Header Ads



கூட்டமைப்பு குழப்பங்களைத் தீர்க்க உயர்மட்ட முயற்சி, இராஜதந்திர மட்டத்திலும் அழுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீட்டில் இணப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து வைக்கும் உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படவில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட் ஏற்கனவே கோரிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கு மேலதிகமாக ஒன்றையும், ரெலோ நெடுந்தீவுக்குப் பதிலாக கரவெட்டி பிரதேசசபையையும் கோரியதால் பிரச்சினைகள் ஏற்பட்டன.

பிளவுக்குக் காரணம்

எனினும், திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் தாம் அதிகபட்ச விட்டுக்கொடுப்பை மேற்கொண்டதாகவும், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் ஆசனப்பங்கீட்டிலேயே தமிழ் அரசுக் கட்சி விட்டுக்கொடுப்பற்ற கடும் போக்கை கடைப்பிடித்ததால், தாம் வெளியேறியதாகவும் ரெலோ செயலர் என்.சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.

அதேவேளை, தமிழ் அரசுக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள உள்ளூராட்சி சபைகளைக் குறிவைத்து, அவற்றைத் தமக்கு ஒதுக்குமாறு பங்காளிக் கட்சிகள் அழுத்தம் கொடுப்பதே பிரச்சினைக்குக் காரணம் என்றும், எனினும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருப்பதாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ளார்.

நடுத்தெருவுக்கு வந்த ரெலோ 

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ முடிவெடுத்த ரெலோ ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுக்களையும் நடத்தியிருந்தது.

எனினும், இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் அமைத்துள்ள கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு சாதகமான வகையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் ரெலோ நடத்தத் திட்டமிட்டிருந்த பேச்சுக்களும் கைகூடவில்லை.

இதையடுத்து, மீண்டும் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும், அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற நிலைக்கு ரெலோ தள்ளப்பட்டுள்ளது.

சம்பந்தன் இணக்க முயற்சி

இதனிடையே, தமிழ் அரசுக் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகும் ரெலோவின் முடிவை அடுத்தும், கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான புளொட் அதிருப்தியடைந்துள்ளதை அடுத்தும், சமரச முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அத்துடன், நேற்றுமுன்தினம் மாலை செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இரண்டு மணிநேரம் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, யாழ்ப்பாணத்துக்கு விரைந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தினார்.

மன்னிப்புக் கோரினார் சுமந்திரன்

அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ஆசனப் பங்கீட்டினால் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார்.

அத்துடன் இன்று இரவு அல்லது நாளை இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும்  தமிழ் மக்களின் நலனுக்காக விட்டுக் கொடுப்புகளைச் செய்ய தமிழ் அரசுக் கட்சி தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

 கூட்டமைப்பை உடைக்க துணைபோக வேண்டாம்

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த, உள்ளுக்குள்ளேயும், வெளியேறும் சிலர் கங்கணம் கட்டிச் செயற்படுவதாகவும், அதற்குத் துணைபோகவேண்டாம் என்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆசனப் பங்கீட்டு விவகாரத்தை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அதற்கு செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் இணங்கியுள்ள நிலையில்,, இறுதி முடிவு நல்லதாக அமையும், தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ என்பன இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிளவுபடாது கூட்டமைப்பு

அதேவேளை, கூட்டமைப்பு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிணக்குத் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி விரிவான கருத்து எதையும் கூற அவர் மறுத்துள்ளார்.

எனினும், கூட்டமைப்பு பிளவுபடாது, சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். நல்லதாகவே நடக்கும் என்று மாத்திரம் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர மட்டத்திலும் அழுத்தம்

இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எற்பட்டுள்ள குழப்பத்தை தீர்ப்பதற்கு கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்குமாறு வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்களில் இருந்தும், அறிவுரைகள் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. 2692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    (பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
    என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 53. சமாதானம்

    ReplyDelete

Powered by Blogger.