Header Ads



அன்புள்ள வேட்பாளர்களுக்கு..!


-Raazi Muhammadh Jaabir-

இனி நீங்கள் தனிமனிதர்களல்ல.பொது மனிதர்கள். ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் சலுகைகள் ஒரு பொது மனிதனுக்கு இல்லாமல் போகின்றது.

நீங்கள் ஒரு தனிமனிதனாக வாழ்ந்து கொண்டு போதைப் பொருள் பாவிப்பவராகவோ,மது அருந்துபவராகவோ அல்லது ஒரு விபச்சாரியாகவோ, அயல் வீட்டுக்காரரோடு சண்டை பிடிப்பவராகவோ, தொழில் தருகிறேன்,வெளிநாட்டிற்கு அனுப்புகிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவராகவோ இருந்துவிட்டுப் போங்கள்.அது உங்களுக்கும் உங்கள் றப்புக்கும் இடையில் இருக்கும் பிரச்சினை.அவன் உங்களை விரும்பினால் தண்டிப்பான்.விரும்பினால் மன்னிப்பான்.

ஆனால் நீங்கள் ஒரு பொதுமகனாக மாற விரும்பினால் உங்கள் நிலவரம் வேறு.இப்பொழுது நீங்கள் எமது தலைவராக,எம்மைப் பிரநிதித்துவம் செய்பவராக உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள். தனிமனிதனான நீங்கள் பொதுமனிதனாக உங்களை அடையாளப்படுத்தினால் தனிமனிதனுக்கான சில சலுகைகளை இழக்கிறீர்கள்.

எமது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு வட்டார உறுப்பினரும், தனது தலைவன் தன்னை விடத் தகுதியானவனாக, கை சுத்தமானவனாக,நல்லவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு.ஏனெனில் கெட்ட ஒருவனை நீ ஏன் உன் தலைவனாகத் தெரிந்தாய் என்று எமதிறைவன் கேட்கும் கேள்விக்கு எம்மால் விழி பிதுங்கிக் கொண்டு இருக்க முடியாது.

அதிகாரம் இல்லாத போது நான்கு பேரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் அதிகாரம் கிடைத்துவிட்டால் திடீரென்று திருந்தி நாலாயிரம் பேரை ஏமாற்றமாட்டீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.தனிமனிதனாக நீங்கள் இருக்கும் போது உங்கள் சுற்றுச் சூழல் சுகாதாரத்தைப் பார்க்காத நீங்கள் தலைவரானதும் திடீரென்று டெங்கு ஒழிப்பிற்கு திட்டம் கொண்டுவருவீர்கள் என்பதை நம்ப முடியாது.தனி மனிதனாக இருக்கும்போது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நீங்கள் திடீரென்று தலைவரானதும் ஏமாற்ற மாட்டீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் வேட்பாளரே, தனிமனித வாழ்வில் நீங்கள் கெட்டவராக, ஏமாற்றுக்காரராக வாழ்ந்து கொண்டு பொதுவாழ்வில் மனிதப் புனிதராக நடப்பீர்கள் என்று நம்புவதைப் போல முட்டாள்தனம் எதுவும் இல்லை.

கெட்டவராக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் கைகளில் அதிகாரத்தையும் கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது இலகுவாகப் புரியும்.

நீங்கள் தனிமனிதனாக இருந்தால் உங்கள் தவறை உங்களோடு சேர்ந்து நாமும் மறைப்போம்.

நீங்கள் பொது மனிதன் என்றால் நீங்கள் மறைத்து நல்லவனாக நடிக்கும் உங்கள் தவறை நாம் மக்களுக்கு எச்சரித்து நீங்கள் அரசியலுக்குப் பொருத்தமில்லை,கெட்டவராக வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை என்று மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

நீங்கள் யாரென்பது எங்கள் வட்டாரத்திற்கு நன்றாகத் தெரியும்.ஏனெனில் உங்கள் அண்டை ,அயலவர்தான் நாங்கள்.நீங்கள் நல்லவராக இருந்தால் உங்களை நாம் தலைவராகத் தெரிவோம்.நீங்கள் கெட்டவராக இருந்தால் உங்களை மறுப்போம் நீங்கள் எங்கள் உற்ற நண்பனாக இருந்தாலும் சரி

1 comment:

  1. Nabi sal and sahaba did not gave print of quran.they show islam in practise.they was folllowed quran by practise to non muslims

    ReplyDelete

Powered by Blogger.