Header Ads



எதிர்ப்புகளிடையே விகாராதிபதியின் உடல் யாழ். முற்றவெளியில் தீயுடன் சங்கமம்

தமிழ் மக்களின் எதிர்ப்பு- சட்டரீதியான போராட்டத்துக்கு மத்தியில், யாழ். முற்றவெளியில், ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதியின் உடல் நேற்றுமாலை தீயுடன் சங்கமமானது.

உடல்நலக் குறைவினால் ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி மீகஹஜன்துரே ஞானரத்ன தேரர், கொழும்பு மருத்துவமனையில் மரணமானார்.

அவரது உடல் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டு, யோழ். கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளி மைதானத்தில் எரியூட்டப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் விகாராதிபதியின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருந்தது.

தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்ட 9 தமிழர்களின் நினைவிடம், முனியப்பர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில், திறந்த இடத்தில் சடலத்தை எரிப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இதற்கு எதிராக குரல் கொடுத்தன. அத்துடன், விகாராதிபதியின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் புதிய விகாரை அல்லது நினைவுச் சின்னம் அமைக்கப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் அச்சம் வெளியிட்டனர்.

இந்த நிலையில், 12 சட்டவாளர்கள் இணைந்து, முற்றவெளிப் பகுதியில் நடக்கவிருந்த விகாராதிபதியின் இறுதிச்சடங்கிற்கு தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

திறந்த வெளியில் மக்கள் கூடும் பகுதியில் உடலை எரிப்பதால், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இதற்கு யாழ். மாநகரசபையிடம் உரிய அனுமதி பெறப்படடவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த போது, இறுதிச்சடங்கிற்கு தடை விதிக்கப்பட்டால் குழப்பநிலை ஏற்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விகாராதிபதியின் உடலை முற்றவெளியில் எரிக்க யாழ். நீதிவான், அனுமதி அளித்தார்.

அதேவேளை நீதிமன்ற அனுமதி கிடைக்க முன்னரே, ஆரம்பித்த விகாராதிபதியின் இறுதியாத்திரை, முற்றவெளியில் முடிவடைந்தது. அங்கு மத வழிபாடுகள் இடம்பெற்றதை அடுத்து, மாலை 6 மணியளவில் சிதைக்கு தீமூட்டப்பட்டது.

விகாராதிபதியின் இறுதிக் கிரியைகளில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் உயர் மட்ட இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


1 comment:

  1. I can't understand some people, fighting for a person even after his death. Not let the funaral to happen.

    ReplyDelete

Powered by Blogger.