Header Ads



இரட்டை கொலை செய்தவனிமிருந்து, பெற்றோர்கள் படிக்கும் பாடம்

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட தஷ்வந்தை அவரது உறவினர்களே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பெற்ற தாயை கொலை செய்யவா உன்னை ஜாமீனில் வெளியில் எடுத்தோம் என்று கதறினர்.

6 வயது சிறுமி ஹாசினியை ஈவு, இரக்கமற்று பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் இன்ஜினீயர் தஷ்வந்தை  போலீஸார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதுசெய்தனர். சொத்துகளை விற்று ஜாமீனில் வெளியில் எடுத்தனர் தஷ்வந்தின்  உறவினர்கள். அதோடு குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது ஹாசினிக்காகக் குரல் கொடுத்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

ஹாசினி கொலை சம்பவத்துக்குப்பிறகு முகலிவாக்கம் பகுதியிலிருந்து குன்றத்தூருக்கு இடம் மாறினர் தஷ்வந்த் குடும்பத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஷ்வந்த், தன்னுடைய தாய் சரளாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். அதன்பிறகு மும்பைக்குத் தப்பினார். தனிப்படை போலீஸார், மும்பையில் தஷ்வந்தை மடக்கிப்பிடித்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவரத் தயாரானபோது போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார். போலீஸாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் சிக்கிய தஷ்வந்தை கைதுசெய்த போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். தஷ்வந்திடம் 12 மணி நேரத்துக்கு மேலாக போலீஸார் விசாரணை நடத்தியபிறகு நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் தஷ்வந்த், தன்னுடைய அப்பாவையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்த தகவலைக் கூறியபோது தஷ்வந்தின்  உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் சென்னைக்கு தஷ்வந்த் வந்தவுடன் அவரது உறவினர்கள் சிலர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், தஷ்வந்தை சரமாரியாக திட்டித் தீர்த்தனர். அப்போது, கோபத்தின் எல்லைக்கே உறவினர் ஒருவர் சென்றதாகவும் அவர் தஷ்வந்தை போலீஸ் முன்னால் அடிக்க முயன்றதாகவும் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னோர் உறவினர், 'பெற்ற தாயைக் கொலை செய்யவா உன்னை ஜாமீனில் எடுத்தோம்' என்று கதறினார். உறவினர்களிடம் தஷ்வந்த் சிக்கினால் அவரது நிலைமை சிக்கலாகிவிடும் என்று கருதிய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அவரை போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அதோடு, போலீஸ் நிலையத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த பிறகுதான் தனிப்படை போலீஸார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

மும்பையிலிருந்து சென்னைக்கு தஷ்வந்தை அழைத்துவந்த தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். "சரளா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை கைதுசெய்ய மும்பை சென்றோம். கைதுசெய்தபின், சாப்பிடுவதற்காக தஷ்வந்தின் கைவிலங்கை கழற்றினோம். ஆனால், அவர் எங்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரது இடது கையில் கைவிலங்கு மாட்டப்பட்டு இருந்ததால்  மீண்டும் அவரை கைதுசெய்துவிட்டோம். ஒரு முறை எங்களிடமிருந்து தப்பியதால் தஷ்வந்தைக் கண்காணிக்க கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்பட்டனர்.

இதற்கிடையில் சென்னையிலிருந்து புறப்பட்டுவந்த இன்னொரு தனிப்படை டீமும் தஷ்வந்த் பாதுகாப்பில் பயன்படுத்தப்பட்டனர். விமான பயணத்தின்போதும் அவரைக் கண்காணித்துக் கொண்டே இருந்தோம். கழிவறைக்குகூட தஷ்வந்தை போலீஸார்தான் அழைத்துச் சென்றனர். போலீஸார் பாதுகாப்பில்தான் உணவும் வழங்கப்பட்டது. கடந்த முறை எங்களிடமிருந்து தப்பியதால் விமானத்தில் வரும்வரை அவரிடம் எதுவும் பேசவில்லை. அவர் கேட்ட உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தோம்.

