December 19, 2017

'ரியாஸா' என்ற தன்னம்பிக்கை பெண் (மாதர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தனி விருட்சம்)

-அனஸ் அப்பாஸ் -

பாத்திமா ஸzஹ்லா (13 வயது), பாத்திமா ஸாzகியா. (06 வயது) ஆகிய இரு மொட்டுக்களின் அன்புத் தாயாரான முஹம்மத் ராஸிக் பாத்திமா ரியாஸாz எனும் இரும்புப் பெண்மணியைப் பற்றி உங்களுடன் பேசப்போகிறோம். சகோதரி ரியாஸா ஊவா மாகாணத்தை சேர்ந்த வெலிமடை, குருதலாவை பிரதேசத்தில் பிறந்தவர். இரு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ள குடும்பத்தில் பிறந்த இவர் நான்காமவர். உயர்தரம் வரை கற்ற ரியாஸா வவுனியாவில் வணிகம் புரிந்து வந்த உடதலவின்னையைச் சேர்ந்த ஜெய்னுதீன் முஹம்மத் இல்யாஸ் என்பவரை கரம் பிடித்தார்.

இழப்பு எனும் கொடூரத்தை மனிதனாகப் பிறந்த யாவரும் சந்திக்க வேண்டும் என்பது இறை நியதி. இழப்பின் கொடூரத்தில் அதிக வலி மிகுந்தது மணத் துணையின் இழப்பு. இதன்போது ஒரு கைம்பெண் முகம்கொடுப்பது,

பொருளாதார நெருக்கடி, தனது’ பிள்ளைகள் குறித்த வேதனை, உதவியற்ற நிர்க்கதி, வேலையின்மை, திடீர் வலி, அச்சம், தனிமை எதிர்கால திட்டங்கள் குறித்தான ஏமாற்றம், அன்னியோன்ய வெறுமை

ஒரு மகளுக்கு 8 வயதும், மற்றவருக்கு 1 வயதும் 6 மாதங்களும் இருக்கும் நிலையில் தனது 26 ஆவது வயதில் இத்தனையும் சேர்ந்த வலி சகோதரி ரியாஸாவை ஆட்கொண்டது. திடீரென நிகழ்ந்தது அன்புக் கணவரின் மரணம், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

நிஜத்தை ஜீரணிக்க முடியாத மனத்துடன் “இத்தா” காலம் முடிய, வெளியில் வந்தார் இத் தாய். துணையின் இழப்பு ஏற்படுத்தும் வலியைவிட இழப்பின் பின்னரான வாழ்க்கையில் வலிகள் அதிகம். வெளியுலகைப் பற்றிய போதிய அறிவு அன்று சகோதரி ரியாஸாவிடம் காணப்படவில்லை, பாசமாகப் பார்த்தவர்கள் பின்னர் பாரமாக நோக்கியமை, வெளி உலகில் சஞ்சரிப்பதன் கடினம், உறவுகள் தூர விலகியமை என்பவற்றால் முற்றாக சொர்ந்துபோன இவருக்கு ஆறுதல் சொன்னவர் அவரது தந்தை ராசிக். தந்தையின் தொடர் உந்துதலால் தனது குடும்ப வாழ்வாதாரத்துக்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து சிறு வணிகம் ஒன்றை இத் தாய் ஆரம்பித்தார்.

வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது. வலிகளுடன் வாழும் இதேபோன்ற பல பெண்களை தனது தொழில் வாழ்க்கையில் சந்தித்தார் ரியாஸா. குறிப்பாக 25 முதல் 40 வரை, தான் சந்தித்த துணை இழந்த பெண்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார் ரியாஸா. வலி கண்டவரால்தான் வழி பிறக்கும் என்பதுபோல அவர்களின் விடிவுக்கான வழியையும் ஒரு கூட்டு பொறிமுறையாக உருவாக்க ஒரு சிந்தனை ரியாஸாவுக்கு உதிக்க, “Empower Muslim Women Association - EMWA” எனும் அமைப்பு உருவானது.

பசி என்பது பெருங் கொடுமை. பிள்ளைகளின் உணவுக்காக தாய்மார் எதையும் தியாகம் செய்ய துணிகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான வலையமைப்பு தான் இது. இறைவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் உதவும் தனி நபர்கள் இன்று அரிது என்று கூறும் நிறுவனர், அவர்களது எதிர்பார்ப்புகளுக்குள் சிக்குவதைவிட, விடிவுக்கான வழியை தேட ஆரம்பித்த இந்த முயற்சி, இன்று 40 வயதிற்குட்பட்ட 50 பேருக்கான சுயதொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளதாகச் சொல்கின்றார். அமாவாசைக்குப் பின்னரான பௌர்ணமி போல பலரின் மறுமண வாழ்வுக்கும் இந்த EMWA அமைப்பு வழி சமைத்துள்ளது, அதற்கான தேர்வு ஆலோசனைகளும் வழங்கி வருகின்றது EMWA. தனது அமைப்பின் அங்கத்தவர்களில் 50  வயதிற்கு மேற்பட்ட துணை இழந்தவர்களின் எண்ணிக்கை எக்கச் சக்கம் என்கின்றார் நிறுவனர் ரியாஸா.


“பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லாமல் சுயதொழில் மூலம் வீட்டிலிருந்தே வருமானமீட்டலாம், முதலீடு தேவையில்லை. மேலும், நிர்க்கதியான நிலையில் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது” என்பது தொடர்பில் வழிகாட்ட இப்பொழுது EMWA இருக்கின்றது. மட்டுமன்றி, Mercy Lanka, ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற நிறுவனங்களில் இருந்து அநாதை குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகைகள், உதவித் தொகை என்பவற்றையும், இதர நிறுவனங்களின் வாய்ப்புக்களையும் திட்டமிட்ட அடிப்படையில் இதில் இணைவோருக்கு வழங்கி வருகின்றது EMWA நிர்வாகம்.

கண்டி மாவட்டத்தின் உடதலவின்ன, மடவள, கட்டுகஸ்தொட்ட, தெல்தோட்ட, அக்குரனை, மாவனெல்லை, கடுகண்ணாவை ஆகிய பிரதேசங்களிலேயே இதுவரை அங்கத்தவர்களை கொண்டியங்குகின்றது EMWA. இதர பிரதேசங்களுக்கும் தமது சேவையை எதிர்காலத்தில் விஸ்தரிக்க இந்நிறுவனம் எதிர்பார்த்துள்ள நிலையில், இதுபோன்ற கூட்டு அமைப்பில் கணவனை இழந்த பெண்கள் இயங்கவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. அண்மையில் கல்ஹின்னையிலும் இவர்களின் வழிகாட்டலில் இதுபோன்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
“இவ்வமைப்பில் இணையும் பெண்கள் 25 – 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். வெளிநாடு செல்லக்கூடாது, கல்வி கற்கும் பிள்ளைகள் இருக்க வேண்டும்” என்பன அடிப்படை நிபந்தனைகளாகும். எந்த இனத்தவரும் இணையலாம். சுயதொழிலை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் வேலையை EMWA கச்சிதமாக மேற்கொள்வதுடன், சுய உற்பத்தியை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பு ஆலோசனையும் வழங்குகின்றமை விசேடமானது.

எவ்வித கட்டண அரவீடுகளுமில்லாத சேவை நிறுவனமான EMWA வில் கணவர் மரணித்த பெண்கள் மட்டுமன்றி, தலாக் சொல்லப்பட்ட பெண்களும் இணையலாம். மட்டுமன்றி, மறுமணம் புரிந்து வெளியில் சொல்ல முடியாத இன்னல் அனுபவிப்போர்க்கான தனிப்பட்ட சேவையும் EMWA மேற்கொள்கின்றது. 0770497771 அல்லது 0770633139 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு இதில் இணைய முடியும், மற்றும் ஆலோசனைகளைப் பெறவும் முடியும்.

இத்தனைக்கும் “உடதலவின்ன பாடசாலை அதிபர் A.R.M. உவைஸ் சேர் அவர்கள் ரொம்பவே நன்றிக்குரியவர், அடுத்ததாக “முத்தலிப் பௌண்டேஷன்” சுயதொழில் செய்வதற்கான உபகரண அனுசரணை வழங்கியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி இணைப்பாளர் இஸ்ஸதீன் ரியாஸ் அவர்கள் இவ்வமைப்பை முன்கொண்டுசெல்லவும் உதவினர். இன்னும் பலர் மறைமுகமாகவும் உதவியுள்ளனர்” என்றும் தனது நன்றிக்குரியவர்களை பட்டியலிடுகின்றார் EMWA நிறுவனர் ரியாஸா.

நினைவுகளைச் சுமந்த 5 வருட நிறைவை மீட்டும் தனது அன்புக் கணவர் ஜெய்னுதீன் முஹம்மத் இல்யாஸ் அவர்களின் மரணம் ஒரு முடிவல்ல, பல பெண்களின் விடிவுக்கான ஆரம்பம் என்பதை பலமாக நிறுவியுள்ளார் வெலிமடை ரியாஸா.

7 கருத்துரைகள்:

Masha Allah. உங்கள் முயற்சி தொடர எமது வாழ்த்துகள்.

Masha Allah. Iron lady. Dear sister please spread your services to whole country

masha Allah.great job .well done.


Why not publish more inspiring stories like this rather than political rubish.

dear sister please spread ur service im from matale i like to spread ur service in our area through my help how i contact u?

May Allah bless you for your growth...

Post a Comment