Header Ads



நாள் சம்பளத்துக்கு, யாசகத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்

“கொழும்பில், யாசகம் எடுப்பதைத் தடை செய்யும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால், அந்த நடவடிக்கையை கொழும்பை மட்டும் மையப்படுத்தி முன்னெடுக்காமல்,  முழு நாட்டிலும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்ததாகும்” என்று, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரியுள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பில், அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   
“கொழும்பு, இந்நாட்டின் பிரசித்தமான நகரங்களில் ஒன்றாகும். இம்மாநகரத்துக்கு, களங்கத்தை ஏற்படுத்தி மாசுப்படுத்தும் வகையில், முன்னெடுக்கப்படும் இந்த யாசகம் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும், கொழும்பு, ஒரு கேந்திர நிலையமாகும். சர்வதேச தலைவர்கள், விஜயம் செய்கின்ற இடமாகும். இந்நிலையில், கொழும்பில் யாசகம் எடுப்பது, எதிர்வரும் 1ஆம் திகதியுடன் தடை செய்யப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.  

“யாசகம் எடுக்கின்றமை இரு வகையில் அமைந்துள்ளன. உடல் ஊனமுற்ற நிலையில் தொழில் ஏதும் செய்ய முடியாமல் வாழ வழியின்றி இருப்போர் யாசகம் எடுக்கின்றனர். அதனைவிடவும், முகவர்களின் ஊடாக வழிநடத்தப்படும், நாள் சம்பளத்துக்கு யாசகத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களும் உள்ளனர்.  

“ஆகவே, இது விடயத்தில் குழுவொன்றை, அரசாங்கம் அமைத்து பரிசீலனை செய்து, யாசகம் எடுப்போர் அனைவரையும் அவர்களுக்கென்று அமைக்கப்பட்ட விடுதியில் தங்க வைத்து, இலவச உணவு மற்றும் உடை, உறையுள் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 “அவ்வாறானவர்களில், கைத்தொழில் செய்வோரை இனங்கண்டு, அக்கைத்தொழில் துறையை ஊக்குவிக்கவும், அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். இதற்கான நிதியொதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும். அத்துடன், யாசகம் எடுப்பதற்குத் தூண்டுகின்ற முகவர்களை கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.   

“எமது நாட்டில் வாழ்கின்ற எவரும், எவரிடமும் கையேந்தி யாசகம் எடுக்கும் நிலையை முற்று முழுவதுமாக நீக்கிவிடல் வேண்டும். யாசகத்தைத் தடைசெய்யும் இத்திட்டம், ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், ஊவா மாகாண அமைச்சர் என்ற ரீதியில் பூரண பங்களிப்புகளை வழங்க, தான் தயாராக இருக்கிறேன்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எம்.செல்வராஜா   

No comments

Powered by Blogger.