சென்னைக்கு அழைத்து வந்தவுடன் அவரிடம் விசாரணையைத் தொடங்கினோம். அவரது கடந்தகால வாழ்க்கை, பெற்ற தாயான சரளாவை எதற்காகக் கொலை செய்தார், கொலைக்குப் பயன்படுத்திய சுத்தியல், தப்பிச் செல்லப் பயன்படுத்திய பைக், உதவி செய்தவர்கள் என அனைத்து விவரங்களும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணையில், தன்னுடைய அப்பாவை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த தகவலும் கிடைத்தது.

மூத்த மகனான தஷ்வந்த் கேட்டதையெல்லாம் அவரது பெற்றோர் வாங்கிக் கொடுத்துள்ளனர். இன்ஜினீயரிங் வரை படித்த தஷ்வந்த், வேலைக்கும் சென்றுள்ளார். அப்போதுதான் அவரது வாழ்க்கை தடம் புரண்டுள்ளது. ஜாலியான வாழ்க்கைக்காகப் பணத்தை சரமாரியாக செலவழித்துள்ளார். தஷ்வந்தின் தந்தை பிரபல தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர். அதன்மூலம் சில சொத்துகளை வாங்கியிருந்தார்.

ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் சிக்கியபோது நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடி குண்டர் சட்டத்தை ரத்து செய்ததோடு ஜாமீனிலும் அவரை வெளியில் கொண்டுவந்துவிட்டனர். சிறையிலிருந்த காலத்தில் தஷ்வந்துக்குச் சிலர் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் மூலம்தான் சரளாவைக் கொன்றுவிட்டு திருடிய நகைகளை விற்க தஷ்வந்த் முயற்சி செய்துள்ளார். ஆனால், நகைகளை வாங்கியவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால், என்ன செய்வது என்று திகைத்த தஷ்வந்துக்கு இன்னொரு சிறை நண்பர் பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்தப் பணத்துடன் மும்பை சென்று குதிரைப்பந்தயத்தில் ஜாலியாக பொழுதைக் கழித்துள்ளார். மும்பையில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவர், தஷ்வந்த்துக்கு உதவி செய்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் பணம் காலியாகிவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தஷ்வந்த் இருந்தபோது போலீஸிடம் சிக்கிவிட்டார். இல்லையென்றால் அடுத்த குற்றச்சம்பவத்தில் அவர் ஈடுபட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தஷ்வந்தை பொறுத்தவரை, அவர் மனஇறுக்கத்துடன் இருக்கிறார். இதற்கு, குடும்பச் சூழ்நிலையே காரணமாகச் சொல்லப்படுகிறது. ஹாசினியைக் கொலை செய்த பிறகு ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், பணம் கேட்டு குடும்பத்தினரை நச்சரித்துள்ளார் தஷ்வந்த். இதனால் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார் தஷ்வந்த் அப்பா சேகர். ஒருகட்டத்தில் பணம் கொடுக்க மறுத்ததும் கொலை செய்யும் அளவுக்கு தஷ்வந்த் துணிந்துவிட்டார். தஷ்வந்தின் வாழ்க்கை மற்ற பெற்றோருக்குப் பாடமாக அமைந்திருக்கிறது" என்றனர்.

1 comment:

  1. கொலை செய்தவனை கொலை செய்வதை தவிர வேறு தண்டனை இல்லை எதுவரை என்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் மன்னிக்காதவரை
    கொலை செய்தவனை கொலை செய்வதை தவிர வேறு தண்டனை இல்லை இதை இஸ்லாம் கூறி உள்ளதை ஏனைய மத நண்பர்களும் ஒன்றிநைந்து சட்டமாக்க பாடுபட இல்லை என்றால் நாளை எங்களுக்கும் சில துயரங்கள் வருவதை தவிர்க்க முடியாது

    ReplyDelete

Powered by Blogger.