வரை முன்னேற்றத்தை நோக்கிய நம் பயணம் இருக்காது என்பதையே கழுகின் இந்தப் பண்பு உணர்த்துகிறது.

பழையன கழிதல்... புதியன புகுதல்...

வயதான கழுகுக்கு இறகுகள் வலுவிழந்துவிடுவதால், முன்னைப்போல் வேகமாகவும், உயரமாகவும் பறக்க முடியாது. இதனால் பலவீனமாக உணரும் கழுகு, தொலை தூரத்தில் உள்ள காடுகள் அல்லது மலைப்பிரதேசங்களுக்குச் சென்று, தன் அலகுகளால் உடலெங்கும் குத்திக்கொண்டு இறகுகளை பிய்த்துவிடுகிறது.

மேலும் பாறைகளில் தன் அலகுகளையும், நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும், நகங்களும் முளைக்கும் வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன், வெளியே வந்து முன்பைவிட உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது. நம் வாழ்க்கைக்கு உதவாத பழக்கங்களை, விடுவதற்கு கடினமாக இருந்தாலும் விட்டொழிக்க வேண்டும் என்ற நல்ல விஷயத்தை கழுகின் இந்த செயல் உணர்த்துகிறது.

- என்.ஹரிஹரன்

2 comments:

  1. வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 16:79)

    www.tamililquran.com

    ReplyDelete
  2. நன்றி தங்கலின் பதிவுக்கு

    ReplyDelete

Powered by Blogger.