Header Ads



"இருக்கிறவன் ஒழுங்காக இருந்தால், சிரைக்கிறவன் ஒழுங்காக சிரைப்பான்"

எல்லாவற்றுக்கும் குற்றம் சொல்ல நான் தயாராக இல்லை. தமிழ் தலைமைகள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்த நேற்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

கடந்த வருடம் சொன்னார்கள் தீர்வு வரும் என்று. பின்னர் இந்த வருடம் தீர்வு வரும் என்றார்கள். ஆனால் தீர்வு வரவேயில்லை. ஆனால் நாங்கள் அப்படி சொல்லி மக்களை ஏமாற்றவில்லை. நடக்கக் கூடியவற்றையே சொல்கிறோம்.

மேலும் எடுத்ததற்கெல்லாம் மத்திய அரசாங்கத்தை அல்லது சிங்கள அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதற்கு நான் தயாராக இல்லை. காரணம் இருக்கிறவன் ஒழுங்காக இருந்தால் சிரைக்கிறவன் ஒழுங்காக சிரைப்பான்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் ஒழுங்காக இருந்தா ல் எல்லாமே ஒழுங்காக நடக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் செய்தார்கள். அவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள், ஊடகங்கள் என எல்லோரும் பின்னுக்கு நின்றார்கள். ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

ஆனால் நடந்தது என்ன? எதற்காக அந்த போராட்டம் தோல்வியடைந்தது? வடக்கில் மாகாண சபை உறுப்பினர்கள், மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தனை பேர் இருந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது? இது சிறீலங்கா அரசின் பிழையா? எனவே தான் சொல்கிறேன் இருக்கிறவன் ஒழுங்காக இருந்தால் சிரைக்கிறவன் ஒழுங்காக சிரைப்பான்.

மேலும் வட மாகாணசபை என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால் 3 வருடங்களில் மாகாணத்தில் தேனும், பாலும் ஓடியிருக்கும். ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது? ஒன்றுமில்லை.

இந்திய பிரதமர் மோடிக்கு வடமாகாண மோடி ஒரு கடிதம் எழுதினார். டக்ளஸ் தேவானந்தா கேட்டதற்காக வீடு கொடுத்தீர்கள், சைக்கிள் கொடுத்தீர்கள் எங்களுக்கு அதை விட கூட வீடுகளை, சைக்கிள்களை தாருங்கள் என்று கேட்டா கடிதம் எழுதினார். இல்லை பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனது குருவின் சிஸ்யர்கள் இருவருக்கு பிணை வழங்க கேட்டு கடிதம் எழுதினார் என்றார்.

No comments

Powered by Blogger.