Header Ads



அரசியல் வேறு, நட்பு வேறு - சம்பந்தனிடம் கூறிய மஹிந்த


"அரசியலில் நமக்கிடையே கருத்து முரண்பாடுகள், மாற்றுக் கொள்கைகள் இருக்கலாம். ஆனால், அதற்கப்பால் நட்பையும் மரியாதையையும் நான் உங்கள் மீது வைத்துள்ளேன். அதனால்தான் வைத்தியசாலையில் உங்களைப் பார்க்கமுடியாது என அனுமதி மறுக்கப்பட்டபோதும், உங்களை நேரடியாகவே பார்த்துவிட்டுப் போகவந்தேன். உங்களைப்போன்ற தலைவர்கள் தீவிர அரசியலில் இருக்கவேண்டுமென்பதை எப்போதும் உணர்பவன் நான்.''

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிடம் நேரில் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

சுகவீனமுற்று கொழும்பு நவலோக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை நேற்றுக் காலை பார்வையிட்டு சுகம் விசாரிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தனது புதல்வர் நாமல் எம்.பியுடன் வைத்தியசாலைக்குச் சென்ற மஹிந்த பலதும் பத்தும் சம்பந்தனுடன் பேசியதாகத் தெரியவந்தது.

"உடம்பை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். நான் தீவிர அரசியலில் இருந்தாலும் உடற்பயிற்சி, ஓய்வு என என் உடம்பையும் கவனித்துக் கொள்கிறேன். நீங்களும் சற்று ஓய்வெடுத்து அரசியல் வேலைகளையும் பாருங்கள். உங்களைப்போன்ற மிதவாதத் தலைவர்கள் நம் நாட்டில் இருக்கவேண்டும்.

உங்களுடன் தொலைபேசியில் உரையாட முயன்றேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அதனால்தான் நேரடியாகவே வந்தேன். இங்கு அரசியல் குறித்து நான் பேச விரும்பவில்லை. அது எமக்கு அப்பாற்பட்டது. நட்பு வேறு அரசியல் வேறு.

நீங்கள் சுகமடைந்த பின்னர் மீண்டும் ஒரு தடவை ஆறுதலாக சந்திப்போம்'' என்றும் கூறியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ. வைத்தியசாலைக்கு நேரடியாக வருகைதந்து பார்வையிட்டமைக்காக மஹிந்தவுக்கு நன்றியைத் தெரிவித்த சம்பந்தன், வைத்தியசாலையிலிருந்து குணமுடன் வெளியேறி கொழும்பிலுள்ள தனது இல்லத்துக்கு நேற்றுப் பகல் சென்றார்.

1 comment:

  1. அரசியல் வேறு நட்பு வேறு - அதே போல்
    கொள்ளை வேறு கொலைகள் வேறு - அதே போல்
    ஆள் கடத்தல்களும் வேறு ஆள்மாறாட்டங்களும் வேறு - அதே போல்
    தோல்வியை தடுக்க ஜில் மாட் பண்ணுவதும் வேறு தோற்றால் ஜீரணிக்க முடியாமல் உளறுவதும் வேறு - அதே போல்
    யாருடைய காலில் விழுந்தாவது ஆட்சியை கைப்பற்ற அலைவதும் வேறு ..........

    ReplyDelete

Powered by Blogger.